வரலாற்று வர்ணங்கள் - 2 - தேன்மொழியன்
வரலாற்று வர்ணங்கள் - 2
~~~~~~~~~~~~~~~~~~~~~
மேம்பால நரம்புகளை
வானமாக்கிய வண்டிகளில்
எரிபொருள் என்னவென்று
உயிரிழந்த உடல்களின்
நுரையீரல் நுகரும் ...
சமையறை உணவுகளில்
சரிவிகிதமில்லா சத்துக்களால்
சரிந்து வீழ்ந்த சரிரீரங்களில்
எண்ணற்ற நோய்களின்
பின்னிப் பிணைந்த தழும்புகள்
பிறக்கும் பிள்ளைக்கும் பரவும் .
இருசக்கர வேக வினையோடு
இசைக் குடிக்கும் செவிக்குள்
இறந்த உடலை உள்வாங்காது
துப்பும் பாடல் துவங்கும் ...
இணையம் துண்டித்த
இரவொன்றில்... உறங்காத
இளைய மூளைச் சவ்வுகளில்
இன்பம் முழுக்க முடங்கும் ...
தேர்ச்சி தகவலில்
முயற்சி முறிந்தவாறு
மதிப்பெண் உயர்வாகிய
சுயநல சுவடுகளில் ...
மனிதம் மட்டும் மடியும் ..
- தேன்மொழியன்