​நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதைப் போட்டி 2015​

இன்றைய தமிழோ இடையிடை இக்கட்டில்
நாளைய தமிழோ இடைவிடா இருட்டினில் !
இன்றைய தமிழன் நிலையோ உறக்கத்தில்
நாளைய தமிழன் நிலையோ இறுக்கத்தில் !
எதிர்மறை வரிகளல்ல எதிர்கால நிலையே
எதிர்ப்புகள் வந்தாலும் என்னிலை இதுவே !

தமிழுக்காக தமிழனின் முழக்கம் தற்போது
தமிழையே எதிர்ப்பர் தமிழரே எதிர்காலத்தில் !
தலைமுறையும் மாறுது தமிழையும் மறக்குது
தமிழார்வம் குறையுது தன்மானம் துறக்குது !
தமிழிலே உரையாடல் தரணியில் மறையுது
தமிழர்க்கு மரியாதை மண்ணிலே புதையுது !

சிந்தியுங்கள் சிறிதுநொடி சிந்தை உள்ளோரே
நிந்தியுங்கள் நிச்சயம் தவறெனில் என்னையும் !
ஆதிக்கமும் திணிப்பும் மீண்டும் வேற்றுமொழி
ஆதிக்கம் செய்வோரின் பிடியிலே தமிழ்மொழி !
அண்டை நாட்டிலே அவதியிலே நம்தமிழினம்
அதட்டி கேட்கவே ஒன்றிடவில்லை நம்மினம் !

எண்ணங்கள் ஒன்றாகி எம்தமிழை காப்போம்
என்றுமே தமிழர் ஓரினம் எனகாட்டிடுவோம் !
நாளைய தூண்களே நம்மொழியை மறவாதீர்
நாணி குறுகாதீர் தமிழ்மொழியை ஒதுக்காதீர் !
நாளைய உலகும் வாழ்வும் உங்கள் கையிலே !
நாளைய தமிழருக்கு நவில்கிறேன் வாழ்த்தினை !


( இக்கவிதை நான் எழுதியதே என உறுதி அளிக்கிறேன் )

பழனி குமார்

N R பழனி குமார்
8/31, வடக்குத் தெரு ,
வி பி காலனி ,
அயனாவரம் ,
சென்னை 600023

செல் : 9962861747

எழுதியவர் : பழனி குமார் (8-Jan-15, 1:24 pm)
பார்வை : 253

மேலே