அடிச்சுவடு

அடிச்சுவடு............

பவித்ரா எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு இனி அடுத்த கேஸ் கிடைப்பது வரைக்குமோ இல்லை மக்களுக்கு மறக்கும் வரைக்குமோ தெரியாது. இதில்நடந்தது என்ன என்பது பவித்ராவிற்கும் அவள் கணவனுக்குமான உண்மை. தன்னை விட வயதிற்கு மூத்த அழகில்லாத ஒருவன் தனக்கு கணவனாக அமைந்ததால் தன் வாழ்வு சீரழிந்து விட்டது என்பது பவித்ராவின் குற்றச்சாட்டு. பவித்ரா தன் கணவனுடனான தொடர்பை துண்டித்து இன்னொரு ஆணுடன் மட்டுமே தொடர்பு வைத்திருந்தாள் எனில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்று உச் கொட்டிக்கொள்ளலாம் என்று என்னால் கூறவியலாது. ஏனெனில் அவளால் தன் வாழ்வில் நிறைவு காண முடியவில்லை. இப்படிப்பட்ட பெண்கள் என்று நிறைவு காண்பார்கள் என்றும் கூற முடியாது.

பவித்ரா காணாமல் போன வுடனே அவள் கணவன் தேடியலைந்தானா இல்லையா என்று தெரியாது எந்த நிர்பந்தத்தின் பெயரிலோ தன் மனைவியைக் காணவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கூறி ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறான். இதில் காவல்துறை ஒருவரைப் பிடித்து விசாரிக்க அவன் விசாரணை முடித்து வந்தபின் மரணமடைகின்றான். அதற்கு போலீஸ் தான் காரணம் என்று கூறி கலவரம் மூண்டது ஆம்பூரில். அதன் பின் இக்கலவரத்துக்கு காரணமான பவித்ராவைப் பற்றி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொள்கிறது. அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இதில் பவித்ரா என்ற தனி நபரின் ஒழுக்கக் கேடால் ஒரு மரணம் சம்பவிக்கிறது ஊருக்குள் வன்முறையும் வெடிக்கிறது. இதற்கு முதல் காரணம் ஒழுக்கக் கேடு தான். அடுத்து பவித்ரா பதினொன்று பேருடன் தொடர்பு வைத்திருந்தாள் என்ற செய்தி, அது போலீஸாரால் வழக்கை திசை திருப்புவதற்காக சேர்க்கப்பட்டதா இல்லை அதுதான் உண்மையா என்பது பவித்ராவிற்கும் போலிசுக்குமான உண்மை. இது ஒருபுறம் இருக்கட்டும்.
குடும்பம் என்பது கோவில். அதில் கணவனும் மனைவியுமே கற்பகிரக தெய்வங்கள். இவர்களுக்குள் சரியான புரிதலும் அன்பும் இல்லையெனில் சாக்கடை என்ற இடத்தில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு பெண்ணை திருமணம் செய்யும் பொழுது அந்த கணவன் பல முறை யோசிக்க வேண்டும் இந்த பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமா? இவளால் என்னுடன் நிம்மதியாக வாழ முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். அதே போல் பெற்றோரும் இந்த பையன் தன மகளுக்கு ஏற்ற துணை தானா என்பதை யோசிக்க வேண்டும். பலரின் கேள்வி அவளுக்கு திருமணம் நடக்கும் போதே இந்த கணவன் தனக்கு தேவையில்லை என்று ஏன் சொல்லவில்லை என்பது. இன்னமும் பல பெண்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்களை வெளியில் சொல்ல முடியா நிலையில் தான் இருக்கிறார்கள். பலர் நினைப்பது காலம் மாறிவிட்டது பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று ஆனால் அது முற்றிலும் தவறு காலம் மாறிவிட்டது பெண்கள் முன்னேறி விட்டது ஆனால் அடிமைத்தனம் இன்னும் மாறவில்லை இது நூறு சதவிகித உண்மை.

