காளியப்பன் கவிதையும் Dr கன்னியப்பர் உரையும் --02

முன் அறிவித்தபடி, இது, கைந்நிலைப பாடல்களைப் படித்தபொழுது நான் உருவாக்கிய வெண்பாக்களில் ஒன்று. இதன் பாடுபொருள்களில் தற்காலச் சூழ்நிலையும், பழங்கால உவமைகளும் பயன்படுத்திக் காட்டப்பட்டுள்ளதை அறிந்து இன்புறலாம்.
இப்படி ஒரு எண்ணம் என்னுள் உருவாகவும், இதற்கு உரைகொடுத்தும் உதவிய நம் தளத்தின் மூத்த கவிஞரும் ,மருத்துவத்துறையில் அனுபவமிருந்தும், தமிழ்ப் பாடல்களின் அமைப்பிலும் ,அழகிலும் தன்னைப் பறிகொடுத்தவருமான Dr.கன்னியப்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைசொல்லி அதனைப் பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.இனி,

காளியப்பன் கவிதையும் Dr. கன்னியப்பன் உரையும் (02)

வெந்தாள் பிரிவில் விரியலர் ஊர்புகைய
நொந்தாள் மனங்குளிர்ந்து நோவகலச் – சந்தனம்
கொண்டுவரும் சாரற் குளிரருவி போல்வாரான்
கண்டுநடுங் காதோ மனம்?

பொருளுரை(Dr.கன்னியப்பர்):

பொருள் தேடப் பிரிந்த தலைவனின் பிரிவை எண்ணித் தலைவி மனம் மிக வாடினாள்; தலைவனைப் பிரிந்த இச்செய்தி ஊரார்க்குத் தெரிந்து, பலவாறு பரவலாக பேசப்படத் தலைவி மிக வருந்தினாள்; சந்தனம் கொண்டு வரும் மலைச்சாரலின் குளிர்ந்த அருவி போல, தன் மனம் குளிர்ந்து வருத்தமும், வேதனையும் நீங்கும்படி தலைவன் வருவானோ வரமாட்டானோயென என் மனம் நடுங்குகிறது என்று தன் பிரிவாற்றாமையைத் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (30-Jul-15, 2:44 pm)
பார்வை : 109

மேலே