நெஞ்சில் நீங்காதவளுக்காக
எம்.எப்.எம். றிகாஸ்
மிருதுவான மழைத்தூறல்களில் நனைந்திருந்த வீதியில் சன நடமாட்டம் சற்று அதிகரிக்க ஆரம்பித்தது. கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தேன். இன்று விடுமுறைக்காக வீடு நோக்கி சென்று கொண் டிருக்கிறேன். காலை ஆறு மணிக்கு மட்டக்களப்புக்கான ரயில் இங்கிருந்து புறப்படவிருக்கிறது. இதில் புறப்பட்டால்தான் மாலை மூன்று மணிக்கெல்லாம் மட்டக்களப்பை அடைய முடியும்.
ரயில் நிலையத்தை அடைந்ததும் கூடியிருந்த சனச்சிக்கலை விலத்தி டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்றுகொண் டிருந்த ஐந்தாறு பேருக்கு பின்னால் நானும் நின்றுகொண்டேன். அழகான பார்பிடோல் குழந்தை ஒன்று அம்மாவின் தோளில் சாய்ந்தவாறு பின்னால் நின்று கொண்டிருந்த என்னைப்பார்த்து பலகோடி நட்சத்திரங்களின் ஒட்டுமொத்த சிமிட்டல்களையும் ஒன்று திரட்டி புன்னகையாய் என்மேல் எறிந்தது. பதிலுக்கு என்னுடைய உதடுகளும் புன்னகைத்து அவளுடைய புன்னகையில் தோற்றுப்போனது.
ஒருவாறாக இரண்டாம் வகுப்புக்கு டிக்கட் ஒன்றை வாங்கிக்கொண்டு ப்ளாட்போரத்துக்கு சென்றேன். “பயணிகள் கவனத்திற்கு...” சிங்களத்திலும் தமிழிலும் ஒரு பெண் ப்ளாட்போரம் முழுவதும் சேதி பரப்பிக்கொண்டிருந்தாள். காலையில் இன்னும் சூடு பிடிக்காத ரயில் நிலையத்தின் பெட்டிக்கடை ஒன்றில் மினரல் வாட்டர் போத்தல் ஒன்றை வாங்கி தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையின் இடுக்கில் சொருகிக்கொண்டு கூரையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த பெரிய கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் ஐந்துமணி நாற்பத்தைந்து நிமிடம். ரயில் புறப்பட சமயம் இருக்கிறது.
அருகில் இருந்த கொங்ரீட் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் எழுத்துக்களின் பிழைகளை ரசித்துக்கொண்டிருந்தேன். தலையணையை கையில் சுருட்டிப்பிடித்துக்கொண்டு மகளைத்தாங்கியவாறு நடக்கமுயலும் பாட்டி, வாங்குவதற்கு யாருமில்லாமல் ஏக்கப்பார்வையுடன் புத்தகக்கட்டுக்களை சுமந்த சிறுவன், லொத்தர் சீட்டில் அதிஸ்டஜோதிடம் சொல்லும் முரட்டு ஆசாமி, வாயில் வெற்றிலையின் ஈரம் வழிய சுருட்டிக்கட்டிய சாரத்துடன் நேற்றைய குடி வெறியை இன்னும் கண்களில் கக்கியவாறு ஒரு பரதேசி, படுத்துக்கொண்டிருக்கும் நாயைப்பார்த்து பயந்து அம்மாவின் புடவைக்குள் தலைபுதைக்கும் சிறுமி, நாகரிகத்தை மெய்சிலிர்க்க வைக்கும் குறையாடை யுவதி இவ்வாறாக உலக மேடையின் பல வேடங்கள் என் கண் முன் உலா வந்துகொண்டிருந்ததை வெகுவாக ரசித்துக்கொண்டிருந்தேன்.
மட்டக்களப்புக்கான கடுகதி ரயில் மெதுவாக ஊர்ந்து வந்து ப்ளாட்போரத்தில் அமர்ந்து கொண்டது. அமைதியாய் இருந்த பயணிகள் ஆரவாரத்துடன் ரயிலுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள். நானும் ஒரு சிறு அவசரத்துடன் பையை தூக்கி தோளில் சுமந்துகொண்டு ரயில் படிகளை ஊன்றி ஏறி வெறுமையாக இருந்த இருக்கை ஒன்றில் சௌகரியமாக ஜன்னலில் தலையை சாத்தியவாறு அமர்ந்து கொண்டேன்.
