முகம்மது சொன்னதென்ன

முகம்மது சொன்னதென்ன?-நாம்
தினம்தினம் செய்வதென்ன?
சுகமென வாழ்வினிலே -நாம்
மறுமையை ஏன்மறந்தோம்?...

வணக்கத்தை சொல்லித்தந்தார் -நல்
லிணக்கத்தை சொல்லித்தந்தார்
பணக்கத்தை தேடித்தேடி -நாம்
பிணக்கத்தை கூட்டலாமோ?

இருமனம் இணைவதுதான்-நல்
திருமணம் என்றிருந்தும்
பெரும்பணம் தேடிகூடும் -நம்
சிறுமையின் பேருமென்ன?!

மற்றவர் இறைபழித்தல் -தீன்
கற்றவர் முறையுமில்லை!
பெற்றவர் மனமுடைத்தால்-நீ
பெற்றிடல் நரகமென்றார்!

எண்ணத்தை உயர்த்துஎன்றார்-மது
கிண்ணங்கள் உடைத்துவென்றார்
திண்ணமாய் நன்மைசெய்வார்-ஒடு
வண்ணமே சேர்கஎன்றார்

தீமைகள் அழிந்திடவும் -நல்
வாய்மையும் திகழ்ந்திடவும்
தூய்மையை சொல்லித்தந்தார் -அவர்
நேர்மையை சொல்லித்தந்தார்

அறிவுகள் கோடிகோடி-நிதம்
செறிவுடன் அள்ளித்தந்தார்
இறைவனைக் காட்டித்தந்தார் -அவன்
மறையையும் ஊட்டித்தந்தார்

சாதியை சொல்லவில்லை -அவர்
நீதியை சொல்லிசென்றார்
பாதியைத் தள்ளிவைத்தோம்! -அதன்
மீதியைக் கொள்ளிவைத்தோம்!

எழுதியவர் : அபி (14-Oct-14, 11:04 am)
பார்வை : 597

மேலே