இனியேனும் சிந்தியுங்கள் நல்லதையே

​கண்மாய் ஆறுகுளம் ஒருகாலத்தில்
கனவில் மட்டுமே வருங்காலத்தில் !
காட்சியாகப் போகுது அரங்கங்களில்
காட்சியகத்தில் கருப்பு வெள்ளையாய் !

அன்னைக்கு துணையாய் அரும்பும்
அண்ணாந்து நோக்குது குறும்பாய் !
ஆழ்ந்த சிந்தனையில் என்னவோ
ஆழ்மனதில் எதிர்கால நினைவோ !

சிந்திக்க ஆரம்பித்தால் சிறுவயதில்
சிகரத்தை தொடலாமே வாழ்வினில் !
சீரழியும் சமுதாயமும் சீர்பெறவே
சீரான சிந்தனைகளும் அவசியமே !

சிந்தனையின் துளிகளும் சிந்தையில்
சிறிதேனும் தேங்கினால் சிறக்குமே !
சிதறாமல் சேமித்தால் சிந்தனைகள்
சிறுதுளி பெருவெள்ளமாய் பெருகுமே !

இனிதே இளமைக்காலம் பிறப்பினில்
இன்பமே இறுதிக்காலம் நினைவினில் !
இன்புற்று வாழ்ந்திடவே இளைஞர்களே
இனியேனும் சிந்தியுங்கள் நல்லதையே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Jan-15, 3:24 pm)
பார்வை : 179

மேலே