கனவு
ஆங்கு ஒரு பூமி
ஆள் நடமாட்டம் அதிகமில்லை
தெரிந்த உருவம்
கடந்து போக
கருப்பு வெள்ளையில்
காட்சி நடந்தது ...
பேச்சு தொடங்கியது
சாலையோரத்தில்
முடிந்ததோ
மலை உச்சியில்
ஆவி கூட
நான் நடைபோட
அச்சமில்லை துளிகூட.
பஞ்சு மேகம்
எனை சுமக்க
நெஞ்சு துடிப்பு
தாளம் போட
அடுத்த காட்சி
அரண்மனை அரியாசனத்தில்
அரசன் எவனோ தெளிவாயில்லை
இருக்கை விட்டு
எழுந்த கணமே
இருந்த இடம் என் வீடு...
உரிமையோடு
உள்நுழைந்தால்
இருந்ததோ
ஒளி ஒதுக்கிய இருள்
ஓரத்தில்
கருமையில் தெரியும் கருப்பு
அச்சத்தில் நெற்றி நனைய
ஆர்வத்தில் நெருங்கி சென்றேன்
பெண்ணொருத்தி
பிள்ளைக்குப் பால் கொடுத்தாள்
கண்ணீர் கண்ணோடு ..!
எங்கோ பார்த்தவள்
மாரை வெட்டி வீச
அதிர்ந்த நான் நடுங்கிப்போனேன்...
ஓட்டம் பிடித்தவள்
நின்ற போது
வயல்வெளியாய் இருக்கக்கண்டேன்
முத்துப் புன்னகை
நான் தூவ
அரக்கனின் கோர உரு
பூச்சிக் கொல்லி மருந்து தூவ
பார்த்த என்னை
யாரோ அழைக்க
திரும்பினேன்
பச்சை வயல்வெளி மாறி
பாம்பு படம் எடுக்கும் காட்சியாகி
என் மூசுக் காற்றின் வேகத்தில்
ஆயிரம் சைக்கிள் சக்கரம்
காற்றால் நிரம்பும்...
கனவா..?
கிள்ளிப் பார்த்தேன்
வலித்தது கனவிலும்...
பாம்பைக் கடந்து
பாதையில் நான் நடக்க
மூவர்ண கொடியில்
உடை உடுத்தி
அழகு பெண்ணொருத்தி
முகத்தில் இரத்தம் சிந்த
முள் காட்டில் ஓடுகிறாள்
பல மதத்தின் பெயர்களும்
பல மொழியின் குரலும்
அரசியல் கட்சியும்
பதவிப் பெயரோடு பல நாற்காலியும்
துரத்தி ஓட...
கற்பைக் காக்க
அவள் ஓடுகிறாள்
"நான் பாரத அன்னை"
என்று சொல்லிக் கொண்டே...
என்னுருவே இல்லாது
கிளியாகி காண்கிறேன் காட்சியை...!
அரிவாளால்
குறிபார்த்து
மாரிழந்த பெண் நிற்க
அவள் காலடியில்
பச்சைவயல் படமெடுத்து நிற்க
முள் காட்டில் ஓடியவள்
அரிவாளாய் மாறி வந்தாள்
என்னை வெட்ட..
தப்ப எண்ணி தலையசைத்தேன்
அப்படியே கண்விழித்தேன்
கலைந்தது கனவு
துரத்துது காட்சி
காரணம் சொல்ல
வருவாளா அவள்...?