பட்டாசு பேசுகிறேன்

பட்டாசு பேசுகிறேன்
பட்டாசின் முதல் பகைவன்
பட்டாசு பேசுகிறேன்
எனக்கே எனை நினைத்தால்
வெட்கமாயிருக்கிறது
எனைக்கண்டு பிடித்தவனை
செம்மையாய் மொத்தவேண்டும்.
என்னால் எரிந்த
குடிசைகள் எத்தனையோ
என்னால் மடிந்தவர்களின்
எண்ணிக்கை தெரியாது
என்னால் பார்வையைப் பறிகொடுத்தோர் செவித்திறனை இழந்தோர்
காயமுற்றுப் பலமாதம்
சிகிச்சை பெற்றும்
உடல் ஊனமுற்றோர்
ஏராளம் ஏராளம்.
இதற்கெல்லாம் சத்தியமாய்
நான் பொறுப்பு இல்லை
மழலையரும் விடலையரும்
எனைவெடிக்க ஆசைகொண்டால்
மன்னித்து விடுவேன் நான்
வளர்ந்தவரும் என்மீது
மோகம் கொண்டலைவதுதான்
எனக்கும் புரியவில்லை.
பிஞ்சுப் பிள்ளைகள்
கவர்ச்சியில் மயங்கினால்
அறியாமை என்றிடலாம்
படித்தவரும் எனைவெடித்து
பரவசம் அடைவதுதான்
என்னை நினைத்தே எனை
வெட்கப்பட வைக்கிறது.
நரகாசுரன் மறைந்த நாளைக்
கொண்டாடி மகிழவா
எனைவெடித்து ரசிக்கின்றார்?
கொடியவன் ஒழிந்ததை
மறக்கத் தெரியாமல்
கொண்டாட்டம் போடுவதா?
அழிந்தவனை அழிப்பதாய்
உமக்கே பெருங்கேட்டை
ஏன்தேடி அலைகின்றீர்?
எழுஸ்வரங்களில் எந்த ஸ்வரம்
நான் எழுப்பும் பலத்த ஓசையில்
இன்னிசையாய்த் தெரிகிறது?
உலகெங்கும் எங்காவது
ஒவ்வொரு நொடியும்
வெடித்துக்கொண்டே இருப்பேன்
வெடிப்பது நானென்றாலும்
வெடிக்க வைப்பது நீங்களே
நான்வெடித்துச் சிதறினாலும்
ஃபினிக்ஸ் பறவை போல்
உயிர்த்தெழச் செய்கிறீரே!
என்னை வெடித்து
உமைச்சுற்றி வாழும்
மழலைச் செல்வங்கள்
நோயாளிகள் முதியோர்
வீட்டு விலங்குகளையும்
அச்சுறுத்தி மகிழ்வது
கொண்டாட்டம் எனும் பெயரில்
நடக்கின்ற வன்முறை வெறியாட்டம்.
எனை வெடித்து இன்புறும்
நீங்கள் தான் இன்று
விண்வெளிக் காலத்தின்
அசகாய நரகாசுரர்கள்.
அறிவியல் படைப்பெல்லாம்
இயற்கையை அழிப்பதற்கா?
தீமைக்கு எனை உசுப்பிவிட்டு
என்னையும் நரகாசுரனாக்கி
இஷ்டப்படி ஆட்டிவைத்து
நிகழ்காலம் எதிர்காலம்
இரண்டையும் அழிப்போரை
எந்தக் கடவுள் தான்
காப்பாற்ற முன்வருவார்?