யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 21 கவித்தாசபாபதி

தூரத்துப் பூவொன்றின் வசந்த விழா

உன் குரலைக் கேட்கின்றேன்
உருகி உருகி கரைகின்றேன்
உணர்ச்சிநதிக் கரையோரம் நிற்கின்றேன்

---உயிருக்குக் குரல்கொடுத்து -கவிதை
---ஓடத்தில் பாடுகின்றேன்
---தொலைதூரக் கடற்கரையில் இருக்கும்
---கருப்புமலர் நந்தவனக் குயிலுக்கு-
--- நான்
---கவி சுமந்து போகின்றேன்

தூரத்துப் பூவொன்றின்
வசந்த விழா காட்சிகளை
இருள்திரைமேல் என் தூரிகை தீட்டத் தீட்ட,
---கையெழுத்துப் போட்டுப் பழகும்
---கன்னிக்கை விரலால்
---பாலைவனத்திற்கும் வர்ணம் எழுதிய
---ரவிவர்மாவின் படத்தை வரையும் வெட்கத்தில்-நான்
வார்த்தைகளில் தவிக்கின்றேன்

27 ஆண்டு கால சிறை வாசத்திற்குப் பின் சரித்திர நாயகன் நெல்சன் மண்டேலா சுதந்திரக் காற்றை சுவாசித்தபோது தமிழின் முன்னணிக் கவிஞர்கள் பலரிடம் கவிதைகள் கேட்டு வாங்கி "கறுப்புச் சூரியன் " கவிதைத் தொகுப்பு நூல் வெளியிட்டேன். நூலின் தலைப்பைத் தந்தது வைரமுத்து .

கவியரசர் இளந்தேவன், மு.மேத்தா, முத்துலிங்கம் , புலமைப்பித்தன், முத்துராமலிங்கம், துறவி, இன்குலாப், சிற்பி பாலசுப்ரமணியம், சக்தி கனல் , அப்துல் ரகுமான் , வைரமுத்து , ஈரோடு தமிழன்பன், ஆலந்தூர் கோ. மோகனரங்கன், எஸ். அறிவுமணி, சௌந்தர கைலாசம் என்று பலரும் இணைந்த அந்நூலின் முதல் கவிதையின் துவக்க வரிகள்தான் மேற்கண்டது .. நா. காமராசனின் ஓவிய வரிகள்.)

"பாலைவனத்திற்கும் வர்ணம் எழுதிய
ரவிவர்மாவின் படத்தை வரையும் வெட்கத்தில்....." என்ற வித்தியாசமான அழகின் சித்தரிப்பில் லயித்துப்போய் அக்கவிதையிலேயே கரைந்துவிடுகிறது மனம்.

ரவிவர்மாக்களை, சரித்திர நாயகர்களை ,, காப்பிய மாந்தர்களை யுகப் புருஷர்களை, புராண இதிகாசப் பாத்திரங்களை , தொட்டுப் பேசும் உவம, உருவக கவிதை வரிகள் ஒரே வாசிப்பில் ஓவியமாக மனதில் பதிந்துவிடும் வசீகரம் கொண்டவை…வாழ்நாள் முழுவதும் நீங்காத உயிர்ச் சித்திரங்களாக நெஞ்சில் நிலைத்து வாழ்பவை . .

மனிதன் நடந்து வந்த சுவடுகள் மகத்தானவை. கோடானுக்கோடி உணர்வுகளின், ரசங்களின், நயங்களின், , கண்ணீரின், வெறியின், சூழ்ச்சிகளின், தியாகங்களின், சாதனைகளின், வேதனைகளின் தடங்கள் அவை. எனவே தான் அந்தத் தடங்களின் சிறு புழுதியையும் எடுத்துப் பூசிக்கொள்ளும் கவிதைகள் சித்திரங்களாய் பதிந்துவிடுவதில் வியப்பேதும் இல்லை.

மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் போலித் திருவிழா போல் வரும் தேர்தலை சித்தரிக்கும் அப்துல் ரகுமானின் உருவகம் புதுக்கவிதையின் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

"புறத்திணை சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி "

நளவெண்பா காவியத்தின் சுயம்வரக் காட்சி உருவகத்தில் நவபாரதத்தின் தேர்தலை நையாண்டி செய்யும் இக்கவிதை, நகங்கள் நீண்டு இன்றைய கபட அரசியலின் முகத்திரையைக் கிழித்துவிடுகிறது .

