அகமறிவாய் நீ

இலவம் பஞ்சாம் இனிய மனதுள்
இரக்க மின்றி புகுந்ததனால் - நீர்
சுரக்கும் பிஞ்சு இதயத் தசையும்
கல்லாய் மாறிப் போனதுவோ

சார மற்றுப் போக உப்பை
சாலை யோரம் கொட்டியதால் - நின்
சுற்றம் மொத்தம் பார்த்து நித்தம்
கைகள் கொட்டிச் சிரித்ததுவோ

உள்ளம் கொடுத்தேன் உயிர்தனைக் கொடுத்தேன்
உறக்கம் மட்டும் வாய்க்கவில்லை - என்
உள்ளத் தாணி பிடுங்கி எறிய
உதவிக்கொரு கரம் வேண்டிடுமோ

உள்ளே அழுகுரல் வெளியே கேட்டிட
முகத்திரை படமாய் காட்டுகையில் - நீ
என்னைக் கொஞ்சம் உன்னால் போர்த்தி
துடைத்திடு நம்மகம் என்றனையோ

அகமறிவாய் இவ் விகமதில் உய்க்க
மெய்யுடல் தனையே தைத்திடும் - எவனும்
ஆன்மா தீண்ட அனுமதி வேண்டும்
புறங்கை நீட்டித் தள்ளென்றாயே

சடுதிக் கோபம் விட்டொழி யென்றாய்
சலனமில்லாது சபையில் நிற்க - எப்போதும்
விழுந்த விடத்து காலூன்றி மீண்டும்
எழுவாய் ஆலாய் ஊன்றென்றாயே

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (11-Mar-15, 8:22 am)
சேர்த்தது : Patrick Koilraj
பார்வை : 84

மேலே