விடிந்தால் பண்டிகை, பொள்ளாச்சி அபி

விடிந்தால் பண்டிகை.,
வீடு சுத்தமாய் இருக்க
வேண்டுமல்லவா..!

என் மனைவி
சமையலறை முதல்
சுற்றுச்சுவர் வரை
ஒட்டடையடித்து-புதிய
வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள்.

சிறிய மகள்
இருக்கை,படுக்கைகளை
சுத்தம்
செய்து கொண்டிருந்தாள்.

பெரிய மகள்
வீடு பெருக்கித் துடைத்து
வழித்துக்
கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.

நான்..,
"பெண்ணுக்கும் சமஉரிமை"
வேண்டுமென வலியுறுத்தி
க..வி..தை எழுதிக் கொண்டிருந்தேன்..!

வீடு சுத்தமாச்சு.,
கவிதை அழுக்காச்சு..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (14-Jan-15, 8:26 pm)
பார்வை : 168

மேலே