சாதி ஒழிமதம் அழி சாதி பொங்கல் கவிதைப் போட்டி 2015

கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட பெண்ணின்
அழுகிய தேகத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது சாதிவெறி;
மனிதக்கழிவை கையால் சுத்தம் செய்யும்
சாதிக்காரனின் நாற்றத்தில் மணக்கிறது மனிதம்;


திருமணமான முதல்நாளில் திடீரென மூண்ட மதச்சண்டையில்
கணவனின் கண்ணெதிரே வன்புணர்வு செய்யப்பட்ட
அச்சகோதரி இறந்து விடக்கூடும் இன்னும்சில நொடிகளில்;


காய்ந்த விழியில் ஏக்கம் வழியக் காத்திருக்கும்
அத்தாயில்லா சிறுமிக்குத் தெரியாது
சாதிக்கலவரத்தில் அவள்தந்தை மாய்ந்த செய்தி;
இதுபோல் துயரம் இன்னும் ஆயிரம் சாதிமதத்தால்;

சாதிமத துயரம்கண்ட இறைவன்
புது அவதாரம் பூண்டான்; பூமிக்கு வந்தான்;
‘சாதி மதமென்று தருக்கித் திரியும் மனிதர்காள்
மனிதமொன்றே சாதி; மதத்துக்கெல்லாம் ஈசன் நானே;
மனிதம் தழைக்கவே மதங்கள் எல்லாம்
மதி பெறுவீர்;கதி அடைவீர்; இனியேனும் மனிதா
சாதி ஒழி;மதம் அழி;சாதி’ எனப் போதனைகள் கூறலுற்றான்.


ஆனால் அவலம் கேளீர்; சாதியைப் பழித்தானென்றும்
தானே கடவுளெனகூறி மதஇழிவு செய்தானென்றும்
அன்றே படுகொலை செய்யப்பட்டான் இறைவன்.


நடுவீதியில் கிடந்த கடவுளின் பிணத்தில்
வழிந்தோடிய குருதியை நாவால் நக்கிக்கொண்டிருந்தன
சாதியும் மதமும் வெறிப்பிடித்து.




இப்படைப்புக்கு நானே முழு உரிமையாளர் என உறுதி அளிக்கிறேன்.

பெயர்: நிக்கோலாஸ் பேட்ரிக்
வயது : 26
வதிவிடம் : எண் 154-21,
சென்னை அடுக்ககம்,
திருமங்கலம், சென்னை - 600040
நாடு : இந்தியா

அழைப்பிலக்கம்: 9566 144644

எழுதியவர் : நிக்கோலாஸ் பேட்ரிக் (15-Jan-15, 11:42 pm)
பார்வை : 107

மேலே