என்னுடைய உள்ளத்தில் ஆனந்தத்தின் ஒரு சாரல் வெறுமையாய் காய்ந்துபோயிருந்த வாசல்
வழியே மெல்லமாய் வீச ஆரம்பித்தது. டிக்கட் கவுன்டரில் கண் ட பார்பிடோல் குழந்தையின்
பூரிப்பு எனது உள்ளத்தையும் தொட்டு உதடுகளை உண்மையாய் புன்னகைக்கவைத்தது. இந்த பூரிப்புக்கும் புன்னகைக்கும் பின்னால் என்றோ ஒரு நாள் இந்த புறக்கோட்டை புகையிரத
நிலையத்தில் நான் விட்டுச்சென்ற பசுமையான எனக்கு புனிதமான நினைவுகளின் எதிரொலிகள்
கேட்க தொடங்கியது.
“கொஞ்சம் இந்த பேர்க் க மேல வைச்சுவிடுறிங்களா பிளீஸ்?”
என் பின்னால் ஒரு பெண்ணின் குரல். ஜன்னலில் சாய்ந்திருந்த தலையை சட்டென்று
திருப்பினேன். சுடிதாரில் ஒரு பூக்காடு எங்கோ படித்த ஹைக்கூ வரிகள் ஞாபகத்துக்கு வந்தது.
பேரழகி என்றுசொல்லுமளவுக்கு இல்லை என்றாலும் என் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு
அழகுதான். தென்றல் வாடையின் மெல்லிய சாரல் என் இதயத்தை தொட்டுச்சென்றது போல் ஒரு உணர்வு பார்த்தவுடன் காதல் என்று சொல்லுமளவு இல்லை. இருந்தாலும் கொஞ்சம் அசடு
வழிந்திருக்ககூடாது.
வெளிர் நிற பளிச்சென்ற செதுக்கல் முகம், எடை இல்லை என்று சொல்லுமளவுக்கு பருமனில்
பற்றாக்குறைதான், அளவான உயரம், நெற்றியில் தவழும் கருண் ட நீளமான கூந்தல்,
தயக்கமில்லாமல் நோக் கும் கருவிழிகள், நகைகள் மிதமற்ற எளிமை, அவளுக்கு எடுப்பாய்
சிவப்பு நிற நீளக்கை சுடிதார் அணிந்திருந்தாள்.
அவளுடைய பையை வாங்கி உயரத்தில் பைகள் போடுவதற்காக இருந் த இடத்தில் பத்திரமாக
வைத்தேன்.
“ரொம்ப தங்ஸ்” இயல்பான அவளுடைய வார்த்தை.
“பரவால்ல” நானும் பேச வேண்டும் என்பதற்காக ஒரு வார்த்தை.
என் முன்னால் இருந்த இருக்கையில் உட்கார்ந்த கொண்டு அவளுடைய கைப்பைக்குள் இருந்து
தொலைபேசியை எடுத்து அழுத்தியவாறு வெண்நிறக்கற்கள் தொங்கிக்கொண்டிருந்த காதுகளுடன்
அணைத்துக்கொண்டாள்.
“ஹலோ... சித்தி நான் இப்போ ரயின்ல இருக்கன் இன்னும் கொஞ்ச நேரத்துல ரயின்
எடுப்பாங்க... சரி சித்தி... அம்மாட்ட சொல்லுங்க... சரி சரி நான் ஒன்டும் சின்னப்பிள்ளை இல்ல
சித்தி... வைக்கவா?..” எனக்கு கேட்ககூடாது என் னும்மளவுக்கு அமைதியான குரலில் பேசினால்.
நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு நேரமும் நாணம் கவ்விய அவளது
தரை நோக்கிய பார் வை எனது கண்களைக்குறுக்கிட்டது. சற்றே என் பார்வைகளை
தாழ்த்திக்கொண்டேன். ஆனால் நொடிகளைக்கூட தாண்டாத அந்த பார்வையின் மோதலில்
மிருதுவான புன்னகையுடன் என்னை நிமிர் ந்து பார்த்தாள். பதிலுக்கு நானும் உதடுகளை
மெதுவாக விரித்து சிறு புன்னகையுடன்...
“எங்க போறிங்க?”
“பட்றிகொலோ”
“தனியவா போறிங்க?”
