அழியாது மனதில் நாம்உள்ளவரை

அயர்ந்து படுத்தவன் நானும்
அண்ணாந்து பார்த்தேன் !
உயரத்தில் தெரிந்த உத்திரத்தை
உற்று நோக்கினேன் !
கடந்து வந்திட்ட காலங்கள்
நடந்து வந்தன என்முன்னே !
சுழன்றிடும் காலச் சக்கரமும்
கழன்று ஓடியது பின்னோக்கி !
அறிவாய் உணர்ந்த நாட்களும்
தறியாய் நெய்தன நெஞ்சினில் !
முரண்டு பிடித்த முப்பொழுதுகள்
திரண்டு வந்தன நினைவிலே !
அணிசேரா அரசியல் வாதியாய்
தனியாய் கழித்திட்ட காலங்கள் !
கனியாய் சுவைத்திட்ட நிகழ்வுகள்
இனிதாய் இதயத்தில் நிற்பவை !
பள்ளிக்கு சென்று திரும்பியதும்
படிக்காது உறங்கிட்ட நேரங்கள் !
காளையாய் இருந்து களிப்புற்ற
காலைநேர கல்லூரி காலங்கள் !
அதிகாலை அவசர வேலைகள்
அந்திவேளை அமைதி நேரங்கள் !
உற்றசுற்றத்தின் சுப காரியங்கள்
உள்ளத்தைத் துளைத்த துக்கங்கள் !
வேலையில் சேர்ந்திட்ட முதல்நாள்
விருப்ப ஓய்வால் வெளிவந்தநாள் !
கதைகலை நிறைந்த திரைப்படங்கள்
கருத்துள்ள அழகான படப்பாடல்கள் !
முதன்முதல் கவிதை எழுதியதும்
முதல்முறை நாளிதழில் வந்ததும் !
முதல்விருது பெற்ற முதல்நொடியும்
முதல்நூல் வெளியிட்ட நிகழ்சசியும் !
அனைவரின் நினைவிலும் வந்திடும்
அனுபவங்கள் அடிமனதில் தங்கிடும் !
அல்லவை நல்லவைகள் தேங்கிடும்
அழியாது மனதில்நாம் உள்ளவரை !
பழனி குமார்