தெய்வம் சான்ற திறல்- 6

தெய்வம் சான்ற திறல் -5.


ஒரு கிறிஸ்துவ மத போதகரும், ஒரு புத்த துறவியும் ஒரு பிரபல நாத்திகரும் மீன் பிடிக்கலாம் என்று ஒரு படகில் ஏறிச் சென்றனர். கொஞ்ச தூரம சென்ற பிறகு மத போதகர் சொன்னார், ”
நான் மீன் பிடிக்க நல்ல வலை எடுத்து வரவில்லை” எனக் கூறி, தண்ணீரின் மேல் நடந்து சென்று திரும்பினார். புத்த மத துறவியும்,
”ஆம் நானும் எனது தூண்டிலில் மாட்ட புழுக்கள் கொண்ட குடுவையை மறந்து விட்டேன்” என தண்ணீரின் மீது நடந்து சென்று எடுத்து வந்தார். இவர்கள் இருவரும் தண்ணீரில் நடப்பதைக் கண்ட நாத்திகர், தானும் தண்ணீரில் நடக்க முடியும் என நிரூபிக்க எண்ணி, ”எனது மது நிறைந்த குடுவையை நான் எடுத்து வருகிறேன்” என தண்ணீரில் இறங்கினார். ஆனால், அந்தோ பரிதாபம், ஆழத்தில் நீச்சல் தெரியாமல் மூழ்கினார். பின் போதகரும் துறவியும் அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டனர். அவர் மேலே வந்த பின்பு போதகர் கூறினார். ”பாவம் இவருக்கு நாம் ஆற்றில் பாறைகள் எங்கு இருந்தன என முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்” என்றார். வேகம் வேறு விவேகம் வேறு. விவேகம் என்பது ஞானம்; அது ஒரு ஒளி; அது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் ஆன்மாவின் இருவேறு நிலை அனுபவங்கள் ஆகும். இதற்குக் காரணமாய் விளங்கும் கடவுள், இருவேறு நிலைகளின் இணைப்பகமாக இருத்தல் இயலாது. எனவே இரு வேறு நிலைகளால் உணர்த்தப் பெறும் ’பரம்’ என்ற தனிப்பொருள், இருமையில் நின்று ஆன்மாக்களுக்கு அனுபவப்பட்டாலும் அது இருமையைக் கடந்து நின்றது எனப் பொருள் கொள்ள வேண்டும்... இவ்வாறு இருமையில் இணைந்து நின்றும், அதே நேரம் இருமையைக் கடந்து நின்றும் விளங்கும் பொருளே அதன் அடையாளம் அல்லது குறி எனக் கூறுவர்.

அடையாளங்கள் பல்வகைப்படும். இலிங்கம், சிலுவை, பிறை நிலா, சூலம், உருத்திராட்சம், என பல்வகையான அடையாளங்கள் ஆன்மிக வாழ்வில் பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் கான்கிறோம்.

பெரும்பாலும், இறைவனை ஒளியாய் நின்ற பொருள் என்று அனைத்து சமயங்களும் ஏற்கும் நிலையில் ஒளிப்பிழம்பாகிய அடையாளத்தைப் பற்றி நாம் சற்று விரிவாக ஆராயலாம். இதில், இது சிறந்தது, இது தாழ்ந்தது இது உகந்தது இது போற்றிப் புகழ்ந்து வழிபட வல்லது என்றெல்லாம் பாகுபாடு செய்து விடாமல், அடையாளங்கள் எப்படிப் பொதுவாக இறைவனை சென்று சேர வழி வகுக்கின்றன என்பதற்காக மட்டுமே முதல் அடையாளமாக இலிங்கம் இவ்வாய்வுக் கட்டுரையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அடையாளத்தை “எல்லே இலக்கம்” என தொல்காப்பியத்தில் 754ஆம் பாடல் கூறுகிறது. இது தன்னளவில் விளங்கியும், பிறருக்குத் தன்னை சோதியால் விளக்கியும் நின்ற தனிப்பொருளே அது என்பதால் “இலிங்கம்” அதன் குறியாய், அடையாளமாய் விளங்கிற்று.

