பரப்பினன்
பஞ்ச பூத கவிதை வரிசையில் - காற்று
கனத்த மௌனம் கொண்ட
நிமிடம் ஒன்றில்
உடல் தழுவி சென்றது காற்று.
மெல்லிய குரலில் அவைகள்
பேசிக் கொள்ளத் துவங்கின.
‘நீ யார்’ என்கிறேன்.
‘நானே நீ. நான் அற்று நீ ஏது’ என்கிறது.
‘இது நாள் வரை அறியவில்லை உன்னை’ என்கிறேன்.
‘அறியப்படாததால் நான் அற்று நீயா’ என்கிறது.
‘உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள் கொடி உறவு’ என்கிறது
‘கனமற்று இருப்பதால் உங்களை அறிய முடியவில்லையா’ என்கிறேன்.
கணமற்று இருப்பதால் தானே அறிகிறாய் என்கின்றன.
'யாவரும் உங்களை அறிவார்களா,
அறியும் தருணம் எது' என வினாக்கள் விரைகின்றன.
தொலை தூர மயான காற்றில்
கலந்திருக்கிறது பிண வாடைகள்.
* பரப்பினன் - பரப்பினள் என்பதன் ஆண்பால் - ஞானிகளால் ஆராயப்பெற்ற பரந்த இடமாகவிளங்குபவன், திருமந்திரம் – 1070