ருசு

குறுந்தகவல்களின் மூத்த குடிமகன் இந்த வரிகள்..
"ஏய்.. என்ன செய்துகொண்டிருக்கிறாய்....?"
.
.
இத்தகவலை தூக்கி சென்றது சிறகில்லா விஞ்ஞானப்புறா எனது அன்னத்திடம்...
கண நேரத்தில் கிடைத்தது பதில் தகவல்,
"கங்கை கொண்ட சோழன், கதை படிக்கின்றேன்", என்று..
முனைவர் பட்டம் தேவை இல்லை,
இவள் படிப்பது தமிழ்ப் புராணக்கதை என்றறிய..!
சக்கரைத் தண்ணியும் பருக பருக சற்று கசக்கும் என்றிருக்க.,
இவள் எப்படி சதா தமிழ் புராணங்களை படிக்கின்றாள் என்ற
சிந்தனையில் "ம்ம்ம்ம்" என்று பதிலளித்தேன்.
சுவற்றில் அடித்த பந்தினைப் போல் இருந்தது
அவளின் பதில், "என்ன ம்ம்ம்ம்?",
என்ற தனக்கே உரித்தான ஒரு தோரனையில்..
"சலிக்கவில்லையா புராணக்கதை படித்துக்கொண்டேயிருக்க?
பெருமையாக இருக்கிறது, தொடர்ந்து படி", என்றேன்..
நிறை குடம் தழும்பாது என்பார்களே அது இது தான்..
அவள் அனுப்பும் இந்த பதில் தான் இனி தொடரவிருக்கும்
விவாதாத்திற்கு காரணம் என்று தெரியவில்லை அப்பொழுது..
"இதில் என்ன பெருமை?
இத்தனை கதை படித்தும் ஒன்றும் நினைவில் இருப்பதாய் தெரியவில்லையே",
என்றாள் ஒரு வித சலிப்புடன்.
கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? பேச்சைத் தொடர்ந்தேன்..
"நினைவில் வைத்துக்கொல்லும் ஞாபக சக்தி வேறு, மதி நுட்பம் வேறு",
என்றேன் அவளின் அடுத்த பதிலை எதிர்நோக்கி.,
"மதி நுட்பமா? மாமா.. போய் வேலையை பாருங்கள்",
என்றாள் நான் சொன்னதை சிறிதும் சட்டை செய்யாமல்..
அப்பொழுது தான் சமீபமாய் நான் படித்த 'கன்னி மாடம்' என்ற கதை நினைவில் வந்தது.
'ருசு', அழகான பழம்பெரும் தமிழ்ச்சொல்.
அர்த்தம் தெரிந்து கொள்ளாதவனாய், 'google' செய்தும் தோல்வியுற்றவனாய்
என்னை முடக்கிய வார்த்தை..
பின் கதை போகும் போக்கில்,
அர்த்தத்தை ஓரளவு யூகித்து கதையை தொடர்ந்தவனானேன்.
இந்நினைவு ஒரு புறம் இருக்க,
"என் வேலை இருக்கட்டும்...
'ருசு' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்தால் சொல்லேன்......" ,என்றேன் .
மறு நொடி சிரித்தது என் அலைபேசி,
என்னவள் தகவலை கொண்டு வந்த மகிழ்ச்சியில்..
கையில் வைத்திருக்கும் சாவியை மறந்து,
மேசை, மேசை இழுப்பறை, படுக்கையறை என எத்திக்கும் தேடி இளைத்து
இறுதியில் கையில் இருப்பதைப் பார்க்கும் நாமே
நம்மைக் கண்டு நகைத்து அச்சாவியை பார்த்து மகிழும் உணர்வு வந்தது,
என்னவளின் பதில் தகவலை கண்ட பொழுது..
சற்றும் யோசிக்காதவளாய், ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாய்,
"ம்ம்ம், ருசு என்றால் ஆதாரம்" என்றாள் பட்டென்று..
பதில் அனுப்ப மறந்து, 'கன்னி மாடம்' கதை
என் நினைவில் பின்னோக்கி சென்றது 'ருசு' வின் ருசியறிய..
"ஏய்ய்ய்ய்ய்!! அர்த்தம் தவறாக சொல்லிவிட்டேனா??",
என்று சந்தேகித்தாள் கதையின் ருசியறியும் தருவாயில்.
அமைதியாய் பதிலலித்தேன்,
"மிகச்சரியாக தான் சொன்னாய்..
உனது மதி நுட்பத்திற்கு ‘ருசு’ கொடுத்துவிட்டேன் போதுமா??" என்று..!
முகம் சிவந்தவளாய், "டேய்ய்ய்! போதும் டா", என்றாள் தன் இதழ்களில் புன்முறுவல் தவழ!
(மயிலிறகுகள்)

எழுதியவர் : (25-Jan-15, 1:27 pm)
சேர்த்தது : சௌந்தர்ராஜன்
பார்வை : 68

மேலே