திருவிவிலியத்தின் பயணனூல் 14 -24இல் யாவே கடவுள் மக்களுக்கு இரவில் நெருப்புத் தூணாகவும் பகலில் மேகத்தூணாகவும் பாதுகாப்பு அளித்து அவர்களோடு சென்றார் என்பது, இலிங்க வடிவை நினைவிற் கொண்டு வருதலால் இந்த இலிங்கத்தின் சிறப்பை நாம் இன்னும் சற்று ஆய்ந்து பார்க்க வேண்டி உள்ளது.

திருவுருவா யுணருருவா யறிவினொடு
தெளிவிடத்துஞ் சிந்தி யாத
அருவுருவா யுருவுருவா யகம்புறமுந்
தன்னியிலா வடங்கா வின்பத்
தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்
தோற்றுவிக்கு மொளியா யாவு
மருவுருவாய் வளர்காவன் முதலவனைப்
பணிந்துள்ளி வாழ்த்து வாமே.


எனும் உமறுப் புலவரின் சீறாப்புரானத்தில், அகமும், புறமும் தன்னிலடங்கா இன்பத்து ஒரு உருவாய் உண்மையில் உண்மையினைத் தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் அரு உருவாய் வளர்காவன் முதலவனை வாழ்த்துவமே என்கிறார். உண்மையில் உருவமில்லாத கடவுளை ஓளியாய் ஏற்று வழிபடுவது பழங்காலந்த் தொட்டு நிகழும் செயலாகும்.


தமிழர்களின் தெய்வ சிந்தனையில் ஊறித் திளைத்த அப்பாலைக்கு அப்பாலையாய் நின்ற பெரும்பொருள் இந்த இலிங்கம் என்பதாலேயே திருஞான சம்பந்தர்
“ஒளிப் பிழம்பாய் நின்ற பொருள்”
என்பதாலும், இது ஒரு கந்துடை நிலை என திருமுகாற்றுப்படை விவரிக்கிறது.

இதனையே சேக்கிழார் கூறும் சாக்கிய நாயனார் புராணத்தில் (3648),

“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் கரணமாம்
நீள்நாகம் புனைந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்”

என்றும் கூறுவார்..

இவ்வகையில் ”ஒளிப்பிழம்பு” என்றும், இறைவன் என்றும் உணர்ந்த நிலையில், இறைவனின் ஒளியை சோதி என்றால், அதனை பிரதிபலிக்கும் ஆன்ம ஒளியை சுடர் எனக் கொண்டு, உலகப் பொருட்கள் மானிட வாழ்விற்கு ஞானத்தைத் தருகின்ற விளக்கெனக் கொண்டால்—சோதி—+-சுடர்—+-விளக்கு என்று முக்கூட்டு நிலையை, முப்பாற்புள்ளி எழுத்து நிலையை அடையாளமாகக் கொள்ள இயலும். “மானிடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்” என்பார் திருமூலதேவ நாயனார்.

இந்த சோதி நிலையை வள்ளலார்,

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ்ஜோதி

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ்ஜோதி

இனமின்றிகபரத்திரண்டின்மேற்பொருளாய்
ஆனலின்றோங்கிய வருட்பெருஞ்ஜோதி .10

உரைமனங் கடந்த வொருபெருவெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி

ஊக்கமு முணர்ச்சியுமொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ்ஜோதி

எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ்ஜோதி

ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ்ஜோதி

ஐயமுந்தி஡஢பு மறுத்தெனதுடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ்ஜோதி 20

ஒன்றென விரண்டென வொன்றிரண்டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ்ஜோதி

ஓதாதுணர்ந்திட வொளியளித்தெனக்கே
ஆதாரமாகிய வருட்பெருஞ்ஜோதி

என ஆதார அருட்பெருஞ்சோதியை ஓதுகின்றார் அவருக்கே உரிய தனி முத்திரைத் தமிழில்.
சோதி, சுடர், விளக்கு என மூவகைப்பட்டு நின்றும், அடுத்த நிலையில் ஆண்மையும் பெண்மையும் என்ற இருமையின் நடுவேயும், இருமையைக் கடந்த “பரம்” நின்றது. இறைவன் ஒளியாக இருக்கிறார் என்பதை திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டு இருப்பினும், சில குறிப்பிட்ட வசனங்கள் நாம் சிந்தித்துப் பார்க்க அவசியமானவை.