காற்றில் கலந்திருக்கும் மாசுத்துகள்கள் போல எங்கும் கலந்திருக்கும் ஊழல்....! இங்கு திருமணம் கூட ஊழலில்தான் துவங்கும் சமூக அலங்காரத்தில் பாவம் எத்தனை சகுந்தலைகள் முதிர்க்கன்னிகளாகவே, கடந்துபோன வசந்த காலங்களை எண்ணி கண்ணீர் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

"நானும்
சகுந்தலைதான்
கிடைத்த மோதிரத்தை
தொலைத்தவள் அல்ல..
மோதிரமே கிடைக்காதவள் (மு.மேத்தா )

காளிதாசனைப் படிக்க முடியாமல் போனால் என்ன .....கண்ணீர்த் திரைகளுக்கு முன் சகுந்தலைகளை கவிதையாக்கி மனசைப் பிழிகிறார் மு.மேத்தா .

ஊட்டியிலிருந்து ம. பிரபு என்னும் ஒரு புதுக் கவிஞன் 25 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற கண்ணீர் வாழ்க்கையை புராண உணர்வுகளால் பின்னிக்கொண்டிருந்தான். "காட்சிக்கு வராத கதம்பங்கள்" என்று பல பிரசுரங்களை சமூக அரங்கில் அச்சிட்டுப் பரப்பி விழிப்புணர்வை விதைத்துக்கொண்டு இன்றும் சமூக போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

அடைப்பட்டு அடைப்பட்டு
காலப்போக்கில்
சிறகடிக்க மறந்தவை அல்ல
இந்தப் பறவைகள்......
---சிறகுகள் இருப்பதையே
---மறந்தவைகள் ...!

தட்சணைகள் கேட்கும்
ராமர்களின்
பாதங்கள் வீதியில்
பட்டாலே போதும்
---கல்லாகித்தான் போகிறார்கள் -இந்த
---ஜன்னலோரத்து அகலிகைகள் " (ம. பிரபு, ஊட்டி )

ஜன்னல்களில் எத்தனை அகலிகைகள் ..! பொருளாதாரம் விண்ணைத் தொட்டாலும், புதுயுகம் பூத்துக் குலுங்கினாலும், வாழ்க்கைத்தரம் நாகரிகச் சிறகுகளோடு உயரப் பறந்தாலும், , அவரவர் சக்திகளுக்கேற்ப வேட்டைகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனினும், மறுமலர்ச்சி இலக்கியங்களால், , இவை போன்ற வலி சுமந்த கண்ணீர்க் கவிதைகளால் ஒரு சில மன மாற்றங்கள் நிகழ்வதை பல ஊடகங்களின் வாயிலாகவும், நேரிலும் தெரியவரும்போது இத்தகைய படைப்புகள் தம் பிறவிப் பயனை எய்திவிடுகின்றன என்றே தோன்றுகிறது.

காயப்பட்ட மனதில் கவிதைகள் களிம்புகளாக பூசப்படுகின்றன...எனவே கவிதைகள் மேதாவித்தனத்தைக் காட்டும் மாயா ஜாலங்களையும் இருண்மையும் கொண்டிருப்பதைவிட
காயங்களுக்கு களிம்பாகவும் ஒடிந்து போனவருக்கு சிறகுகளாகவும் மனதின் புல்வெளியில் பட்டாம்பூச்சிகளாகவும் உராய்வில் பற்றிவிடும் தீக்குச்சிகளாகவும் தெளித்தால் ஓவியங்களாகிவிடும் வண்ணங்களாகவும் .. இப்படி இப்படியாக இருக்கவேண்டும்.

இது ஒருவித ஓவிய வகை.. ....புராண, இதிகாச வரலாற்று வண்ணங்கள் தொட்டு தீட்டப்படும் தொன்ம வசந்தங்கள்.

மூன்று பெண்களை கரையேற்ற முடியாத பெருமூச்சில் "விலை போகாத வைரங்களோடு " காத்திருக்கும் ஒரு சராசரி தந்தையின் கண்ணீரை ம. பிரபு எப்படி வரைகிறார் பாருங்கள் கோடுகளாக ......ஒரு கோலமாக ...!