“நீங்க கூட தனியத்தான் போறிங்க” மெதுவாக சிரித்துக்கொண்டாள்.
இயல்பாக அவள் கொடுத்த பதில்வார்த்தையில் ஒழிந்திருந்த ஆழமான விடை எனது அகராதியில்
பெண் என்ற வார்த்தைக்கு இருந்த விளக்கத்தை மாற்றி எழுதியது.
“ரொம்ப தெளிவா பேசுறிங்க” சிரித்தவாறே சொன்னேன். அழகிய புன்னகையை மட்டும் பதிலாய்
அழித்தாள்.
ரயில் மெதுவாக ஊர்ந் து சென்று வேகம்கொண்டு புறப்பட்டது. இனி பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல் இருவருக்குள்ளும் மௌனவரட்சி ஏற்பட்டது. அவளது விரல் நுனிகள் அவள்
வைத்திருந்த கைப்பையின் பட்டியை சுருட்டியவாறு நடனமாடியது. மீ ண்டும் அவளது குரல்
என்னை நோக்கியது.
“உங்கட பேர் என்ன?”
“சுரேஸ், நானும் மட்க்களப்புதான் போறன், சொந் த இடம் மட்டக்களப்புதான். உங்கட நேம்?”
“சங்கீதா, சொந்த இடம் வவுனியா, இப்போ சித்தி வீட்டுல விஷேசம் அதுக்குதான் போயிட்டிருக்கன்”
“சித்தி பேர் என்ன?”
“உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாயப்பில்லை ரேவதி டீச்சர், போன வருசம்தான் வவுனியாவுல
இருந்து ரான்ஸ்பர் எடுத்திட்டு பட்றிகொலோ வந்தாங்க, மாமா கூட அங்க இரிகேஷன் டிபார்ட்மென்ட்லதான் வேர் க் பண்ணுறார் பேரு கமலநாதன்”
“ம்ஹ்... தெரியாது. ரேவதி டீச்சர் எந்த ஸ்கூல்?”
“பட்றிகொலோ ஆர்.கே.எம்”
“சில வேளை பார்த்திருப்பன் ஆனா யாரென்டு தெரியாம இருக்கும்”
இப்போது அவளுக்கு என்மீது சிறு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து பேசினாள்.
“நீங்க என்ன பண்ணுறீங்க சுரேஸ்?”
“இப்போ மொரட்டுவை யூனிவர்சிட்டில என்ஜினியரிங். நீங்க...?”
“சொந்த இடம் வவுனியா, இப்போ நான் பம்பலபிட்டில மாமா வீட்டுல இருக்கன், எச்.என்.டி.எ
நெக்ஸ்ட் இயர் முடிஞ்சிடும்”
தொடர்ச்சியான உரையாடலின் பின்னர் இனியும் பேச வார்த்தைகள் இல்லை என்ற நிலையில்
இருவரையும் மௌனம் கவ்விக்கொண்டது. ஜன்னலின் வழியே தலையை விட்டு மரங்களின்
நகர்வில் பௌதீகவியல் தத்துவங்களை பிரயோகித்தவாறு இயற்கையை ரசித்துக் கொண்டு
வந்தேன். இடைத்தங்கல் நிலையத்தில் ரயிலில் ஏறிக்கொண்ட கடலை வியாபரிகளின்
போட்டிக்கூச்சல் அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கைகளிள் பின்னியவாறு
மடியில் கிடந்த பையை திறந்து அதற்குள் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து சுவாரஸ்யமாக
படிக்க ஆரம்பித்துவிட்டாள். ஜெயகாந்தன் எழுதிய சிலநேரங்களில் சிலமனிதர்கள் நாவல் அது.
எனக்குள் ஒரு பூரிப்பு அவளையும் புத்தகத்தையும் பார்த்து வியந்துவிட்டேன்.
மனித வேகத்தை விஞ்சிய இந்த இன்ரநெட் யுகத்திலும் நாவல் படிக்குமளவு இளம் பெண்ணா?
