பிப்ரவரி வெப்பம்

தகரக் கீற்று கொண்டு
வேயப்பட்ட
அந்தப் பெருநகரத்துப்
பேருந்து
நிழற்குடை
அப்படியே கடத்தும்
பிப்ரவரி வெப்பத்தால்
முன்நெற்றியில்
வழிந்து கொண்டிருக்கிறது
வெயில் !

இந்த வெக்கைக்கு
அழலாமா
என
யோசித்தபடி
ஒரு கைக்குழந்தை .........!

ஊதா நிற ஜீன்ஸும்
பூப்போட்ட சுடிதாரும்
ஒருவருக்கொருவர்
புன்னகையில் .........!

வாங்கிய விகடனை
விசிறியாக்கிக் கொண்டிருக்கிறது
நடுத்தர வயதுக்காரரின்
கை ...........!

வியாபார மும்முரத்தில்
தர்பூசணிக் கடை !

இன்னுங்கொஞ்ச நாளில்
இங்கே
தண்ணீர்ப்பந்தல்
வைப்பார்கள்
ஆளுங்கட்சியினர் !

மீண்டும்
மின் வெட்டு
அமலுக்கு வரும் !

குழாயடிச் சண்டைகள்
தலைப்புச் செய்தியாகலாம் !

பிளாஸ்டிக் குடங்கள்
சாலை மறிக்கலாம் !

மறுபடியும்
பக்கத்து மாநிலங்கள்
பகையாகும் !

இனி
ஆங்காங்கே
இளையராஜா பாடல்கள்
அடிக்கடி
காது நனைக்கும் !

என்று செல்லும்
இந்தக் கவிதையைப்
போலவே
வேறொரு கவிதையை
போன வருடத்தின்
மார்ச் மாதத்தில்
எழுதினேன் .......!
இந்தக் கவிதையைப்
போலவே
வேறொரு கவிதையை
நான்
எழுதாமல் இருக்கவேண்டும்
அடுத்த வருடத்தின்
ஜனவரியில் .......!

எழுதியவர் : குருச்சந்திரன் (18-Feb-15, 7:21 pm)
பார்வை : 124

மேலே