அழிப்போம் சீமைக் கருவேல மரத்தை

சீமைக் கருவேலம் சீரழிக்கும் மண்வளத்தை
தீமை விளைவிக்கும் தேவையின்றி - ஊமையாய்
நின்றே உறிஞ்சும் நிலத்தடித் தண்ணீரை
நன்றாய் துளிர்த்திடும் நஞ்சு .

அடர்ந்து வளர்ந்திடும் ஆக்கிர மிக்கும்
படர்ந்து செழித்துப் பரவும் - விடமாய்
அமைந்த கொடுமுள்ளால் ஆபத்தும் நேரும்
குமையும் மனமும் கொதித்து .

உயிர்வளியை சொற்பமாய் உற்பத்திச் செய்யும்
உயிரினங்கள் வாழ உதவா - பயிர்கள்
விளையவிடா காட்டு விடத்தருவை நாமும்
சளைக்காமல் வெட்டுவோம் சாய்த்து .

மண்ணின் எதிரியை மண்ணைவிட்டேப் போக்கிட
கண்மூடி வெட்டிக் களைந்திடுக - எண்ணிடவே
அச்சம் விளைத்தே அபாயமளிக் கும்மரத்தை
மிச்ச மிருக்காமல் வெட்டு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Jun-15, 10:37 pm)
பார்வை : 90

மேலே