அதிசயமாய் இருந்தது. வாழ்ந்து களைத்து உலர்ந்த சில பழுத்த மனிதர்களால்தான் இன்னும்
இந்த நாவல்களும், கதைகளும் புத்தக வடிவில் உயிருடன் இருக்கின்றன என்ற எனது
எண்ணத்தில் பெரிய தடுமாற்றத்தை அவள் ஏற்படுத்திவிட்டாள். வெகுவாக மனதில் அவளைப் பாராட்டிக்கொண்டேன். புத்தகங்கள் மீது எனக்குள் இருக்கும் ஈர்ப்பினால் இப்போது அவள் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டது. என் எண்ணங்கள் தூரத்தில் ரயிலை துரத்திக்கொண்டிருக்கும் மலை உச்சியில் ஒரு அரண்மனையை கட் டி என்னை ராஜாவாக்கி அவளை ராணியாக்கி புலவர்களின் பாட்டுக்கு பொற்கிழியும் வழங்கவைத்தது.
ரயில் பொல்கஹவெல இடைத்தங்கல் நிலையத்தை அடைந்தது. என்னுடைய தொலைபேசியில்
நேரத்தைப்பார்த்தேன் நேரம் காலை எட்டு மணியாகிஇருந்தது. லேசான பசியை என் வயிறு
உணர்த்தியது. சாப்பிடுவதற்காக இருக்கையை விட்டு எழுந்தவாறு...
“சங்கீதா ஏதாவது உங்களுக்கு சாப்பிட வாங்கி வரவா?” புத்தகத்தில் லயித்திருந்த அவளது
கவனத்தை என்னை நோக்கி திருப்பினேன்.
“இல்ல பரவால்ல வேணாம்... நீங்க சாப்பிட்டு வாங்க” ஒரு வித தயக்கம் கலந்த பார்வையுடன்
வார்த்தைகள் வெளியாகின.
“டோன்ட் வொறி நீங்களே காசு தாங்க வாங்கிவாரன்.”
புன்னகையுடன் “குடிக்குறத்துக்கு ஏதாவது சொப்ட்ரிங்” என்றவாறு காசை நீட்டிவிட்டு மீண்டும்;
நாவலுடன் ஐக்கியமாகிவிட்டாள்.
ப்ளாட்போரத்துக்கு இறங்கி அருகில் இருந்த கடையில் வடை ஒன்றை எடுத்து கடித்துவிட்டு பால்
காபி ஒன்றையும் வாங்கி அருந்தினேன். அவசரத் திலும் அவளுடைய எண்ணத்திலும் காபி வாயில்
சூடு போட்டு விட்டது. அவளுக்காக மைலோ பக்கற் ஒன்றை வாங்கிக்கொண்டு ரயிலுக்குள்
சென்றேன். அதே சமயம் ரயிலும் புறப்பட ஆரம்பித்தது. சங்கீதா ஜன்னலின் வழியே எட்டிப்பார்தபடி சாய்திருந்தாள். என்னைத்தான் தேடியிருக்கவேண்டும். நான் இருக்கையின் அருகில் சென்றதும் புன்னகையுடன் வரவேற்றாள்.
“புக் படிச்சிட்டீங்களா?”
சிரித்துவிட்டு ஆம் என்ற சாயலில் தலையை ஆட்டியவாறு “சுரேஸ் உங் களுக்கும் புக்ஸ் படிக்க
பிடிக்குமா?”
“எனக்கு தழிழ் புக்ஸ்ல சுஜாதா, ஜெயகாந்தன் இவங்கட ஸ்டோரி ரொம்ப பிடிக்கும். இந்த
ஸ்டோரி கூட நான் படிச் சிருக்கன், ரொம்ப இன்டரெஸ்டிங் நிறைய விளக்கம் இருக்கு”
“ஓ.. மை குட்நெஸ்.. இந்தகாலத்துலயும் இப்படி ஒரு ஆளா? ஆச்சரியமா இருக்கு. சுஜாதா கூட
ஒரு என்ஜினியா்”
“என்னாலயும் உங்கள நம்ப முடியல. நாவல் எல்லாம் இப்போதய ஜெனரேசனுக்கு பொருந்துமான்னு தெரியாது அதுவும் இந்த நாவல் ஒரு பெண்ணை பற்றியது, இப்போதய கேர்ல்ஸ்க்கு சுத்தமா பொருந்தும்னு எதிர்பார்க்க முடியாது ஆனா நீங்க இன்டரெஸ்டா படிச்சிட் டு இருந்திங்க”
“சுரேஸ் என்ன பொறுத்தவரைக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை விட ஒரு புத்தகம் இன்டரெஸ்டா
இருக்கும், நீங்க என்ன சொல்றிங்க?” நான் இதுவரை பார்த்திராத ஒரு பெண்ணின் இயல்புகள். அவள் வார்த்தைகளிலும், ரசனைகளிலும் எனக்கு மிகவும் நெருக்கமானாள்.