"ஒரு
மரபுக் கவிதையே
அரங்கேறாததால் தான்
இரு புதுக்கவிதைகள் கூட
பார்வைக்கு வராமல்
பதுங்கிக் கொள்கின்றன
எங்கள் வீட்டில்...

இந்தச் சீதைகள்
கோட்டைத் தாண்டுவதே இல்லை,
கோடே இல்லாததால் ....." (ம. பிரபு, ஊட்டி)

கவிதை வழி பாய்ந்து வந்து இதயங்களில் வீழ்கிற அணையிட முடியாத கண்ணீர் இது ....! ஆறுதல் எங்கே கிடைக்கப் போகிறது?

தமிழ்ப் புதுக் கவிதையின் வராலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிற்பியின் "அகலிகை காத்திருக்கிறாள்" நெடுங்கவிதை ஓர் அற்புதமான வனாந்திர சித்திரம் . ..கவிதையின் நுட்பம்.!

வாலியின் தூரிகை வண்ணத்தில் வந்து விழும் ஓவியத்தில் தேவ தூதனை உயிர்த்து வரச் செய்கிறார். . எப்படி பாருங்கள்.

"மரங்கள் தங்களுக்குள்
முணுமுணுத்துக் கொண்டன

'இவர்கள்
நம்மை உபயோகித்து
பல சிலுவைகள் செய்துவிட்டார்கள்
ஆனால்,
இவர்களை உபயோகித்து
ஒரு கிறுத்துவை ...?" (வாலி )

மரங்களை ஒதவிட்டு மானுடத்தை யாசிக்கும் மகத்தான இக்கவிதை வரியின் கேள்வியில் மனசாட்சியான பதில்கள் வரட்டுமே.. அந்த நேயமான மன சாட்சியின் ஈரம் தான் "கிறுத்து"....வாலியின் படைப்பில் !

சூழ்நிலைகள், வளர்ப்பு முறைகள் ,பெற்றோர்களின் அணுகுமுறைகள், இவற்றின் விளைவுகளை ஒரு கச்சிதமான சித்திரம் வரையவேண்டியிருந்தது ஒரு புதுக்கவிஞனுக்கு. எங்கே போவான் வண்ணங்கள் தேடி...அதே கிண்ணம் ... காப்பிய வண்ணம்.....

"மாசாத்துவான் வீட்டில்
பிறந்திருந்தால்
மாதவியும்
கண்ணகிதான் " ( யாரோ)

(மாசாத்துவன் ..கண்ணகியின் தந்தை )

கவிஞர் ம. பிரபு அடிக்கடி சொல்வதுண்டு.. "கவிதை வரிகளை கரும்புத் துண்டுகள் போல் "சதக் சதக் " என்று வெட்டிக்கொடுக்க வேண்டும் . துண்டுகள் அளவில் நீண்டும், குட்டையாகவும் இருக்கலாம் . ஆனால் அது ஒரே வெட்டில் இருக்கவேண்டும். " புராண உருவகங்களில் உருவாகும் கவிதை வரிகள் கரும்புத் துண்டுகள் போல ஒரே வீச்சில் வெட்டப்பட்டிருக்கும்.

பாரதியின் "பாஞ்சாலி சபதம் " காவியத்தில் சிலிர்த்துபோன ஒரு புதுக்கவிஞன் பாரதிக்கு யாருமே தராத பரிசொன்று தர விழைகிறான். .அவன் மயங்கி எழுதும் பாராட்டு யாருமே இதுவரை பாரதிக்குத் தராதது.

"எழுத்துக்களை வேலாக்கி
எண்ணங்களை வாளாக்கி - இவன்
பாஞ்சாலி சபதம்
படைப்பான் என்று
முன்னமே தெரிந்திருந்தால்,
துச்சாதனன்
துகிலுறியாமலேயே விட்டிருப்பான் “ (நா. திருநாவுக்கரசு )

இந்தக் கவிதை வரிகளின் கம்பீரத்தைத் தந்திருப்பது துச்சாதனன் தோள்கள் தானே?

கவித்துவமான பல திரையிசை பாடல்களில் மிகவும் உயரிய தத்துவங்களைத் தர கண்ணதாசனுக்கு பெரிதும் துணை நின்றது இவ்வகை உத்தி முறைதான்.