இதில் தவறு செய்தது யார் என்றால் எல்லோருமே தான். முதலில் தனிமனித ஒழுக்கக் கேடு. இரண்டாவது மனைவியிடம் அன்பு செலுத்தாமை. பொதுவாகப் பெண்களுக்கு உடல்,உடைமை, வீடு , சொத்து, பணம், நகை , ஆடம்பரம் இதெல்லாமே இரண்டாம் பட்சம் தான். அவர்களுக்கு தேவை கொஞ்சத்திலும் கொஞ்சம் பாசம். பாசம் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு பெண் இப்படி செய்யலாமா என்ற கேள்வி மா பெரிது. இன்று எல்லாப் பெண்களுக்கும் எல்லாமே கிடைக்கிறது என்று கூறமுடியாது. எந்த பெண்ணுக்கும் எல்லா மகிழ்ச்சியும் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் அவர்கள் கிடைத்தவற்றில் மகிழ்ச்சி காணகிறார்கள் நிறைவு காண்கிறார்கள். இன்று பல துறைகளில் பெண்கள் சாதிக்கிறார்கள் ஆனால் அவர்களும் ஏதோ ஒரு முறையில் ஒரு காம்பர்மைஸ் செய்துகொண்டு வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை இதை எந்த பெண்ணும் மறுக்க முடியாது. அதில் தவறிச் செல்கிறவர்களும் உண்டு . தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறவர்களும் உண்டு. என் குடும்பம் என் வாழ்வு என் கணவன் என்னுடைய குழந்தைகள் என்று தனக்குத்தானே தன்னை மட்டுமே சுற்றி ஒரு வட்டம் வரைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் வாழ்ந்து முடித்துவிட்டு வட்டம் வரையப் பார்க்கிறார்கள் ஏனோ அந்த வட்டம் அவர்களின் கட்டுக்குள் வரைய முடியாமலே போகிறது. தன் தகுதிக்கு மீறின ஆடம்பர ஆசைகள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பல தவறுகள் அரங்கேறி முடிகின்றன.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தகாத உறவு அவர்களை மட்டுமே பாதிப்பதல்ல அவர்களை சுற்றியுள்ள குடும்பம் சமுதாயம் வருங்கால தலை முறை இவைகளை சார்ந்தது. ஒரு திருமணமான ஆண் தன் மனைவியல்லாத பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்கிறான் என்றால் அவனக்கு அவன் மனைவி மீது தானாகவு வெறுப்பு உருவாகிறது. அவனின் மனைவியுடன் அடுத்தப் பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கிறான் தானாகவே இரு குடும்பங்கள் சீரழிந்து போக இருவரும் காரணமாகின்றனர். அதுபோல் இந்த பெண்ணும் அவ்வாறே செய்கிறாள் . திருமணமாகத ஒரு ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் இது போல் பல பெண்களின் சீரழிவுக்கு காரணமாகிறான். தன் மனைவியைக் கூட சந்தேகப் பட்டு துன்புறுத்தும் நிலைக்குத் தள்ளப் படுகிறான். அடுத்து குழந்தைகள். அந்த குழந்தைகளும் ஒரு நிர்பந்திக்கப் பட்ட இறுக்கமான சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். ஒரு குழந்தைக்காக தனக்குப் பிடிக்காத கணவனுடன் வாழவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் தாய்மை என்பது ஒரு உணர்வு தன் கணவன் தன்னுடன் அன்பாக இல்லையென்றாலும் தன்னுடைய கணவன் அவளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லைஎன்றாலும் தன் குழந்தைதான் தன் எதிர்காலம் என்ற உணர்வு உள்ளுக்குள் இருக்கவேண்டும் அதுதான் தாய்மையின் மேன்மை. அதற்காக இப்படித்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. அது அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை பொறுத்தது. ஏனெனில் மற்றவர்களின் வாழ்க்கைக்குள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை. அவரவரின் தனிமனித ஒழுக்கம் தான் இந்த சமுதாயத்தையே சீர்தூக்கி நிறுத்தும்.

