சித்திரத்தில் பதியாத இரகசிய இரத்தினம் - இராஜ்குமார்
சித்திரத்தில் பதியாத இரகசிய இரத்தினம்
=======================================
நெருப்பை எடுத்து
நிழலாய் வைத்தேன்
அனலில் பறந்தது
அவளின் நினைவு ..!
புது உலகை படைத்து
நிலவோடு இணைத்து
நள்ளிரவில் கொடுத்தேன்
அவளுக்குப் பரிசாய் ..!
நாழிகை நகர்த்தி
மாளிகை அமைத்தேன்
ஒப்பனை உடுத்தாத
ஓர் ஒளியாய் அவள் ..!
புருவ நுனிதனில்
புறப்படும் வீச்சிலே
விண்மீனை விற்றவள்
புன்னகையில் புதைக்கிறாள் ..!
உயிரான உணர்வினை
உருவி எறிந்தாலும்
திமிரான நினைவினால்
அருவியாய் குதிக்கிறாள் ..!
தாழம் பூக்களில்
தடுமாறிய புதுவாசம்
நிறைந்து வழியும்
தென்றலின் தேகம் அவள் ..!
பறவைகளே பறக்காத
தனித்தீவில் மிரளாமல்
துணிகரமாய் நுழைந்த
வசீகர வதனம் அவள் ..
இரசனையை அடுக்கி
உருவான உலகழகு
சித்திரத்தில் பதியாத
இரகசிய இரத்தினம் அவள் ...!
ஆற்றை எடுத்து
அழகாய் மடித்து
அவளிடம் கொடுத்து
அனுமதி கேட்பேன்
அவளழகை இரசிக்க ...!
- இராஜ்குமார்