காதலிக்கும் கண்களுக்காக தோழி கூற்று

உன் கண்களால் செதுக்கிய காதல் சுரங்களை ,
உணர்ந்து உயிர் கொடுக்கிறேன் ஒரு பாடலாக,
கவிதைகள் மலர்ந்தது , நல்ல கனவுகள் உதிர்த்தது,
இப்பதுமை மனதில் உன் கண்களின் காதலை கண்டவுடன் !

கண்களுக்கு குரல் கொடுக்கும் கடவுளை தேடினேன் ;
காதல் தான் அந்த கடவுள் என என் இதயம் கூறியது ;
கடவுளுக்கு பணிந்தேன் ; இதயத்தை இடம் மாற்றினேன் ;
கடல் போன்று பரந்த என் மனதில் காதல் எனும் கலங்கரை விளக்காய் உயர்ந்து நின்றாய் .

வண்ணங்களை பிரித்தறியும் கருவி , எண்ணங்களை கவர்ந்திழுப்பதேனோ ;
பிம்பங்களை அறியும் கருவிழி , மாதுவை மலரவைப்பதேனோ ;
காதல் அனலின் நனைகிறேன் உமது குவியப்பார்வையால் ;
மறித்து உன் மார்பில் சாய்கிறேன் உமது குளியப்பார்வயால்;

என் வாழ்வின் இருவகை பொழுதையும் உன் விழியில் விதைதுவிட்டேன்;
எண் வகை மெய்ப்பாட்டை தொலைத்தேன் , உன் கண்கோள் என் மீது கொண்ட உவகையால் ;
முழுமதி மேல் கருவிழி , அதன் மேல் நீர்த்துளியாக நான் ஊற்றெடுக்க விளைகிறேன் ;
பரணி போன்றது உந்தன் கடைக்கண் பார்வை , அணங்கு நான் என்ன செய்வேன் கரிசனம் பூண்டேன் ;

இனி உந்தன் இமைகளின் துடிப்பு எந்தன் இதய துடிப்பு - நிறுத்திவிடாதே !
உன் புருவ முடிகள் எனக்காய் புலர்ந்த பூக்கள் - சிதறவிடாதே !
உன் கருவிழிகள், என்னுள் இருக்கும் கருவறை - சிதைத்துவிடாதே !
உன் கண்ணீர், என் இதயத்தை புனிதப்படுத்திய குருதி - சிந்திவிடாதே !

காதலித்த கண்களே ! இதோ உனக்கு இமைகாளாகின்றேன் ,
ஊழ்வினை தந்த உத்தமன் நீ ! காப்பியமாகும் நம் காதல் இனி ,
கானல் நீர் சூழ்ந்த மேனி , இன்று கண்ணீரால் புதுப்பிக்கப்பட்டுவிட்டது ,
அகத்திணை ஆளும் புறத்தினையே , காதல் மெய்ப்பாட்டை உன் கண்கள் கூறிவிட்டதால் ,
இந்த நங்கை பரிசாகிறாள் உந்தன் மங்கையாக , - கரம்பிடிதுக்கொள் .

எழுதியவர் : திலீபன் சுந்தர் (26-Mar-15, 10:43 am)
பார்வை : 136

மேலே