கல்லாகவே இருக்கட்டும் கடவுள் - சித்ரா

இராமனாக யாரும்
வாழ தேவையில்லை..
ஆசையில்லாத பெண்ணின்
அருகில் செல்லாத
இராவணனாக வாழ்வதில் எத்துன்பமுமில்லை

ஒரு கருஞ்சாபம் விட்டு
அவன் தேகம் முழுவதையும்
தீயில் சிதைத்து விட நான்
ஒன்றும் கண்ணகி இல்லை..

எண்ணிக்கை வைத்துக் கொண்டு
கன்னியை அழிக்கும் அவனை ஏனென்று கேட்க திராணியில்லை
--நின்று கொல்லும் தெய்வத்திடம்
சென்று, என்னால் நீதி கேட்க முடியவில்லை

சிதைந்த பெண்ணை சிங்கம் காத்த கதை படித்தேன்
--சிதைக்கும் அசிங்கம் அவனை
மிருகத்தோடு ஒப்பிடவும் கூட முடியவில்லை

வயது வரம்பில்லாமல் வலியைத் தந்துவிட்டான்
--பிஞ்சென்றும் பாராமல் பிய்த்து எரிந்துவிட்டான்

கெடுத்த பெண்ணின்
உயிரும் உணர்வும் ஒடுங்கி
செய்தி கேட்டு கேட்டு உடல்
நடுங்கிய பெண் நான் இன்று
ஒரு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்
அவனுக்கல்ல..ஒரு ஆண்மகனுக்கு..

நாளை தனியே செல்லாதே
நானுமுடன் வருகிறேன் என்று
நள்ளிரவில் வீடு விட்டு-என்
நடுக்கம் குறைத்த அந்த நண்பனுக்கு..

பார்க்கும் ஒரு பார்வையிலே
பாதுகாப்பாய் உணர வைத்து
பணியில் பெண்மைக்கு பாதை தந்த
அந்த ஆண்மையின் உன்னதமான உள்ளத்திற்கு..

ஓய்வின்றி வேலை செய்து
ஒரு மணியளவில், ஏரினாலும்
ஒழுங்காய் வீடு சென்று சேர்க்கும்
அந்த ஒழுக்கம் தவறாத ஓட்டுநருக்கு..

ஒடுக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக்கும்
எடுக்கப்பட்ட அவளது உரிமைக்கும்
அன்றெ குரல் எழுப்பி அதை
இன்றும் ஒலிக்க வைத்த பாரதிக்கு..

"இந்தியாவின் மகள்"களுக்கு
"பாரதத்தின் புதல்வர்கள்"
பதிலளிப்பார்கள்..

அந்த விடைதனிலே
பெண்ணின் விடுதலையை
அனைவருக்கும் எடுத்துரைப்பார்கள்..

துடிக்கும் போது எந்த கண்ணனும்
துணை வரப் போவதில்லை

கண்ணன் மட்டுமில்லை
கண்ணீர் துடைக்காத அத்தனை
கடவுள்களுமே கல்லாக இருக்கட்டும்

பெண்மையைக் காக்கும் ஆண்மைகள் மட்டும்
அந்த ஆண்மையை ஈன்ற தெய்வங்கள் மட்டும்
இந்த பூலோகத்தில் வாழ்வாங்கு வாழட்டும்..

எழுதியவர் : சித்ரா (11-Mar-15, 9:03 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 204

மேலே