சேதித்தல்

அடர்ந்த பெருங்காடு ஒன்றில்
பயணப்பட முற்படுகிறேன்.
சில மரங்களும் கொடிகளும்
பேசத் துவங்கி பின் தொடர்கின்றன.
சில மரங்களின் இலைகள் துளிர் விட ஆரம்பித்து இருகின்றன.
சில மரங்கள் பூத்து இருக்கின்றன.
சில மரங்கள் காய்ந்து இருக்கின்றன.
சில மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.
'காண இயலா பெரும்காடு
கடந்திடவும் வழியில்லை
திரும்பி செல்லவும் காலமில்லை' என்கின்றன.
'காலம் கடந்தவன்' என்கிறேன்
'பயணப்பட்டு எதைக் காண விழைகிறாய்' என்கின்றன.
'பயணமே என் பணி' என்கிறேன்.
'எங்கள் வாக்கினை மறுதலித்தவர்கள்
எங்களில் ஒருவராகி விடுவார்' என்கின்றன.
'மௌனத்தில் வெற்றி கிட்டுவதில்லை'
என்று கூறி பாதங்களை மாற்றி பதிய வைக்கிறேன்.
வெளிர் பச்சை நிற கொடி ஒன்று
என் கால்களை சுற்றத் துவங்குகிறது.
பின் தொடர்கின்றன கொடிகளும், மரங்களும்.
பிறிதொரு நாளில்
மற்றொருவன் பெரும் காட்டில்
பயணப்பட எத்தனிக்கிறான்.
அப்போது
மரங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகி இருந்தது.


*சேதித்தல் - வெட்டுதல் - திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம்

எழுதியவர் : அரிஷ்டநேமி (9-Jul-15, 10:57 pm)
பார்வை : 186

மேலே