“நிச்சயமா நான் உங்கட கருத்த ஏற்றுக்கொள்றன், என்ன மாதிரி புக்ஸ் உங்களுக்கு பிடிக்கும்?”
“சின்ன வயசுல அப்பா நிறைய புக்ஸ் கொண்டுவருவார் அப்போ எதுவுமே தெரியாது ஆனா
வாசிக்குறது பிடிக்கும், அப்போ இருந்து ஆரம்பிச்சது இன்னும் குறையல. தமிழ் புத்தகம் என்டால்
ஜெயகாந்தன், கல்கி, சுஜாதா இவங்கட புத்தகங்கள்ல ஒரு ஈர்ப்பு இருக்கு இங்லிஷ் புக்ஸ்ல டோல்ஸ்டோய், சேர்க்ஸ்ப் பியர் இவங்க எழுதின புக்ஸ் ரொம்ப பிடிக்கும்”
நிச்சயமாக என்னையும் விஞ்சும் அளவுக்கு அவளிடம் ஆர்வம் இருக்கிறது. அவள் மீது இனம்புரியாத மரியாதையை என்குள் ஏற்படுத்திக்கொண்டேன். அரசியல் தொட்டு சமூகவியல் வரை மகாத்மா காந்தி தொடங்கி விளாடிமிர்லெனின் வரை எங்களுடைய உரையாடல் தொடர்ந்தது. இருவரது வார்த்தைகளும் ரயிலின் வேகத்தையும் விஞ்சியது. நேரம் போவதையோ ரயில் ஓடுவதையோ உணர முடியவில்லை. தொடர்ந்த உரையாடலில் இருவருக்கும் இடையில் தொலைபேசி இலக்கங்களும் முகவரிகளும் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நட்பு உருவெடுத்தது உருப்பெருத்துக்கொண்டே போனது.
எங்களுடைய இந்த நட்பை ஜஸ்ட் ரயில் சினேகமாக முடித்துவிட என்னால் முடியவில்லை.
அவளுடன் பழகிய இந்த தருணங்கள் தொடர்ந்து என் வாழ்வின் தருணங்களாக தொடரவேண்டும். நான் அவளுடன் பழகிய இன்றைய நிமிடங்களில் ஏதோ ஒரு நிமிடம் என் மனதை நிச்சயமாக அவள் மீது காதல் வயப்படுத்தியிருக்க வேண்டும். சங்கீதா என் மனதில் இப்போது ஒரு நாதமாக இசைக்க ஆரம்பித்து விட்டாள். ஆம் நிச்சயமாக நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் எப்படி அவளிடம் சொல்வது?...
ரயில் சினேகிதனாய் என்னை ஏற்றுக்கொண்டவள் அவளது வாழ்கைப்பாதையில் கரம்பிடித்து
நடக்கும் துணையாய் ஏற்றுக்கொள்வாளா? எனது மனம் பதைபதைத்தது. அவசரப்பட்டு நல்ல
புரிந்துணர்வை உடைத் து விடுவேனோ என்கின்ற கவலை. ஆனால் அவளை இந்த ரயில்
நிமிடங்களிடம் விட்டுவிட்டு செல்ல எனக்கு துளியும் உடன்பாடில்லை.
இன்று வரை நான் கடந்த என் வாழ்கையில் நான் கண்ட புதுமைப்பெண், அவளைவிட வேறு
தெரிவு எனக்கு இருக்கவில்லை. அவளது நட்பு மட்டும் ஆயுள் முழுவதும் எனக்கு வேண்டும்.
இத்தனைக்கும் இவள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமே?... நிச்சயமாக அவளுக்கு என் மீது
ஈர்ப்பு இருக்கிறது. அதை பல முறை என்னால் தெளிவாகவே அவளுடைய வார்த்தைகளில்
உணர முடிந்தது. அவள் ஒரு பெண்தானே அவளுக்கென்ற நாணம் அவளை முதலில் என்னிடம்
காதலை சொல்லவிடாது. நான்தானே முதலில் அவளிடம் கேட்க வேண்டும். அவள் என்னைக்
கேட்கமாட்டாளா என்ற ஏக்கம் என்னை வாட்டியது. எப்படியும் கேட்டு விடவேண்டும் மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டேன்.