“ஆரம்பத்தில் இருந்தே நாம் அவரிடமிருந்து பெற்று அறிவிக்கு நற்செய்தி இதுவே. கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை” (1. யோவான் 1:5)
என்றும்
“இருளும் உங்கட்கு இருளாய் இராது. இரவும் பகல்போல் ஒளிரும், ஏனெனில் இருளும் உங்கட்கு ஒளியே” (திருப்பா 139:12) என்றும்
“வாருங்கள் யாக்கோபின் மரபினரே. ஆண்டவரின் ஒளியில் நாம் நடப்போம்” (ஏசாயா2:5) என்றும்
”அவர் ஆழமானவற்றை, மறைந்துள்ளவைகளை வெளிப்படுத்துவார். அவருக்கு இருளில் இருப்பது என்னவென்று தெரியும். ஒளி அவரோடு இருக்கிறது” (தானியேல்2:22) என்றும்

”அவர் ஒருவரே அழிவிலாதவரும் ஒருவரும் அணுக இயலாத ஒளியில் இருப்பவர் என்பதால் ஒருவரும் அவரைக் கண்டதில்லை, காணவும் இயலாது” (1.திமோத்தேயு 6:16) என்றும்

“ஆண்டவரே எனக்கு ஒளியும் மீட்பும், யாருக்கு நான் அஞ்ச வேண்டும் (திருப்பா27:1) என்றும்

இறைவனை ஒளியாய் வழிபடுவதுடன், நம்பிக்கையின் அறிக்கையாக வழிபாடுகளின் போது சொல்லும் பிரார்த்தனையிலும், ”கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, மெய்யங்கடவுளினின்று கடவுளாக ஜெனித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்ல” என தங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவர்கள் அறிக்கை இடுகின்றனர்.




திருக்குரானில் 24ஆம் அதிகாரம் நூர் என ஒளியைப் பற்றியே விளக்குகி|றது.
“அல்லாவே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளியாய் இருக்கிறார். அவரது ஒளியின் மாதிரி, மாடத்தில் வைக்கப்பட்ட விளக்கு போன்றது. அந்த விளக்கும், கண்ணாடிக்குள் இருக்கிறது. அந்த கண்ணாடியும், வெண்முத்துத் தாரகையாய் ஒளிர்வதற்கு ஒலிவ மர எண்ணெய் கொண்டு எரிகிறது. அதுவும், கிழக்கிலிருந்தும் அல்லாமல், மேற்கிலிருந்தும் அல்லாமல் நெருப்பால் தொடாமல் இருப்பினும் ஒளிரக் கூடியதாய் இருக்கிறது. அவரே, ஒளியின் மேலான ஒளி. அல்லா தனக்கு விருப்பமானவர்களை இந்த ஒளிக்கு வழி நடத்துகிறார். அல்லாவே மக்களுக்கு முன்னுதாரணங்களை அளிக்கிறார் மற்றும் அவருக்கு அனைத்துப் பொருள்களைப் பற்றியும் தெரியும்”.(சூ 24:35)

சைவ சித்தாந்தமும் இறைவனை ஒளியாய் வழிபட வேண்டுமென வலியுறுத்துகிறது. இதில் ஒளியின் வடிவம், அடையாளம் இலிங்கம் எனக் கொண்டு பூசிக்கப்படுகிறது. எனவேதான், இலிங்கம் என்பதற்கு மறைமலை அடிகளார் கூறும் கீழ்வரும் விளக்கம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது.

“இலிங்கம் என்பது ஒளித் தூணுக்கு அமைந்த அடையாளப் பெயர். நெருப்பானது, தூய்மையைக் கொடுக்கிறது. தண்ணீரும் தூய்மையைக் கொடுக்கிறது. முன்னது, அழிப்பதன் மூலம் தூய்மையைத் தருகிறது; பின்னது, அணைப்பதன் மூலம் தூய்மையைத் தருகிறது. இலிங்கத்தின் பீடம், தண்ணீரைப் போல் பரந்து ஓடும் நிலையில் அமைந்துள்ளது. நெருப்பு, மேலே நோக்கிச் செல்லும் நிலையில் அமைந்துள்ளது. இவ்விரண்டன் இணைப்பைக் குறிக்கும் அடையாளமே இலிங்கம்.(பக்கம் 168-227, சைவ சித்தாந்த ஞான போதம், கழகப் பதிப்பு).

