என்னில் நிறைந்தவனே

என்னில் நிறைந்தவனே!
ஒரு பொன்மாலைப் பொழுதில்
வார்த்தைகளைக் கோர்த்து
வசந்தங்களை
மீட்டிக்கொண்டிருந்தாய்

தென்றல் உன்னை
உடுத்திக் கொண்டிருந்தது
மஞ்சள் பூக்கள்
விசிறிக் கொண்டிருந்தது
உலகம் மறந்து
உன்னில் புதைந்திருந்தாய்

என் கண்களில் நுழைந்து
களவாடிச் சென்றாய்
இதயம் முழுதும்
இறுக்கி பிடித்தாய்
சுவாசம் தொடர்வது போல்
என்னைத் தொடர்ந்தாய்

ஏகாந்த தருணங்களில்
என்ன சொன்னாய்?
என்ன செய்தாய்?
நினைவில்லை
சுகங்களை மட்டுமே
நேசிக்கக் கொடுத்தாய்

சின்னச்சின்ன சண்டைகளில்
பெருங்குரலெடுப்பாய்
பேசாமல் விடுத்தால்
பாசம் பொழிந்தாய்
தவறுகள் கூட
தவறிப் போயின

தண்டனைகளும்
தள்ளுபடியானது
தவிர்க்க முடியாத்
தருணங்களிலும்
கண்களில்
காதல் தந்தாய்


புயலெனப் புறப்பட்ட
துன்பங்களை
பூமாலையாய்
மாற்றிக் கொடுத்தாய்
என்னில் நிறைந்தாய்
என்னில் நிறைத்தாய்

சிறுசிறு நிகழ்வுகளிலும்
சீறிப்பாய்ந்து
பெயர்த்துப் போகிறாய்
இதயத்தை...
என்ன நேர்ந்தது
உனக்கு!

உன்னையறியாமல்
காட்டிக் கொடுக்கின்றன
உன் வாக்கியங்கள்
காதல் குறைந்ததாய்
உன் கண்கள் சொல்கின்றது
நேசம் நெருடுவதாய்
உன் நெற்றி சுட்டுகிறது

உள்ளம் பிறழ்வதாய்
உன் உதடுகள் உரைக்கிறது
உன் விரல் நகத்தின்
விருப்பங்களைக் கூட
விரும்பி முடிப்பேன்

ஏனோ? பிறழ்வு
என்னை நிறைத்தவனே!

எழுதியவர் : சிவகாமி அருணன் (11-Dec-14, 6:50 pm)
பார்வை : 97

மேலே