தொலைந்து போன என் வாழ்க்கை

சுருண்டு அடர்ந்த கருங்கூந்தலும்,
பளபளக்கும் மஞ்சள் பூசிய கன்னங்களும்,
வெட்கத்தில் தளரும் கண்களும்,
தரை நோக்கி குனிந்திருக்கும்
உன் கனிந்த முகமும்,
காரணமேயில்லாமல் கோலம் வரையும்
உன் பிஞ்சு பாத விரல்களும்,.

இத்தனைக்கும் மேலாக
அன்பு அன்பு அன்பு
இதை தவிர வேறெதையும் அறியாத
உன் மனமும்,,,

இதையெல்லாம்
இருபது வருடங்களுக்கு முன்பாக
என் அருகேயே இருந்து ரசித்த நான்...

அன்று உன் மீது நான் வைத்த
என் அன்பை உன்னிடம்
சொல்லத் தயங்கி தயங்கி......

அடுத்து வந்த நாட்களில்
தந்தையின் கட்டாய சாட்டையடியில்,
சூறாவளியாய் சுழற்றியடித்த கட்டாயத்தில்,
என் திருமணத்தால்
தொலைந்து போன என் வாழ்க்கை...

சந்தேக மனைவியிடம் தினமும் தோற்றுப்போய்
மீட்கத் துடித்தும் முடியாத என் நிலை...
மயங்கித் தவிக்கும் என் சிந்தை...

இத்தனை ஆண்டுகளுக்கு பின்
வேறொரு திருமண கோலாகலத்தில்
உன்னை மீண்டும் சந்தித்தபோது....

அப்பப்பா என்ன ஒரு வேதனை...
திருமணத்தையும் ரசிக்க முடியாமல்
விருந்து உணவையும் உண்ண முடியாமல்
மணமக்களை வாழ்த்தவும் முடியாமல்...
அப்பப்பா என்ன ஒரு வேதனை...

அன்று உன் மீது நான் கொண்ட காதலை
அறியாத நீ நீயாகத்தான் இருக்கிறாய்

ஆனால்
உன்னை கைப்பிடித்து
நல்ல வாழ்க்கை கோட்டையில்
வாழ்ந்திருக்க வேண்டிய
நான் நானாக இல்லை...

இதுதான் விதியா??
உன்னை பார்க்காமல் இருந்த போதும்
எனக்கு நிம்மதியில்லை...
இத்தனை ஆண்டுகளுக்கு பின்னால்
உன்னை சந்தித்த பின்பும்
எனக்கு நிம்மதியில்லை...
இதுதான் விதியா??
என்ன பிறவி எடுத்தேன் நான்??

எழுதியவர் : சாந்தி ராஜி (21-Feb-15, 11:09 pm)
பார்வை : 896

மேலே