எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து

இரவுகளும் பகல்களும்
கரைந்து , கரைந்து
காலம் நகர்வதை காட்டியதோ?
அண்ட சராசரங்கள், பால்வீதி நர்த்தனங்கள்
என் முடக்கிய கைகளின் பிடியிலோ ?
ஒரு மேல்நோக்குப் பார்வையிலே தாவி
எழுத்துச் சிறகுகளால் கற்பனைக் கலமேறி
எதிர்பட்ட சூனியத்தின் திரை கிழித்து
பலம் கொண்டு உயிர்ப்புடனே எழுகின்ற
ஞாயிறென மரணத்தையும் தாண்டி
விசுக்கென்று பல கோடி காதங்கள் கடக்கின்ற
கற்பனை மட்டுமா ..என் சொந்தம்..?
கிணற்றுக்குள் தவளை .. நதியின் பெருவெள்ளம்
கோலோச்சும் கொடுமைகள் பலவும் எண்ணப் புரவியிலே
எட்டிப் பாய்ந்து தரையினில் கால் படாது
தாவி பறக்கின்ற பலமும் கொண்டதன்றோ சிந்தனைகள் .
அவை யாவும் சேகரிக்கும் பெரும் பயணம்
ஏழுலகம் தாண்டி விரைகின்ற எழுத்து பயணம் ..
ஒடிந்து போக இது முருங்கைமரக் கிளையல்ல..
தேய்வதற்கு இது நிலவுமல்ல..
ஒடிக்க முடியாததும் தேய்மானம் இல்லாததுமான
ஒளியின் பிரவாகம்..
தேவி..!..கலைமகளே !
மரணமெனுமூரில் தடைப்படும் நேரம் வரை
துணை வருவாயோ..நீ?
எமனென்னும் யாளியின் வாய் நான் நுழையுமுன்
ஒரு கவிதையேனும் உருப்படியாய் எழுதிட அருள் செய்..
காளிதாசனுக்கும் கவி காளமேகத்திற்கும்..
அருள் செய்த நீ..
இந்த ஈரமரம் அடுப்பெரிக்க கூடுமென
அருள் செய்வாய் நீ!

எழுதியவர் : கருணா (13-May-15, 4:31 pm)
பார்வை : 80

மேலே