வேணாம் வாப்பா போலாம் - தேன்மொழியன்

வேணாம் வாப்பா போலாம். .
~~~~~~~~~~~~~~~~~~~~~~

மஞ்சள் சட்டையில் வந்த
நான்கு வயது சிறுவனை
வழக்கம் போல..நான் ரசிக்க ..

வீல் சேரில் அமர
அவன் அவ்வளவு உயரமில்லை ..
அப்பாவின் மடியில்
அம்சமாய் அமர்ந்தான் ..

சட்டென்ன கத்தினான் ..
அப் ...பா ...வேண்டாம்பா ...
கத்தியைப் பார்த்ததும் ...

டேய் இருடா ....கொஞ்ச நேரம்
அப்பா அவனை அமுக்க ...
"நா உக்கார மாட்டேன் .."
குதித்தே விட்டான் கீழே ..

மீண்டும் தூக்கிப் பிடித்து
அழுத்தி நிறுத்த ..அலறி
அழுதே விட்டான் ...

" இருப்பா...மாமா
மெதுவா வெட்டுறேன் .
நாளைக்கு ஸ்கூல் போனா
பேட் பாய்னு சொல்வாங்க .."
சமாளித்தார் சலூன் சத்யா ...

அதெல்லாம் சொல்ல மாட்டாங்க ..
நான் குட் பாய் தான் ...
எழுந்து நின்று விட்டான்
அப்பா மடி மீது ...
எப்பா ...வா ..போலாம் ..

வெட்டாம போன
வீட்டுக்காரம்மா திட்டும் ..
சலூனுக்கு வெட்ட வந்த
பெத்த புள்ள கொத்தும் ..
அருகில் ஒருவர் ..

கத்தரி காதருகே செல்ல ...
வேணா ...வேணா ...
வூட்டுக்கு போலாம் பா ...

முன்னாடியும் வேணாம் ..
பின்னாடியும் வேணாம் ..
போதும் ....போதும் மாமா ...
நான் போறேன் ..தேம்பினான் ..

தொண்டை விக்கி
மூச்சு திணறும் என்பதால்
சத்யா ...அப்படியே விட்டு விட்டார் .

அப்பா ..நூறு ரூபாயை
அவனிடம் தர ...அவனோ
அதை அப்படியே
சத்யா சட்டைக்குள் திணித்து
சட்டென விரைந்து கத்தினான் ..

வா....ப் ....பா ..
உன்ன அம்மாகிட்ட சொல்றேன் ..
இவங்கள வைச்சி ...என்
காத அறுக்க பார்க்குற நீ ...

நில்லாமல் சென்ற அவன் ..என்
நினைவைக் கிளறி செல்கிறான்
மரத்தடியில் மழலையாய் அழ ..
காதோரம் கத்தி அறுத்தது முதல்
தாடி எடுக்கையில் தழும்பானது வரை ...

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Jun-15, 12:33 pm)
பார்வை : 135

மேலே