மழையும் நானும்
தனிமை நகர்ந்திடும்
கவிதை பிறந்திடும்
மழையே உன்வரவால்....
மேகச் சல்லடை
ஏறிய கடலின்
தேகம் வியர்த்ததுவோ?!
போக உச்சத்தில்
புலம்பிடும் வானம்
சிந்திடும் உயிர்நீரோ?!..
தாவர தாகம்
தணித்திட காலம்
வகுத்தத் தருணமிதோ?!
கவிதைக் கருவைத்
தாங்கி வந்திடும்
நீருரு தூதிதுவோ?!..
விலங்குகள் மட்டும்
விளங்கிக் கொள்ளும்
வீரிய நல்லிசையோ?!
அழகிய மலர்கள்
அங்கம் நனைத்திடும்
அதிசயக் குளியலிதோ?!
காய்ந்த மண்ணின்
காயம் ஆற்றிட
களிம்பாய்ப் பொழிகிறதோ?!
கண்ணீர் ஏற்றக்
கதிரவன் எழுதும்
துளிப்பாக் கடிதமிதோ?!
மழையே உன்னால்
மகத்துவம் பெற்றது
மனித சமுதாயம்...
இதனால் இல்லை
உனக்கு இங்கே
ஒருதுளி ஆதாயம்...
இருந்தும் பெய்து
பசுமையின் ஓவியம்
பாரெங்கும் வரைகின்றாய்!..
மேலே சென்றால்
கீழே வராத
என்னிலும் உயர்கின்றாய்!!..
அ.மு.நௌபள்