மீண்டும் படிக்கவும் - Mano Red

ஓட்டமும்
நடையுமாக
நனைந்து கொண்டே
நடுவீதியில்
நடுங்கி வந்தபோது
நீரில் கிடந்தது அது..!!
அது என்னவாக இருக்கும்.?
அதில் என்ன இருக்கும்.,?
கசங்கி கலங்கிய நிலையில்
மழைநீரிலும்
மனம் திறந்து
கண்ணீர் விட துடித்தது அது..!!
என்னிடம் எதோ சொல்ல
ஏங்கித் தவித்தது,
எதனாலோ என்னவோ
எனக்குள்ளும் ஒரு ஆசை
என்ன அது சொல்ல போகிறது..??
மீண்டும் அதை
மழை நனைக்காதவாறு
நான் நனைய துணிந்து
அதை கையோடு
அணைத்துக் கொண்டேன்..!!
உள்ளங்கை சூட்டில்
உண்மை சொன்னது அது,
காதலியின் கையினால்
கசக்கப்பட்டவன்,
கடமை முடிந்ததும்
கழிக்கப்பட்டவன் நான் என்றது..!!
பிரித்துப் படித்ததில்
தெரிந்தது,
புரியாமல்
பிரிந்தவளுக்கு வந்த
காதல் கடிதம் அது..!!
மழைநீர் வடிந்து முடிகையில்
கடிதத்தின்
கண்ணீர் மழை புரிந்தது..!!