என் காத்திருப்பு - உதயா

என் வாழ்வின்
கணங்கள் யாவும்
மழலை ஜனனத்தின்
முதல் நொடியாகிவிட்டதடி ...!

இரவும் பகலும்
என் விழிகளிரண்டும்
கண்ணீருக்கு மாற்றான் தாய்
பிள்ளையாகிவிட்டதடி ...!

ஒவ்வொரு நொடியும்
என் மனமும்
கழுகி உணவாக்கிக் கொள்ளும்
உயிருள்ள ஜீவனின்
மேனியாகிவிட்டதடி ...!

நான்கு புறமும்
அடைக்கப்பட்டு
மண்ணினால் அரிக்கப்படும்
பிணமாகிப் போனதடி
என் இதயத்துடிப்பு ...!

சிறகால் தவறவிடப்பட்ட
இறகைப் போல
என் ஆன்மா தவறவிட்ட
நிழலாக அலையிறேண்டி ...!

கடலோரம் கரையொதுங்கும்
கழிவாகிவிட்டேனடி
என் கவிதையின் கருவினில்
கண்ணீராகிவிட்டேனடி ...!

வெண்ணிலவின்
இதழ் பூக்கும்
என் இரவுகள் அனைத்தும்
அரலி விதையின் துளிர்வுக்கு
கானகமாகிவிட்டதடி ...!

உன் கொலுசின்
அசைவினில் துயில் பூண்ட
என் மெத்தையும்
கருவேல முள்ளாகா
உருமாறிவிட்டதடி ...!

உன்னை
ரசித்து ரசித்தே
கவி பாடிய
என் தூரிகையும்
தூக்கில் தொங்க
முயலுதடி ...!

நீ என்னை
வெறுத்த காரணத்தை
தேடி தேடியே
என் மதி
மரணத்தை
நெருங்குதடி ...!

நீ இல்லாத
இரவினை
என் குருதி
கூர் வாளுடன்
உறவுகொண்டே
கழிக்குதடி ...!

உன்னை
காணாத நாட்களின்
எண்ணிக்கை உயர உயர
என் நாக்கு
நஞ்சினை சுவைக்க
துடிக்குதடி ...!

உன்னை
தாரமாக்கிக் கொண்டே
காத்திருக்கிறேனடி
இப்பிறவியில் நான்
மரணிக்கும் வரையல்ல
இனி நான் பிறக்கவிருக்கும்
ஒவ்வொரு பிறவியின்
மரணம் வரை ...!

எழுதியவர் : உதயா (21-Jul-15, 7:44 pm)
பார்வை : 331

மேலே