அன்பின் விசாரிப்புகள் -ரகு
ஓரதிகாலையில்
பயணப்பட்டிருந்தேன்
உடற்பயிற்சியின் நிமித்தம்
வாசலில் கோலமிடும்
பழமைவாதப் புதுமைப்பெண்
நேர்த்தியாய் வீசிநகரும்
நாழிதல் பையன்
வெற்றிலை வாய்சிரிப்பில்
குப்பைவண்டிக்காரம்மா
இரவயராக் களைப்பில்
காவலாளி ஒருவர்
நரைத்துவிட்டது ஆகவே
நடைப்பயிற்சி எனும் தத்துவாதிகள்
எங்கும் பிசிருதட்டாமல்
நீண்டுகொண்டிருந்த -என்
இன்சொல் விசாரிப்புகள்
கட்டிட வேலையொன்றில்
கருங்கல் சுமந்துகொண்டிருந்த
சிறார்களைத் தவறவிட்டிருந்தது
பின்னொரு நாளில்
அதிலொரு சிறுமியைப்
பள்ளிச்சீருடையில் பார்த்தபோது
பரவசப்பட்டுப்போனேன்
அக்கறைக் கேள்விகளோடு
நெருங்கிநேனருகில்
"கல்"அப்பா துயர்போக்க
"கல்வி" நாளைய என்துயர் களைய
பளிச்சிட்டாள் சிறுமி
பரிவுபச்சாரக் கேள்விகளோடு
கடந்தேகிவிட்டதுக் காலங்கள்பல
கொழுத்த அனுபவசாலியாக
அனுமானித்த உலகில்
குச்சியூன்றியபின்னும்
ஓயவேயில்லை -என்
அதிகாலைப் பயணமும்
அன்பின் விசாரிப்புகளும்.!