இன்று பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து போக முதல் காரணம் வாழ்வின் தேடல் எல்லாவற்றையும் தேடிக்கண்டுபிடிப்பவன் கடைசியில் தன் வாழ்வை மட்டும் தொலைத்து விடுகிறான். தன் மனைவி தன்னில் பாதி அவளின் தேவைகளை நான் தான் பூர்த்தி செய்ய வேண்டும். அவள் பேச வேண்டிய கதைகளை என்னுடன் தான் பேசித்தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்ளவேண்டும் அவளின் சிறு சிறு எண்ணங்களுக்கு கூட மதிப்பளிக்க வேண்டும். இன்று பல ஆண்கள் தன் மனைவியை சந்தோஷப்படுத்துவதைக் கூட தன் கடமை என்று எண்ணாமல் அதையும் ஒரு பெரிய வேலையாக சுமையாக நினைக்கிறவர்கள் உண்டு. ஒரு பெண் ஒரு செயல் செய்கிறாள் என்றாள் ஆயிரம் முறை யோசிப்பாள் . அவள் செய்வது எல்லாமே நியாயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறு துளியேனும் நியாயம் இருக்கும் . தன் மனைவி தனக்குக் கிடைத்த பொக்கிஷம் என்று கணவன் நினைக்காதவரை அவலங்கள் தொடரும். கணவன் மனைவிக்குள் வயது என்பது பெரிய விஷயமில்லை. எத்தனை வயது வேறுபாடிருந்தாலும் அவர்களால் கருத்தொற்றுமையுடன் வாழமுடியும். வாழ்க்கையென்பது உடலையோ வயதையோ பொறுத்தது அல்ல மனதைப் பொறுத்தது. உடல் என்பது தங்கள் அன்பை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஊடகம் தான் மாறாக உடலுறவுக்கான கருவி அல்ல. உடலுறவு என்பது தங்கள் அன்பை வெளிப்படுத்த உதவும் நிகழ்ச்சி என்ற மேலோட்டமான பார்வைதான் தவறானது.மாறாக அன்பை வெளிப்படுத்த அதுவும் ஒரு வழி என்ற எண்ணம் தம்பதிக்குள் வேண்டும். செக்ஸ் என்பது இரு கால்களுக்குள்ளான பொருள் அல்ல மாறாக மனதிற்குள்ளிலிருந்து பிறக்கும் சிநேகப் பிரவாகம். அதற்கு வயதோ உருவமோ அழகோ ஒரு தடையல்ல . மனது மட்டுமே முதல் காரணம் .

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாய் இருந்தால் குடும்பத்திலோ சமுதாயத்திலோ நாட்டிலோ இல்லை உலகத்திலோ எந்த தவறும் நடக்காது. முயன்று பாருங்களேன் உலகம் முழுவதும் அன்புச் சங்கிலியில் கட்டப்படும். இதற்கு கண்டிப்பாக தனிமனித ஒழுக்கம் கட்டாயம் தேவை உலகம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ நாமும் நமது தலைமுறைகளும் இவ்வுலகில் நீடிய வாழ்வு வாழ ஒழுக்கம் தேவை.இதைத்தான் அனைத்து மதங்களும் காவியங்களும் இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்காக வாழ்வோம் இனியேனும் ஒழுக்கமுடன்.

"ஒருவன் நடந்து செல்லும் சுவடுதான் மற்றவர்களுக்கு பாதையாகிறது. நாம் ஏற்படுத்துவோம் அழகான சுவடுகளை நம் தலைமுறைகள் வகுத்துக் கொள்ளும் நிலையான பாதையை.........."

.........................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (9-Jul-15, 11:54 pm)
பார்வை : 251

மேலே