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.

(திருமந்திரம்1773) எனும் திருமூல தேவ நாயனாரின் பாடல் நீரும் தீயும் நிறைக்கின்றவாறு நீண்டு அகன்றானை நாம் அறிந்து கொள்ளல் சிரமம் என்றே கூறுகிறது.

இலிங்கம் என்பது அடையாளமே என்றாலும் அதன் தத்துவத்தை அறிவியல் கண் கொண்டு காண முயலும்போது, இறைவன், ஒப்புமை அற்ற ஆற்றல் உடையவன்; எங்கும் எதிலும் நிறைந்து இருப்பவன் என்று நம்மை நம்பத் தூண்டும். ஒப்புமை அற்ற ஆற்றல் என்பது, உயிர் உள்ளவை, உயிர் அற்றவை ஆகிய யாவற்றிலும் நிரம்பி உள்ளது. மேலும், இந்த ஆற்றல் கட்புலனாகாதது. சூட்சுமம் ஆனது. அதாவது மிகமிகச் சிறிய பொருளிலும் (அணு என்றும் கூறலாம்) அடங்கி உள்ளது. இந்த அணு ஆற்றல் கொண்ட இறைவன் நுண்மைத் தன்மை உடையவன் ( Microscopic). இது DNA எனும் மூலக்கூறு ஆகும். (Deoxyribonuclei Acid) இந்த மூலக் கூற்றின் முதல் மூன்று எழுத்துக்களை அதாவது (Deo) தேயோ என தனியே பிரித்து இலத்தீனில் பொருள் கண்டோமென்றால் அது இறைவனைக் குறிக்கிறது. இப்பொருள் .பிறப்பற்ற, ஒப்புமையற்ற ஆற்றல் ஆகும். இது தன்னில் இருந்து தானே உருவாகி அதன் உருவ அமைப்பு வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டு போன்றது (Helix) என்று Nobel prize பெற்ற Watson எனும் அறிவியல் அறிஞர் கூறுகிறார். இந்த DNA உயிர் உள்ளவைகளின் ஆன்மா என்பதால் அது தேய்வதில்லை, அழிவதில்லை, தன்னைப் போல் உருவாக்கும் ஆற்றல் படைத்தது. DNA விலிருந்து ஒரு Gene, குரோமோசோம், நியூக்லியஸ் எனும் உட்கரு உருவாகின்றன. இந்த நியூக்லியஸ் இல் இருந்து ஒரு செல் உருவாகிறது. இவை நுண் நோக்கியால் ( Microscope) காணக் கூடியவை. ஒரே நோக்கம், அமைப்பு, வேலை உள்ள பல செல்கள் ஒன்று கூடி திசுக்கள் ஆகின்றன. பல திசுக்கள் ஒன்று கூடி மண்டலங்கள் ( Systems) ஆக மாறி தாவர, மிருக, பறவை, மனித உயிர்கள் கொண்ட உலகம் உருவாகிறது. இவை எல்லாவற்றிர்கும் அடிப்படை DNA. எனவே, உலகம், பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அடிப்படை இறைவன் எனும் பேராற்றலே. இப்பேராற்றலுக்கு ஒரு வடிவு கொடுக்க நினைந்த நம் முன்னோர் தந்த வடிவமே இலிங்க வடிவம் ஆகும். இவர்கள் வடிவமைத்த இலிங்கத்திற்கும் 1953 இல் DNA மாதிரி ஒன்றைத் தயாரித்த Watson and Crick மாதிரிக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது.