“சங்கீதா நீங்க யாரையாவது லவ் பண்ணுறிங்களா?” குவிந்திருந்த மௌனக் கோப்பைகளை
உடைத்து நான் பேச ஆரம்பித்தேன்.
புன்னகையாய் சிரித்தாள் “ஏன் கேக்குறீங்க? நான் லவ் பண்ணுறது நடக் குற காரியம் இல்ல, லவ்
பண்ணாலும் போராடி அதுவும் தோல்விலதான் முடியும் சுரேஸ்.”
“ஏன் அப்படி சொல்லுறீங்க?”
“என்னோட மனதோடத் தான் நான் போராட வேண்டி இருக்கும், சின்னவயசிலயே அப்பா
தவறிட்டார் என்ன வளர்க்குறதே இலட்சியமா அம் மா வாழ்ந்துட்டு இருக்கா, நான் லவ் பண்ணினா
அவங்கட வளர்ப்புதான் பிழன்னு நெனப்பாங்க, என்ன அனுமதிக்கவும் மாட்டாங்க. இது உங்க
இடத்துல இருந்து பார்க்கும் போது சின்ன விசயமா, நொண்டிச் சாட்டா இருக்கும் ஆனா எனக்கு
அப்படியில்ல”
“வீட்டுல புரோப்போஸ் ஏதும்?”
“ஒரு பொம்பல புள்ள இருந்தா பார்பாங்கதானே ஆனா இன்னும் புரோப் போஸ் வரைக்கும் போகல,
கொஞ்சம் லேட்டாகும். வீ ட்டுல யார காட்டுராங்களோ அவங்களதான் நான் மெறி பண்ணுவன்”
“ஏன் உங்கட மனசுக்கு யாரையும் புடிச்சிருந்தா?” என் காதலை அவளிடம் சோதிப்பதற்காக
கேட்டேன்.
“என்னோட கல்யாணத்த பொறுத்தவரைக்கும் எனக்கு இது அவசியமில் லாத கேள்வி சுரேஸ். என்
மனசுக்கு புடிக்குமா புடிக் காதா எங்கிறது கூட அவசிமில்லை” குரல் கம்மியிருந்தது.
அவள் மீது பரிதாபம் எற்பட்டது. இவ்வளவு வெகுளியாகவும் பக்குவமாகவும்
வளர்க்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய பதில்கள் எனக்கு அவள் மீதிருந்த காதலை குறைப்பதற்கு
மாற்றமாக மேலும் அதிகரிக்க செய்தது. எனது வார்த்தைகள் தாமதிக்கவில்லை.
“நான் உங்கள லவ்பண் ணுறன். உங்கட நட்பு எனக்கு காலம்பூராவேணும் சங்கீதா, ஐயம் இன்
லவ் வித் யு, ஐ வில் பி எ பெட்டர் ஹாப் டு யு”
நிச்சயமாக அவள் எனது இந்த வார்த்தைகளை எதிர்பார்த்திருக்க வேண்டும். அவளுடய
கண்களைப்பார்த்தேன். ஒட்டு மொத்த நாணத்தையும் உருண்டை திரட் டி என் மீது எறிந்தாள்.
கன்னங்கள் சிவந்தது, அவளது தொண்டைக்குழியில் ஒருவித இறுக்கம்... மெதுவாக முழுங்கிக் கொண்டாள். பயம் கவ்விக்கொண்ட அவளது பார் வையில் ஒரு தவிப்பை உணர்ந் தேன். எதிர் முனையில் எனது இதயம் வெடித்துவிடும்போல் பதை பதைத்தது. தலையை குனிந்து கொண்டாள். மௌன வெளியில் மூச்சுக்காற்றுக்கும் வரட்சி ஏற்பட்டது.
பல நிமிடங்களைக்கடந்த மௌனத்தின் மொத்த உருவம் இருவருக்கும் இடையில் தலைவிரித்தாடியது.
மெதுவாக நிமிர் ந்தாள்... அவளது கண்களில் நீர் க்குமிழிகள் உருண்டோட காத்திருந்தது. மௌன
கோப்பைகளை உடைத்து பேச ஆரம்பித்தாள்.
