காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்பு
பரட்டைத் தலை
நாற்பதை தாண்டிய
வயது வரம்பு
ஒரு இடத்திலாவது
கிழிந்திருக்கும் லுங்கி
கொஞ்சமாய் தாடி.
இவர்...
ஒவ்வொரு
மழைக்கால
ஆரம்பத்திலும்
மறக்காமல் வரும்
குடை ரிப்பேர்க்காரர்..
வெள்ளை முடிகளை
பிரசவிக்க
துடித்துக்கொண்டிருக்கும்
தலை
முப்பதைத் தாண்டிய
வயது வரம்பு.
பெரும்பாலும் லுங்கி
சிலசமயம் நீள்கால் சட்டை.
இவர்...
பள்ளிகளின் வாசல் முன்
அட்டைகளால் மதில்கட்டி
வண்ணக் கோழிக்குஞ்சுகளை
விற்பவர்.
ஒரு பல் உடைந்திருக்கும்
சைக்கிள் உருட்டியே வருவார்
எப்போதும் நெற்றிப்பட்டை
கேரியரில் ஒரு மூட்டை.
இவர்..
ஒலிப்பெருக்கி
குரல்கொண்ட
கேக்குப்பொடிக் காரர்.
மடித்த வேட்டி
வெள்ளைச் சட்டை
ஒழுகும் வியர்வை
கழுத்துப்பட்டையில்
அழுக்குபடியா உத்தியாய்
ஒரு கைக்குட்டை.
இவர்..
வீடுவரை
மூட்டையில் தூக்கிவந்து
இரகம் இரகமாய்
புடவை விற்பவர்.
கூனல் முதுகு
முதுமையின் ஓவியமாய்
உடம்பில் சுருக்கங்கள்
இரவிக்கை அணிந்து
பழக்கமில்லாதவள்.
இவர்..
காலை பத்தரை
மணியளவில்
எங்கள் வீட்டுத்
திண்னையிலமர்ந்து
ஊருக்கு மோர் விற்கும்
பாட்டி.
இவர்கள்
என்னைவிட்டு
காணாமல் போனவர்களில்
சிலர்.
--கனா காண்பவன்