பறை
பறையின் ஒலி
எழுவது தோலிலிருந்தா
மாட்டிலிருந்தா என
அறிந்து கொள்ள
ரகசியமாய் மாட்டின்
தோலை அகற்றி
உள்ளே எட்டிப்பார்த்தேன் ...
முதலிலொரு இனம் தெரிந்தது
அதனைத் தாண்டி
நதியோரம் வாழ்ந்த
ஆதியினத்தின் ரத்தம்
அதனுள் ஓடிக்கொண்டிருந்தது -
மேய்ப்பனான ஒரு தெய்வம்
எருதொன்றின் முதுகில் அமர்ந்து
கொம்பூதியவாறு
வந்து கொண்டிருந்தது ...
பதறிய மனத்துடன்
தோலை மறுபடியும் போர்த்தி விட்டேன் ...
இப்போது
ஒவ்வொரு முறையும்
பறையொலி
கேட்கும் போதெல்லாம்
நான் மாட்டின் நடுவே உள்ள
குருதி கொட்டும் பயங்கர
கதறலுக்குள்
போய் விழுந்து விடுகிறேன் ...
உரித்து காயவைத்து
அனலில் வாட்டி
இழுத்துக் கட்டப்பட்ட
உயிருள்ள பறையில்
மாட்டின் கதறலொலி
கேட்கிறபோதெல்லாம்...
வண்டியிழுக்கையில்
சாட்டைக் கம்பு கொண்டு
அடித்து ஓட்டுகையில்
கத்தாத மாடு
செத்த பிறகு கத்துவதாகவே
படுகிறதெனக்கு ....
அப்போதும் உரியவனுக்காக
அடிவாங்கி...
இப்போதும் உரியவனுக்காக
அடி வாங்குகிற மாடு
தன் தோல்வழிச் செய்தியாய்
சொல்ல இயலாத
ஓராயிரம் செய்திகளை
பறையொலியாய் ஒலிக்கிறது .