பகையை அடித்திடுவாய்

ஓ....! என்றமிழ் தோழனே ! இளைஞனே ! வீரனே !
உன்றலை மீதவன் நின்றுமி திப்பது ,
அறிகிலையோ ! உணர்வு வரவிலையோ - நிதம்
உண்டலும் , உடுத்தலும் , உறங்கியே கழித்தலும் ,
ஒன்றுதான் பணியென உள்ளமும் நினைப்பது ,
சரியாமோ ? தமிழர் நெறியாமோ ?
கனித்தமிழ் மறவனே ! காளையே ! மேருவே !
இனியவுன் மொழியினை எள்ளிந கைப்பது ,
மடுக்கிலையோ ! வீரம் கொடுக்கலையோ ! - அன்னை
மனிதனாய் ஆக்கிட , மேனியின் குருதியை
மகிழ நீ அளித்தனள் ! பாலெனக் குடித்தனை ,
பாலிலையோ ! துடிக்கும் தோளிலையோ !
ஆறடி மேனியை , ஓரடி யாக்கி நீ ,
பாரினில் கூனியே பயந்துந டுங்கவா ,
பிறந்துவந்தாய் ? மண்ணில் திரிந்து வந்தாய் ? - பகையை
கூறு கூறாக்கிடும் வாளினைப் பெற்றிடா ,
கொத்தடி மையினை வெட்டியே சாய்த்திடா ,
தோளிருந்தென் ? பயனோ ? நீயிருந்தென் ?
ஆழ்கடல் தாண்டியுன் இனத்தினர் பிறன்முடி ,
அன்றொரு நாளதை வென்றுமே பறித்ததை ,
எண்ணிடுவாய் ! மின்னாய் மின்னிடுவாய் - மாற்றார்
வாழிட மின்றியெங் கோடியொ டிங்கிட ,
வந்தனை செய்தடி வந்து அடங்கிட ,
இடித்திடுவாய் ! பகையை அடித்திடுவாய் !
எத்தனைக் கோயில்கள் இருப்பினும் வாழ்ந்திட
ஏழைக்கு வீடுமிலை - அவன் மேனிக்கு ஆடையிலை - இங்கு
எத்தனை தெய்வங்கள் இருப்பினும் வயிற்றுக்கு எச்சிலை சோறுமிலை - இது - ஏங்கிடுவோரின் நிலை !
எத்தனைப் பதிகளை ஏகிய போதிலும் இன்பத்தின் சாயலை - உடல் உழைப்பின்றி ஓயலிலை - ஏழை
எத்தனை வேண்டுதல் வேண்டிய போதிலும இறைவன் அருளுமிலை - அவன் - ஈந்திட்ட பொருளிமிலை !
எத்தனைப் படையல்கள் படைத்திட்ட போதிலும் இறைவனும் உண்டதிலை அதை எவருமேகண்டதிலை செல்வன்
எத்தனை ஆயிரம் இரைத்திட்ட போதிலும்
எதையுமே கொண்டதிலை - எவருமே விண்டதிலை !
எத்தனை உண்மைகள் எடுத்துரைத் திட்டாலும்
என்று திருந்துவரோ ? பக்தர் என்று வருந்துவரோ ? - மூட
முத்திரை தன்னை முகத்திலழித்தவர்
மேன்மை யுறுவாரோ ? அறிவுப்பாதை வருவாரோ ?