படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - பாசமுள்ள பாட்டிக்கு

காவிரி ஆற்றோரம் கைப்பிடித்துப் போட்டநடை
பாவியென் நெஞ்சைப் படுத்திடுதே ! - ஓவியமாய்ச்
செல்லும் நதியலையே! சீக்கிரமா யென்நிலைமை
சொல்லிடுவாய் பாட்டியிடம் சோர்ந்து .

அந்நாள் நினைவுகள் ஆர்ப்பரித்து வந்திடுதே
எந்நாள் இனிக்காண்பேன் என்பாட்டி? - சிந்திட்டக்
கண்ணீரும் காற்றினில் காய்ந்துலர்ந்துப் போயிற்றே
மண்பிரிந்தாய் என்னை மறந்து .

தாயாகித் தந்தையுமாய்த் தாங்கி வளர்த்தவளே
மாயாவி போல்மறைந்த மாயமென்ன? ஓயாமல்
பாடுபட்டப் பாசப் பறவையே எங்குனைத்
தேடுவேன் பித்தந் தெளிந்து .

மேற்கல்வி கற்றுநீ மேன்மையுற வேண்டுமெனப்
போற்றி வழியனுப்பிப் போனாயே !- கூற்றுவனுக்
கென்ன அவசரமோ கேளாமல் கூப்பிட்டான்
என்செய்வேன் நீயின்றி யான் ?

வாசிக்கத் தந்த வயலின் அழுகிறதே
நேசித்த சொந்தமும் நீயென்றே! - ஆசிகள்
வேண்டித் தவமிருப்பேன் விண்ணி லிருந்தாலும்
தூண்போல் சுமப்பாய்த் தொடர்ந்து .

வாட்டும் குளிரிலும் வாடா நினைவுகளால்
பாட்டியுன் நற்பெருமைப் பாடிடுவேன் - சூட்டிடுவேன்
வெண்பாப் புகழாரம் விண்ணெட்டக் கேட்டவுடன்
வெண்ணிலவாய் வந்தென்னை வாழ்த்து !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-May-15, 8:07 pm)
பார்வை : 130

மேலே