நந்நாள் கண்டேன்

கடை வீதி அழைத்து போவாயோ?
நான் கேட்பதை வாங்கி தருவாயோ?
ஜாக்கி சான் படம் காண்போமோ?
புது ரஜினி படம் சேர்ந்து பார்ப்போமோ?

எந்த வண்ணத்தில், என்ன ஆடை?
எனக்கு வாங்கி வந்திருப்பாய்?
ஜுஷ்பெர்ரியா? அல்வாவா?
என்ன வாங்கி வந்திருப்பாய்?

கோடு போடாத
1/2 குயர் நோட்டு நாலு
வாங்கி வந்திருப்பாயோ?

சந்தையில் புதிதாய்
அறிமுகமான சென்ட் பேனா
கொண்டு வந்திருப்பாயோ?

உன் வயிற்றை சுற்றி
கைகள் இட்டு
சைக்கிள் ஏறிச் செல்வேனோ?

உன்னை அணைத்து கொண்டு
விட்டு போன கதைகள்
எல்லாம் கேட்பேனோ?

மறுநாள் காலை
கோழி குழம்பில்
திளைக்க போவதை
முன்னாளில் மூக்கு ருசி காணுமே!

முட்களை நீக்கி
மீனை ஊட்டுகையில்
உன் கைவிரல் வாசம்
முகம் கேட்குமே!

ரேங்க் கார்டு -இல் எத்தனை முறை
தான் அம்மாவின் கையெழுத்தே!
பெயிலோ! பாஸோ!
கையெழுத்திடு. காட்டி மகிழ்வேன்.

கம்பெனி கடிகாரம் என்பாய்!
20 ரூபாய்க்கு தான் வாங்கி வந்திருப்பாய்!
இருந்தும், அதை கைகளில் கட்டி கொண்டு
குளிப்பேன், ஓடுவேன்.
ஓடி கொண்டே மணி பார்ப்பேன்.
கட்டிய கைகளில் மட்டும் தான்
தலை வாருவேன். தலை கோதுவேன்.
பொருட்களை எடுப்பேன்.
செய்கையை காட்டுவேன்.
புத்தாடையும்,
காதல் வார்த்தையும்,
அரசாங்க விடுமுறையும்,
தராத சந்தோஷம் அது!

உன் முகம் பார்க்க
வாசற்படியிலே
இரவு முழுக்க காத்திருப்பேன்.
நீ வர 5 ஆகும்
என்று தெரிந்தும்
9 மணி முதலே
எதிர்பார்த்திருப்பேன்.

பர பரவென
குளித்து கொண்டிருந்தாலும்
குக்கர் சத்தம் காதை பிளந்தாலும்
பக்கத்து வீட்டு லேன்ட் லைன்
கீங் கீங் சத்தம் போட்டதும்
அப்பாவாய் இருக்க மனம் ஏங்கும்.

-(தொடர முடியவில்லை)

எழுதியவர் : SATHYATHITHAN.A (28-Oct-14, 6:36 pm)
பார்வை : 524

மேலே