செம்மொழி தோட்டா - சந்தோஷ்

வெள்ளை உள்ளப் பிள்ளையாய்
எல்லையற்ற அன்புப் புதல்வனாய்
கற்பனை உண்ட புலவனாய்
வந்தனம் சொல்லி வந்துள்ளேன்..
அன்னையே..! தமிழே..! செந்தமிழே.!
கொள்ளைச் சுவையுடைய கொம்புத்தேனே..!
விற்பனையாகாத நாகரிக கம்பன்
நான் ஒர் அனுமதிக்கேட்டு வந்துள்ளேன்.

செரிந்தநீல நீர்ச்சேலையுடுத்திய ஆழியலைகள்
திரிபுறமும் உன் தேன்கவிகள் பாடினாலும்,.
விரித்த கார்க்கூந்தலோடு நவீன கண்ணகிகள்
வீதிவீதியாய் சிலம்பெனும் கற்புத்தொலைத்து
நீதிமன்றவாசலில் நீதிக்கேட்டு தொலையட்டும்

எனக்கு கவலையே இல்லை தாயே.....!
கவனிக்கப்படாத நாகரிக பாரதி
நான் ஓர் அனுமதிக்கேட்டு வந்துள்ளேன்.

பொன்வட்ட வான்வெண்ணிலா ஒளிக்காலால், உன்
மொட்டைமாடி கவிஞர்களுடன் நடையளந்தாலும்
பாடம் பயிற்றுவிக்கும் திருக்குறளறிந்த தமிழாசிரியர்கள்
பள்ளிக்கூடத்தை பள்ளியறையாக்கித் தொலையட்டும்.

எனக்கு கவலையே இல்லை அன்னையே.!
பொறுமையில்லா நாகரிக இளைஞன்
நான் ஒர் அனுமதிக்கேட்டு வந்துள்ளேன்.

செந்தமிழே ! பைந்தமிழே..! தீந்தமிழே..!
உன் உயிரெழுத்திலுள்ள அந்த ஆயுத எழுத்து
உன் மழலை எனக்கு ஆயுதமாய் தெரிகிறதே..!
அவ்வெழுத்திலுள்ள அம்மூன்றுப் புள்ளியும் எனக்கு
மூன்று தோட்டாக்களாய் உருமாறி விட்டதே..!

உதிரம் கொதித்து என் செவ்விழி அனலேறுகிறது
நெஞ்சம் வெடிக்க என் ரெளத்திரமீசை துடிக்கிறது
ஆயுதமேந்தும் ஆய்ந்தெழுதும் காத்திரகவிஞன் எனக்கு
ஒர் அனுமதிக்கொடு !அமிழ்தினும் இனிய அருந்தமிழே..!

தண்தமிழே..! வண்தமிழே..! இன்தமிழே..!
நீ அனுமதிக்கும் ஆயுத எழுத்துத்தோட்டாக்களை
உரமேற்றிக்கொள்ளும் என் அக்னிபேனாவிலிருந்து
வெடித்தெழுந்து சீறிப்பாயும்.................முதல் தோட்டா..........!
உன் பெயரைச்சொல்லி அரசியல் நாடகமாடும்
நயவஞ்சகர்களை சுட்டுவீழ்த்தி அழிக்கட்டும்..!

இரண்டாவது தோட்டா....!
உன் அமுதச்சொற்களில் வேற்றுமொழி அமிலமிடும்
சதிக்காரர்களை சுட்டுத்தள்ளி ஒழிக்கட்டும்..!

மூன்றாவது தோட்டா..!
தரணியெங்கும் தனியிசைக்கின்ற உன்சிறப்பை உணராத
வாளென கூரொளியாய் வற்றாத மொழிச்சுகம் சுரக்கும்
உனதருமை உணராத, தன் தாய்மொழியில் பிழைச்செய்யும்
தமிழ் மாணவனாம் ,கவிஞனாம்.. எழுத்தாளனாம்,
என்னை சுட்டுப்பொசுக்கி கொல்லட்டும்...!

எனக்கோர் அனுமதிக் கொடுப்பாயா ?
உயர்தனிச் செம்மொழியே..!

இனியேனும்,
என்னுடல் எரிக்கப்பட்டு மிஞ்சும்
ஒரு கைப்படிச் சாம்பலுக்காவது
நற்றமிழில் ஒரு கவிதையாவது
அள்ளி வீசும் ஒரு வரத்தை
அருள்வாயா ?என் செல்ல முத்தமிழே............!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (11-Feb-15, 10:30 am)
பார்வை : 527

மேலே