கண்ணாடியும் கவிதையும் -ரகு
எப்போது
பழகினேனென்றுத்
தெரியவில்லை
அடிக்கடிக்
கண்ணாடி பார்ப்பது
வழக்கமாகிவிட்டது
தலைசீவுவதைப்போலவே
என்னுள் இமைதிறந்தே
இருக்கும் கண்ணாடியில்
இன்றென்னவோ அரிதாய்
முகம் பிரதிபலித்தபடி இருந்தது
சிருங்கவிதையொன்று
யாருக்குத்தெரியும்
சிலாகித்துயிர்க்குங் கவிதையும்
காலச்சுழற்சியில்
கண்ணாடியைப்போலவே
வழக்கப்பட்டுவிடலாம் என்னுள்
இப்போதுகூட
பிரம்மிப்பும்
பேராச்சர்யமுமாய்
உயிருள்
வளர்ந்து நிற்கிறது
ஒரு ஆளுயரக்கவிதை!