யாதுமாய் நீ-வித்யா

யாதுமாய் நீ.....!! -வித்யா


உடல் சிலிர்க்கும் போது உதிரும் மயிலிறகுகள் உன் பெயர் சொல்லி என்னை அழைத்திருக்கும். மின்மினிகள் கோர்த்து நான் கட்டிய கோபுரம் விண் தாண்டியும் உயர்ந்திருக்கும். என் நிழல்கள் இளைப்பாற உன் மடி தேடிடும். என் மௌனங்கள் உறவாட உன் பார்வைகள் தேடிடும். என்ன சொல்லி வீசியதோ இன்று என் வாசல் காற்று இமைகள் உரசலில் மின்னலென வந்துபோனது உன் முகம்.

சிற்பியான உனைப் பார்த்துப் பார்த்து ஐந்து சிற்பங்கள் தன்னை செதுக்கிக் கொண்டன. மழைக்கும்,வெயிலுக்கும் உன் நிழலொதுங்கி தனைக் காத்துக் கொண்டன. கர்ப்பம் தரிக்கா தாய் உன்னை என் இதயக் கோவிலின் கருவறையில் வைத்திருக்கிறேன். அரசனும் ஆண்டியாவான் பெண்குழந்தைகள் பெற்றெடுக்கையிலே என்று எவரோ சொன்னது எனக்கு சிரிப்பாய் வருகிறது. ஒரு அரசன் ஆண்டிக்கோலத்தில்....நினைத்துப் பார்க்கிறேன்.

முத்தங்களின் முடிவுகள் காமமாய் முடிகையிலே....இன்னும் உன் விரல் பிடித்து நடக்கும் நாளுக்காய் காத்திருக்கிறேன் . பெரும்பாலான உரையாடல்கள் விழிகளின் சம்பாசனைகளில் நடக்கும் போது நவக்கால யுவதியாய் சில சமயங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன்..... என் தோழிக்கும் அவள் தந்தைக்குமான நெருக்கத்தை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அவர் மடியில் அமர்ந்துக் கொண்டு அவள் என்னிடம் பேசியபோது பெரும் படபடப்பு என்னில்.

இருப்பினும் தினமும் வீடு நுழைந்ததும் என் பெயர் சொல்லி அழைத்து கொஞ்சம் தண்ணீர் வாங்கிக்குடிப்பதில் என் காதல் மொத்தமும் உங்களின் தாகம் தீர்த்திருக்கும் அப்பா. சில சமயங்களில் என் மீதான உங்களின் புரிதல் எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். முகில்கள் மோகம் கொள்ளா நேரத்தில் பெருமழை பெய்தது போல. உனக்குப் பணிவிடும் செய்திடும் தருணங்களிலெல்லாம் புண்ணியம் தேடிடுவேன்.

என்ன சொல்லி நான் உன்னை வரையறுப்பேன்....... எந்தக் கவி உனக்கீடாகும்.......யாரை சொல்லி உதாரணம் வைப்பேன்...... நினைக்க நினைக்க மலைப்பாய் இருக்கிறதெனக்கு....... உன் பாதமெங்கும் எவ்வளவு வடுக்கள்...... உன் பாதையெங்கிலும் நெருஞ்சிகள்........ஓய்ந்து ஒடுங்கி தூணில் சாய்ந்தோ........ஊஞ்சலில் உறங்கியோ நீ களித்திருக்க வேண்டிய பொழுதுகள் நாளுக்கு நாள் சுமையாய் போவதேனோ.

உன் தாயின் செல்ல சீமானாமே நீ..? எனக்கும் கூட அப்படித்தான் தெரியுமா...? என் அன்பு தேசத்தின் பேரரசன் நீ. உனையன்றி என் தேசத்தில் யாருமில்லை. ஆம்.... யாருமே இல்லை. நோய்களின் சாம்ராஜ்ஜியம் உன்னில் கோலூன்றத் தொடங்கிவிட்டது. என்ன வயதாகிவிட்டது உனக்கு..? ம்ம்ம்...? எனக்குத் தெரிந்து உனக்கு வயது இருபத்து மூன்றாகத்தான் இருக்க வேண்டும். ஒரு சரித்திரத்தின் முன் மாதிரி நீ..! அப்பா உன்னை நினைத்தாலே என் உடல் சிலிர்க்கிறது. என்ன மனிதர் இவர் என்று ஒவ்வொரு நொடியும் மலைத்துப் போகிறேன்.

சத்தியமாக எனக்கு சொல்லத்தெரியவில்லை...... உன் மீதான என் காதலை. இப்போதே என் கருவறையில் எடுத்து ஒழித்து வைத்துக் கொண்டு என்னில் மட்டுமே நீ...... எனக்கு மட்டுமே நீ என வாழத்தோன்றுகிறது. வாழ் நாளெல்லாம் என் கருவறையில் உன்னை சுமக்கத் தோன்றுகிறது.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் எனும் ஆணவத்தில் உன் தோட்டத்து தென்னைகள் வானுயர நிற்கின்றன. வானும் பொய்த்துப் போனது......மண்ணும் பொய்த்துப் போனது. ஆறுவட்டிக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி நீ மரம் நட்டவனென மார்தட்டிக் கொண்டாய்....... ஊரோ கடன்காரன்என்கிறது.ஆனால் என்ன உன் கதராடையின் மங்கா ஒளியில் என் கண்கள் பூரிக்க வேண்டும்.

உன் அன்பில்....உன் பண்பில்.....உன் வளர்ப்பில்....... எனை நானே செதுக்கிக் கொண்டேன். நீயாகிய விதை இப்போது என்னில் விருட்சமாகி பரவி விரவிக் கிடக்கிறது. எந்த பெருங்காற்றொ...பெருமழையோ அசைத்துக் கூடப் பார்த்திட முடியா காதலில் அம்மரம் திளைத்திருக்கிறது..........!!

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது நீ உதிர்த்த சருகுகளே அன்றி நீயில்லை. உன் வேருக்கு விஷ நீர் பாய்ச்சும் கரங்களுக்கும் கொய்துப்போக சுகந்த மனமும் கவரும் வண்ணமும் மிளிரும் பூக்களைப் பரிசளிக்கும் உன்னை வர்ணிக்க வார்த்தைகளில்லை....

உன் புன்னகையில் என் பிறவிப்பயனெய்த வேண்டும்.........நீ மட்டும் உடைந்து போனால் நான் மடிந்துப்போவேன் என் வாழும் தெய்வமும் நீ.....வாழ வைக்கும் தெய்வமும் நீ.... என் யாதுமாய் நீ......!!

எழுதியவர் : வித்யா (15-Jan-15, 3:41 pm)
பார்வை : 229

மேலே