அவனாவது மகிழ்ந்திருக்கட்டும்

குளிருக்கு பயந்து
குடிபெயர்ந்த மேகம்
மழையாய் உருமாற

பெய்த மழையோ
பெரு வெள்ளமாகி
ஊரையே மூழ்கடித்ததும்

தெருவோடு ஊரும்
பயிரோடு வயலும்
பாழாய்ப் போனதும்

வழியற்று வாடும்
ஏழையின் வயிற்றில்
மண்ணள்ளிப் போட்டதும்

மழையின் சிறுதுளி
நதியாகிக் கடலாகி
ஒன்று படுவதுபோல்

ஒற்றுமையாய் வாழக்
கற்று கொடுத்து—ஊரையே
சிதறிட செய்ததும் முறையோ?

வெள்ளப் பெருக்கால
வெளியேறி ஊர்மக்கள்
வேதனையில் மூழ்கிக்கிடக்க

மழையில் விளையாடி
மகிழும் சிறுவனிடம்—மகிழ்வின்
காரணம் கேட்டேன்

மழை மட்டும் தான்
என்னை தொட்டு பேசுமென்றான்
ஒன்றும் சொல்லாதீர்கள்
அவனாவது மகிழ்ந்திருக்கட்டும்.

எழுதியவர் : கோ.கணபதி (22-Oct-14, 2:53 pm)
பார்வை : 61

மேலே