வேண்டுதல்
ஆல்ப்ஸ் மலையின்
மடியில் பூக்களாக
சிதறிக் கிடக்கிறோம்
எங்களை நுகர்ந்து
செல்லும் காற்று
என்றோ ஒருநாள்
அந்த இறுதி நேர
அவலங்களை
உங்கள் காதில் சொல்லும்.
இன்னும் எங்கள்
வகுப்பறைகளில்
காலியாக இருக்கும்
அந்த கதிரைகளிடம்
சொல்லிவிடுங்கள்
இனிமேல் எங்களுக்காக
காத்திருக்க வேண்டாம் என...
நாளை பற்றிய
எங்கள் கனவுகள்
எங்கள் எதிர்பார்ப்புகள்
ஒரே ஒரு மனிதன்
கைகளால்
தூக்கி எறியப்பட்டது.
எங்கள் அழுகை ஒலி
யார்காதிலும் வீழவில்லை
எந்தக் கடவுளும்
எம்மைக் காப்பாற்ற
வரவில்லை.
எங்களுக்காகப் பிரார்த்தனை
செய்ய வேண்டாம்.
ஒன்று மட்டும் செய்யுங்கள்
உங்களுள் ஒளிந்து
இருக்கும்
உங்களுக்குத் தெரியாமலே
உங்களுடன்
பயணிக்கும்
உங்கள் மரபணுக்களில்
மறைந்து கிடக்கும்
மர்மமான
மனப் பிறழ்வு
அழுக்கை கண்டு
கொள்ளுங்கள்
ஸ்டாலின்
ஹிட்லர் முசோலினி
பொல் பொட்
இடி அமீன்
வரிசையில்
இந்த விமானி
லூபிட்ஸ்
வரை இன்னும்
எத்தனை பேர்
எதுவும் அறியாத
எங்கள் போல் அப்பாவி
உயிர்களை உருவி ஏறிய
காத்திருக்கிறாகள்
கொடிய கரங்களுடன்.
அவர்களை இனம் கண்டு
கூறுங்கள்..
அவர்கள்
உங்களில் ஒருவனாகவும்
இருக்கலாம்...
அடையாளம் காணுங்கள் ...
அதுவரை இந்த
மலையின்
முகடுகளில்
சமவெளிகளில்
புல்வெளிகளில்
பூத்துக் கிடக்கிறோம்......