“சுரேஸ்...” மீண்டும் மௌனம்... அவளாள் பேச முடியவில்லை. அவளுடய வார்த்தைகளுக்காக ஏக்கத்துடன் பொறுமையாய் காத்திருந்தேன். ஒருவாராக சுதாகரித்துக்கொண்டாள்.
“சுரேஸ் நான் உங்கட மனசுல காதல ஏற்படுத்தினதுக்கு எக்ஸ்ரீ ம்லி சொறி... நான் உங்கள லவ்
பண்ண மாட்டன்.. பண் ணவும் கூடா.. என்னோட வாழ்கையில இல்லாத ஒன்ற நீங்க கேக் குறிங்க
என்னால தர முடியல..” ஒரு துளி நீர் அவளது கட்டுப்பாட்டையும் மீறி கன்னத்தை நனைத்தது.
“வாழ்கையில போராடித்தான் பாருங்களன்...” என்னால் அவளை கட்டாயப்படுத்த முடியவில்லை.
“நான் உங்க கூட பேசுனது பேசுறது எல்லாமே போராட்டம்தான்.. என்ட மனசோட போராடுறன்.
பிளீஸ் என்ன புரிஞ்சிக்கங்க. நான் உங்களுக்கு பொருத்தமில்லாதவள்.. சொறி சுரேஸ்”
மீண்டும் என்னால் அவளுடன் பேச முடியவில்லை. மனதில் ஒரு வலி ஆனால் அப்போது உணர
முடிவில்லை. ரயில் எனது கனவுகளை தகர்த்து எறிந்துவிட்டு மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தது.
எழுந்து மேலே வைத்திருந்த அவளது தோற்பையை எடுத்து அவளிடம் கொடுத்தேன் என்னை நிமிர் து பார்க்க முடியாதவளாய் நாணத்துடன் நகர்ந்தாள். நானும் அவளையே பார்த்தவாறு ரயிலை விட்டு இறங்கினேன். சங்கீதா விறுவிறு வென நடந்து டிக்கட்டை கவுன்டரில் காட் டிவிட்டு வெளியே இருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிப்புறப்பட் டாள். ஒரு முறை கூட அவள் என்னை திரும்பி பார்க்கவில்லை. பார்க்க கூடாது என்ற அவளுடைய எண்ணத்தில் அவளது மனதில் நான் நிரம்பி இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோசம்தான்.
எனது தொலைபேசி அழைத்தது... எடுத்து பார்த்தேன் ப்ரியாவிடம் இருந் து அழைப்பு. ப்ரியா என் மனைவி, ஒட்டுமொத்த காதலின் தற்போதய உறைவிடம். எனக்காகவே வாழும் எனது தேவதை,
எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு குட்டி தேவதையும் இருக்கிறாள்.
நினைவுகளில் இருந்து இப்போதுதான் சுய நினைவுக்கு வந்தேன். இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் எனக்கு இதே ரயிலில் நிகழ்ந்த சங்கீதாவின் நினைவுகளோடு என்னை சுமந்துவந்த ரயில் என்னை மட்டக்களப்பு ரயில் நிலைத்தில் இறக்கி விட்டிருந்தது.
தொலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தேன்...
“ஹலோ ப்ரியா... நான் இப்போ இங்க ஸ் டேசனுக்க வந்துட்டன் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு
வந்திடுவன்”
“கீதாதான் உங்கள விடாம அப்பா எப்ப வாறாங்கனு கேட்டுடே இருந்தாள் இப்பதான்
தூங்கிட்டாள். பயணம் எப்படி சீக்கிரமா வாங்க”
“இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுல இருப்பன்”செல்போனை வைத்தவிட்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.
சங்கீதாவை மறந்து ப்ரியாவை நான் கரம்பிடித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது எனது மண வாழ்கையில் சங்கீதாவின் ஞாபகங்கள் ஒரு நாளும் வந்ததில்லை ஆனால் ஒவ்வொரு ரயில் பயணமும் அவளுடைய ஞாபகங்களை எனக்கு மீட்டிக்கொண் டே இருக்கிறது. சங்கீதாவின் சந்திப்பின் பின்னர் எஞ்சிய எனது வெறுமையான நாட்கள் ஞாபகத்துக்கு வந்தது. ரயிலோடு பிரிந்து சென்ற ரயில் சினேகிதியை மீண்டும் சந்திக்க மாட்டேனா? அவளிடம் தொலைந்து போன எனது காதல் மீட்கப்படாதா? என்ற ஏக்கத்தில் உடைந்து போன மனதை ஒட்டக்கூட முடியாமல் தவித்த நாட்கள் அது. பலமுறை தொலைபேசியில் முயன்றும் நேரில் கொழும்பு சென்று அவள் கொடுத்த முகவரியில் தேடியும் பலனில்லை. அவளை சந்தித்து ஒரு வருடம் கழிந் து விட்டது. அவளுடைய
நினைவுகளும் என்னை விட்டு மெதுவாக பதங்கமாகிக்கொண் டிருந்தது.
