தோள்கள்

அமரயிடமற்று
இறக்கை வலிக்க
அலைந்தாலும்
தயைகூர்ந்தெனக்கு
இரவல் தோள் அளிக்காதீர்கள் !

மீனாட்சிக் கிளியமர்விலெனக்கு
இறைவித் தோளே
வரமாய் கிடைப்பினும்
இரவல் தோள் வேண்டாம் -
எனக்கே சொந்தமாக்கிக் கொள்ள
நானமரும் தடந்தோள்களை
என்னையே
தேர்ந்தெடுக்க விடுங்கள் !

வலுக்கட்டாயமாக
அமர வைக்கும்
தோள்களின் பிடிமானங்களில்
இரவலளித்த மமதையின்
பச்சாதாப வழுக்கல்கள்
அமர்வதற்கேற்றதல்ல !

தோள்களின்
இடைவெளிகள்
அமர்பாதங்களின்
சுவடுகளால்
நிரப்பப்பட்டிருக்கையில் -
பழக்கப்பட்ட வரையறைக்குள்
புதியயிடத்தில்
கால் பதித்தலென்பது
தன் தடங்களை
ஸ்தாபித்தலின்
பிரதிபலிப்பென்கையில்
எனது
பாதங்களின் பதியமிடலில்
எதையாவது தானமாயளித்தென்னை
கர்ணக் கடனாளியாக்கி
தர்மமழிக்கும்
துரியோதனச் சூழ்ச்சிக்காளாக்கிவிடாதீர்கள் !

எனக்கொவ்வாத
விரிதோள்கள்
இளைப்பாறல் வேளையிலும்
இளைப்பாறா சுவாசத்தை
நினைப்பிலிருந்து
பின்னிழுத்துப் போகுமாயின்
பசுந்தளிராய் கிளைக்கான
முனைகள் தளிர்க்கும்
நிர்பந்தமற்ற
நிஜ புஜத்திற்கே
வாழ்நாள் முழுதும்
வட்டமடிக்கும்
என் தேடலின் சிறகுகள் .....

எனவே எனதுதொலைதூர
தேடலினூடே எவருமெனக்கு
தோள் அருள்பாலிப்பு
செய்யாதிருப்பீர்களாக .

எழுதியவர் : பாலா (18-Apr-15, 7:28 pm)
பார்வை : 88

மேலே