படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை -காவல் மீறிய வேலி
காவல் மீறிய வேலி...
அப்பாவின் ஆறுதல்களான அரவணைப்புகள்
அம்மாவின் மரணதிற்கானதல்ல
என்பதை அவள் அறிந்திருக்கவில்லை..!!
பூப்படைந்த சில தினங்களுக்கு பிற்பாடுகளில்
அப்பாவின் அன்பிற்கு அளவில்லைதான்...
அவளுக்கு பிடித்தமான இசைக்கருவியோடு
கேட்டதெல்லாம் கிடைத்தது
கேட்காத முத்தங்களும் சேர்த்து... !!
அம்மாவை காவு கொண்ட இல்லம்
தேவையில்லை என்றபோது
அப்பாவின் பாசத்தை வியந்தே போனாள்...
அம்மா இறந்தது அப்பாவினால் என்பதை
அறியாத அப்பாவியாகவே அவள்...
புதிதாக வாங்கிய தங்க சங்கலியை
அப்பா அவள் கழுத்தில் அணிவித்து
அதனை தொடுவதாக அவளை தொட்டபோதும்
அவள் உணரவில்லை அந்த தொடுதலை...!!
ஆள் அரவமற்ற புதிய வீட்டில்
அவளை வேட்டையாடியதன் முடிவில் முடிந்திருந்தான்
அப்பாவாகிய அம்மாவின் கணவன்
அவளை கொலைகாரியாக்கிவிட்டு...!!
முகாரி இசைத்து ஓய்ந்து போனவள்
தொலைத்துக் கொண்டிருக்கிறாள் உயிரை
உண்ட விடத்திற்கு நன்றி சொல்லி...!!