மூன்றாம் உலகப்போர்

விவசாயம் .......

மண்ணோடு மனிதன் எழுதிய
முதல் கவிதை ...

பூமி அணியும்
புதுப்புதுப் புடவை .....

மழையில் ஊறினால்
சாயம் ஏறும் ஓவியம் .....

இறுதியாக இந்தியாவின்
ஒடிந்த முதுகெலும்பு ....

ஆம், ஒடிந்த முதுகெலும்புதான்...

முதுகெலும்பை விற்றுத்தானே
மூலிகை மருந்து வாங்கினாய் ...
அமைச்சர்களின் ஆண்மைக்கு .
@
பத்திரிக்கையில் படித்தேன்
"தொடரும் விவசாயிகள் தற்கொலை "
புள்ளி விவரம்
புத்திக்குள் கேள்விக்குறியானது ...
இது எதிர்ப்பா ?
இல்லை எதிர்பார்ப்பா ?

சாகுபடி செய்த விவசாயிகளை
சாகும்படி செய்தது எது ?

வளரும் நாகரிகமா ...
வளர்ந்துவரும் தொழிற்சாலைகளா ...
வளர்ந்துவிட்ட அரசியல் சொத்தா ...
@
எல்லோரும் சோற்றில் கை வைக்க
சேற்றில் கால் வைத்தவன்- வாழ்க்கை
இன்னும் சேற்றினிலே ...

விதைத்தவனின் வரலாறு
விதையின்றிப்போன வரலாறு இது ...

வெங்காய வாழ்க்கையில்
தக்காளியாய் நசுங்கியது
இவன் வாழ்வு ...
@
வாடிய பயிர் கண்டால்
ஓடி வருகிறது கண்ணீர் ....
வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம்
வாடினேன் என்று
வருந்தியவன் கபிலன் மட்டுமல்ல ,
இந்த கவிஞனும்தான்...

மூழ்கியது பயிர்
மானியம் வழங்கும் அரசு ,
மானியம் வாங்க
மாடு விற்றவன் கதை ஏராளம் ...
@
உழவன் ஒருவன்
உயில் எழுதிவிட்டான் -என்
உடலும் உரமாகட்டுமென்று...

மண்ணை அணைத்தவனை
மண்ணே அணைத்துக்கொண்டது .
அவனை புதைத்த இடத்தில்
மழை கவிதையாய் பெய்தது ...
இது
கண்ணீர் அஞ்சலியாக இருக்கலாம்
உழவனுக்கு ...
கவிதைப் பொருளாகி இருக்கலாம்
எனக்கு ...


எது எப்படியோ ?
விதைத்தவன் உறங்கி விட்டான் ....
விதைகள் ???

எழுதியவர் : தினேஷ் sparrow (17-Jun-15, 6:00 pm)
Tanglish : moonraam ulagappor
பார்வை : 251

மேலே