"பரம சிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது "கருடா சௌக்கியமா?"
யாரும் இருக்கும் இடத்தில் இருந்திருந்தால்
எல்லாம் சௌக்கியமே "கருடன் சொன்னது"
அதில் அர்த்தம் உள்ளது....."

போன்று பலநூறு புராண ,இதிகாச, ஆன்மீக அமுதங்களை பாடல்களில் கரைத்து பருக தந்தவர் அவர். இவ்வகை உத்தி முறைகள் புதுக் கவிதைகளில் முக்கிய அங்கம் பெற்றிருப்பதற்கும், அழகான வெற்றிகள் பெற்றதற்கும் கண்ணதாசன் ஒரு முன்னோடியாக இருந்திருக்கக் கூடும்.

கோட்சே என்ற வரலாற்றுப் பாத்திரத்தை ராம்வசந்த் எப்படி வலிமையாக கையாள்கிறார் பாருங்கள்.

நீங்கள் கொடுக்கும்
ராஜேந்திரனின் வாளோ
கோட்சேவின் துப்பாக்கியோ
ஏதோ ஒன்றை எடுத்து
உங்கள் எதிரியை
நான் முடித்தவுடன்

என்னை
உங்கள் தலைவனாக
ஏற்றுக் கொள்வீர்களா?
....
அல்லது
உங்கள் எதிரி
என்னை முடித்துவிட்டால்
உங்கள் சுடுகாட்டில்
என்னை புதைப்பீர்களா? (ராம்வசந்த் )

மத வாதத்தை, மத மாற்ற பின்னணிகளை, சாதீயத்தை, சக்தி வாய்ந்த சொற்கள் கொண்டு சாடுதற்கு இங்கு ராஜேந்திரன் வாளும், கோட்சேயின் துப்பாக்கியும் தேவைப்பட்டிருக்கிறது ராம்வசந்திற்கு .

26 ஆண்டுகளுக்கு முன் உதகை கலைக் கல்லூரி தமிழ் மாணவன் ஒருவன் 'கவிபூரணி ஜேம்ஸ் " சிலம்புகளை உரசிவிட்ட கவிதை ஒன்று "உரசல்கள் " என்னும் தலைப்பில்.. இன்று ஊட்டியில் ஒரு மேல்நிலை பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிகிறார்......

" கோப்பெருந்தேவியின்
சிலம்பில்
முத்துடன் முத்து உரச
அது
கோவலன் மார்பில்
ரத்த வியர்வை வியர்த்தது.

அதுவே
மரணதேவியின்
முத்துமாலையானது.

கண்ணகி ஆவி
கக்கிய மாணிக்கப்பரல்
பூமியில் பட்டு உரசியதும்
விக்கிக்கொண்டது .

அது
பாண்டியன் உயிரைப்
பருகிக் கொண்டது

மாதவி சிலம்புதான்
மாதவம் செய்தது
கோவலன் சலங்கையைக்
கொஞ்சிய மூச்சிலே
மேகலை பிறந்தது-மணி
மேகலை பிறந்தது (கவிபூரணி ஜேம்ஸ்)

புதுக்கவிதையின் மூன்றே கண்ணிகளில் பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை செதுக்கிய கவியழகு.! அமரர் கே.சி.எஸ் அருணாச்சலம் அந்நாளில் உதகை பூங்காவில் இக்கவிதையை நெஞ்சோடு தழுவி பாராட்டியதும், தாமரை இதழில் சிறப்புக் கவிதையாக பிரசுரித்து கௌரவித்ததையும் இங்கு கல்வெட்டென பதித்து மகிழ்கிறேன்.


உலகளாவிய கவிதைகளின் தாக்கங்கள் பல பரிமாணங்களில் பூத்து வந்தாலும் , வடிவங்களுக்கு விதம் விதமாக சிறகுகள் முளைத்திருந்தாலும், அவற்றின் இறகுகள் பண்டைய பெருமைகளின், நேற்று வரையிலான வரலாறுகளின் மகரந்தம் தொட்டு பறக்கும்போது ….அந்தத் தொன்ம வசந்த சிறகுகளின் அழகே தனி அழகுதான் ...! அவற்றின் சிறகடிப்புகளே பரவசம்தான்

(தொடரும்)

எழுதியவர் : கவித்தாசபாபதி (23-Apr-15, 9:03 am)
பார்வை : 509

புதிய படைப்புகள்

மேலே