அன்பு

சோதரா
அம்மாவின் அன்பும்
அப்பாவின் அன்பும் கலவியாகி
கடவுளின் கருணை சேர்த்து
பிசையப் பட்டதால் தான் நீ பிறவி
பிரிய மனிதன் ஆனாய் அறி நீ
பூமியின் அன்பு புதையல் ஆனதால்தான்
நீ வாழ்வதற்கான
வாய்ப்பும்,வளம்மும் வாய்த்திருக்கிறது
மண் என்ற இந்த மடியில்
சொல்லில் பூ இருப்பதால்
புன்னகை காம்பில் மலர்ந்து
காயாகி கனிகிறது
அன்பு என்னும் அமுதக் கனி
சுளை,சுளையாய் பிரித்து
நன்றி மறக்கும் முரண் நாவுகள்
நயம் பட உண்டு மகிழ
அன்பு ஊண்கொடு
வாழ்வில் நீ உயிர் பாத்திரம்
உயர் பத்திரம் அது பத்திரம்
நீ ஏணியாவதும்,ஞானியாவதும்,
கூனியாவதும்-உன்
நிதானத்திலும் நிர்வாகத்திலும்
நினைவில் கொள்
இதயத்தின் ஈரத்தில் ஊற்றெடுக்க
இன் முகத்தின் வழி வடிந்து
கடலாய் பாயும் இது அன்பு
இனியாகிலும் இதை நீ நம்பு
போராயுதத்தை மிஞ்சும் நாவாயுதம்
உனக்குள் இருக்கிறது உயிர்ப்பி
கையாள்வதை பொறுத்து அது
குட்டையாய் குறுகுவதும்,
கடலாய் பெருகுவதும் கவனி
சொல் பற்களால் சோதித்ததும்
முள் கற்களால் போதித்ததும் போதும்
நா ஏர் கொண்டு தினம்
நல்லன்பு நட உன் மனவெளி உழு
விஷ களை கழை
வீரிய விதை விதை
பசிக்கு உபயோகிக்கத்தகு பயிரிடு
பார்க்கும் மனிதர்களை பந்திக்கு அழை
பாசமாய் பரிமாறு
குசலம் விசாரி குதுகலி
அன்பு ஆரோக்கியமான ஔடதம்
காயப்பட்ட இதயங்களுக்கு
மனசு இடும் களிம்பு அறி
நெறிமுறை தவறுபவர்களை
நேர்கோட்டுக்கு இழு
அன்பு அன்றி அருமருந்து
உலகில் வேறொன்று
இன்னும் அறியப்படவில்லை என்று
அவர்களுக்கும் புகட்டு
புன்னகையாலும்,அன்பாலும்
பூமியை புரட்டு
புது விதி செய்
செல்லரித்து மண் செயலற்று போகாது
பூரிப்பால் பூலோகம் பூப்படையட்டும்
அன்புள்ள உன் வாரிசு அதில் வளர்ந்து
அடுத்த தலை முறையாய்
ஆளட்டும் உலகை.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.