நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதைப்போட்டி 2015”
நாளைய தமிழும் தமிழரும் !
==============================
நாளைத் தமிழுக்கும் நாளையத் தமிழருக்கும்
நல்லதொரு பொழுதாக இன்றே விடியட்டும்
வேளை பிறக்கட்டும் தமிழ்வேதனை தீரட்டும்
பிறமொழிக் காதல்நம் கண்முன்னே மடியட்டும்..
சீர்செய்தப் புதுக்கருத்தால் சிந்தித்து நாமும்
வளர்த்திடுவோம் புதுத்தமிழை எதிர்கால மறிய
நேர்கொண்ட நடையில் பலஇலக்கியங்கள் படைத்து
காட்டிடுவோம் தமிழுயர்வை புவிமுழுதும் தெரிய
முத்தமிழின் நூல்களாலே நூலகங்கள் நிரப்பி
அடுத்துவரும் தலைமுறைக்குத் தமிழறிமுகம் செய்வோம்
சத்தமிடும் கடல்கடந்து தமிழோசை முழங்க
அத்தனைத் துறைகளிலும் தமிழ்நூல்கள் நெய்வோம்
வெளிநாட்டில் இருந்தாலும் ஒன்றுபட்டு தமிழர்
கொண்டாடு கின்றார் நம்பண்டிகையை எல்லாம்
உள்நாட்டில் நடப்பதென்ன நமக்கெல்லாம் தெரியும்
தொலைக்காட்சி மட்டும்நம் திருநாளைக் கொல்லும்
தமிழ்மொழியின் பெருமைமட்டும் பேசியது போதும்
மொழிசிறக்க வழிநடத்தும் விழிப்புணர்வும் வேண்டும்
தமிழரிருவர் சேர்ந்துவிட்டால் பிறமொழியில் பேசும்
பழக்கத்தை தீய்த்துவிட்டால் தமிழென்றும் வாழும்.
சாதிக்கும் ஆசையினால் செடிமலரை ஈனும்
விதைகூட பூமியைத்தான் துளைத்து வெளியேறும்
வீதிக்குஒரு இளைஞன் விரும்பிதமிழ் வளர்த்தால்
என்றைக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் உயர்வே!!!!
இந்த கவிதையை நானே எழுதியது என்று உறுதி கூறுகிறேன்
பெயர்: ரா. முரளிதரன்
வசிப்பிடம்: 33/34, ராஜிவ் நகர், திண்டல், ஈரோடு
தமிழ்நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் : 8220447222