விலைமாதுவின் சோகக் கனல்கள்

வாட்டிய வறுமையால்
வழுக்கி விழுந்தேன்
காமக்களத்தினில்...!
என்மனச்சாட்சி
நாட்டியமாட...!
பணநோட்டுகள்
சாமரம் செய்து
சமாதானமாக்கின...!

என் சோக கதை கேட்கும்
சந்தடியில்...!
என் சதைகளை மேய்ந்திட...!
பாய்ந்திட்டு
பாய் விரித்தனர்
பங்குதாரர்களாக...!

என் கற்பை
காவு கொடுத்து.....!
காமக்களியாட்டமாட...!
என் உடல் மேடையானதால்...!
என் ஒழுக்கம்
பாடையாகிப் போனது...!

என் அரும்புகளின்
பசி களைய...!
என் ஆடைகளை களைந்தேன்...!
எனை ஈன்றெடுத்த பிறவிகளுக்கு
பிணி களைய...!
பிணந்தின்னிக் கழுகுகளுக்கு
இரையானேன்...!

கட்டியவன் கைவிட்டதால்
காம புயலில் சுழலுகின்றேன்...!
சோக கனல் பொங்கும்
என் திரேகத் திசுக்கள் பசியாற...!
என் ஆறடி உடல்
பணப்போர்வைக்குள்
அடங்கியது கண்மூடி...!

பார்வையால் எனைக் கொன்றவன்.....!
குடும்ப பாரமெனப்
பாராமல் சென்றதால்.....!
அதை சுமக்க
நாளொருயிரவும்
புது புது பாரத்தைச்
சுமக்கின்றேன்....!
உணர்ச்சிகளின் பிழம்பாக....!
ஊடலின் முத்திரையுடன்....!
வேசியென்று ஊர் சிரிக்க....!

உடலை நிலமாக்கி....!
உணர்வை வித்திட்டு.....!
உடலுறவை உரமாக்கி....!
காம கதிர்களை
காசுகளால் அறுவடை செய்தேன்...!
அக்காசுகளையும்
கொள்முதல் செய்தனர்
சில காக்கி சட்டைகள்...!

ஈன்றெடுத்த என்னுறவுகள்
வெளிச்சத்தில் வளம்பெற....!
இரவில் இந்த
ஈனச்செயல் செய்ய
ஈசன்
எனைப்படைத்து விட்டானோ?

இது என்
தவறா....?
எனை பெற்றெடுத்த
தலைமுறையின்
தவறா....?
கரம் பிடித்தவனின்
தவறா....?
எனை இச்சந்தையில்
தள்ளிய
சமூகத்தின்
தவறா....?
என் பிழைப்புக்கு
மூலமாக
விளங்கும்
ஆண்வர்க்கத்தின்
தவறா.....?
எனை அழகாக படைத்த
பிரம்மனின்
தவறா....?
புதிர் போட்டு
புலம்புகின்றேன்....!
விடை சொல்ல வாருங்கள்...!
காத்திருக்கிறேன்
மல்லிகைபூ
மனம் கமழ....!
நாளை பொழுது
நன்கு விடியும் என....!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (29-Nov-14, 8:27 pm)
சேர்த்தது : பெ கோகுலபாலன்
பார்வை : 67

மேலே