அப்போதுதான் ஒரு கடிதம் சங்கீதா வவுனியா என்று மட்டும் போடப்பட் டிருந்தது. அவள் இப் போது வவுனியாவில் இருக்கிறாள் என்று தெரிந்தது. உள்ளத்தில் பேரதிர்சியுடன் அளவில்லாத மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி கடிதத்தை படிக்க ஆரம்பித்த சில வினாடிகளிலே பொசுங்கிப்போகும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
கடிதம் மூலம் அவள் என்னுடன் பேசினாள்...
“ப்ரிமானவனே உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை உன் நினைவுகளை விட்டு
விலகப்போவதும் இல்லை. ப்ரியமான தோழனாக நீ என்னை கடந்து சென்ற அந்த ரயில்
பயணத்தில் உன் கண்கள் மட்டுமல்ல என் கண் களும் உன்னை ஏதோ ஒரு எதிர்பார்ப்போடுதான்
பார்த்தன.. காரணம் கேட் காதே எனக்கே தெரியவில்லை ஏன் என்று...”
எனது கண்கள் ஒருவித பூரிப்பை எதிர்பார்த்தது. கடிதத்தை தொடர்ந்தேன்...
“உன்னை நினைத்து நான் பயம் கொண்டேன் என் உள்ளத்தை ஒரு சில மணி நேரத்தில்
மாற்றிவிட்டாயே என்று.. என்னை நானே ஏமாற்றிக்கொள்வதாய் உணர்கிறேன் ஆனாலும் நான்
அதற்காக வருத்தப்படவில்லை, ஏனென்றால் என் சூழ்நிலைகளில் உன் னை சிக்கித்தவிக்க விட
எனக்கு உடன்பாடில்லை. வாழ்கை என்றால் இத்தனை வேடிக்கையானதும் விசித்திரமானதும்
என்று உன்னோட பேசிப் பழகிய நிமிடங்கள்தான் எனக்கு உணர்த்தின. தோழனாய் வந்த நீ தோள்
சாய வேண்டும் என்றாய் நான் ஏன் உன்னை இப்படி மாற்றி விட்டேன் நான் செய்த தவறுதான்
என்ன? புரியவில்லை. என்னை மன்னித்து விடு. நண்பனே உன்னை நான் பிரியவில்லை ஆனால்
விலகிச் செல்கிறேன். உன்னை காயப்படுத்தவில்லை காலங்களைக் கடக்க வழி தேடுகிறேன்.
கேள்விகள் கேட்காதே நாளை மணமேடையில் கேள்விக்குறியாய் இல்லாமல் மணமகளாய் இருக்க
விரும்புகிறேன். நாளை காலையில் இருந்து தொடங்கப் போகின்ற எனது மணவாழ்வு உன்
நிளைவுகள் அற்றதாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். தயவு செய்து என்னை
உன் மனதில்கூட நாளைய எனது திருமணத்திற்காய் வாழ்த்திவிடாதே. தவிக்கிறேன்
உணர்விற்கும் உறவிற்கும் மத்தியில் நின்று. மறுபடியும் சொல்கிறேன் மறக்கவில்லை அந்த
பயணம் இன்னும் நகர்ந் து கொண்டுதான் இருக்கிறது அந்த ரயிலுடன் இனியும் தொடரும் என்ற
நம்பிக்கையுடன்.”
எனது கண்களில் நீர்த்துளிகள் நிரம்பியது, தொண்டை அடைத்தது...
“ஆயிரம் அரிவாள்கள் அறுத்து வீழ்தியபோதும்
தலை நிமிர மாட்டாள் நெல் மகள்” எங்கோ படித்த கவிதையின் ஞாபகம்.
இன்னும் தொடருகிறது என் ரயில் பயணம் என் நெஞ்சில் நீங்காதவளுக்காக.
...............................