இலிங்கத்தில் செங்குத்தாக நிற்கும் தூண் போன்றது பாணம். அரைக்கோள வடிவில் அடியில் உள்ளது ஆவுடை. பாணத்தைச் சுற்றிய பாம்பு ஐந்து தலை நாகம், பாணத்திற்கு குடை விரித்தாற்போல் நிற்கும் இரு சுருள் வடிவம் உடையது. (Helix) இதனை அறிவியல் அறிஞர்கள் வளைந்து செல்லும் ஏணிப் படிகட்டுக்கு ஒப்பிடுவர். இதன்படி நம் முன்னோர்கள் இலிங்க வடிவம் ஜீவன் உள்ளது என்பதைக் கூறிட பாம்பைச் சுருளாக வைத்து திரிபுண்ட காந்தத்தை குறிப்பிட சந்தனக் குழம்பில் அமிழ்ந்த விரல்களால் மூன்று இடைக் கோடுகள் இட்டனர். அறிவியலின்படி இம்மூன்று கோடுகள் முக்கிய அணுத்துகள்கள் ஆகிய ப்ரோடான் எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் ஆகும்.

ஐந்து தலைகள் சிவனுக்கு இருப்பதாக நம்புவதைப் போலவே Adenine, Guanine, Uracil, Cytosine, Thiamine என ஐந்து உட்கரு அமிலங்கள் DNA வில் Mono Nucleotides ஆக உள்ளன. இதைப்போல் Mono Nucleotides சுமார் 2000 இருக்கலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் ((இலிங்க தத்துவம் அறிவியல் பார்வை, பெ.வ. செகன்னாதன், பக்கம், 23-24, அறிவியல் ஒளி, மே-2010, 16/29, முதுகிருஷ்னன் தெரு சென்னை-79.)

நமது மகரிஷிகள் ஞானக் கண்ணால் கண்டு உயிரிகளின் அடிப்படை சிவம் என்றனர். அதாவது இன்றைய DNA. சிவம் என்பது சரம், அசரம் என்று இயங்குபவை இயங்காதவை இரண்டின் ஆதாரக் கலவை. புரோடான் எலெக்ட்ரான் நியூட்ரான் ஆகிய மூன்றும் மரபணுக்கள் எனக் கொள்ளலாம். இவற்றின் நுண்ணிய துகள்கள் இப்பேரண்டம் முழுவது நிறைந்து பரவிக் கிடக்கின்றன. இவற்றில் ஒன்றையே அழகான துகள்கள் Charming Particles என டாக்டர் பியாரில்லல் ஜெயின் 1975இல் கண்டு பிடித்தார்.

நம் முனிபுங்கர் மாயை என்று கூறியதை இன்று அணுக்கரு அல்லது உட்கரு கவர்ச்சி விசை (Nuclear force of attraction) என்பர். புரோடான் ஆகிய பிரம்மாவும் எலெக்ட்ரான் ஆகிய விஷ்ணுவும் மிக அதிக மென்மையான தாமரைத் தண்டால் இணைக்கப்பட்டிருக்கின்றனர். சிவலிங்க ஆவுடையில் உள்ள மூன்று கீற்றுக்கள் எலெக்ட்ரானின் பாதையை இடம் குறிப்பிடுவன. (Orbit of Electron). என்கிறார் பேராசிரியர் செகன்னாதன்.

பிரம்மாவும் (ப்ரோடான்) விஷ்ணுவும் (எலெக்ட்ரான்) சிவசக்தியின் ஆற்றலால் ( Kinetic energy of sivasakthi matter) செயல் புரிவதால் இந்த மூலக் கூறில் உள்ள ஆற்றலை ரேணுகா என்றனர். ரேணு—மூலக்கூறுகள். ரேணுகா—மூலக்கூறுகளை உருவாக்கும் ஆற்றல். எலெக்ட்ரான் பலவித ஜடப் பொருட்களை உருவாக்குவதாக அறிவியல் கூறுகிறது. பிரம்மம், சிருஷ்டி என்பதும் இதுதானே என்று அறியும்போது ஆச்சரியம் இதில் ஏதுமில்லை.

இறைவன் ஜோதி வடிவமாயும் இருக்கிறார் என்பதற்காகவே மேற்சொன்ன இலிங்க தத்துவமும் விளக்கப்பட்டது. ஏனெனில் உருவம் அற்றவர் இறைவன் என்பதைத்தான் அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் . (10-Jul-15, 12:27 pm)
பார்வை : 213

சிறந்த கட்டுரைகள்

மேலே