முதல் முத்தம்

காத்திருந்த நேரம் கால் நூறாண்டு ஆயினும்
தாமதித்து வந்தவள் காதலியாதலால்
கழிந்து சென்ற காலம்கூட சுகம் தான்..!

சில மணித்துளிகள் மட்டுமே என்றாலும்
பால் நிறமாய் நீர் மாறி
என் கால் நனைக்கும் கடல் அலைகள்
என்றுமே இன்பம் தான்..!

கனவுகளும் கண்ணுறங்கும்
சாம நேரத்தில்..சிறு காத தூரத்தில்..
சரணங்களும் பல்லவிகளும்
போட்டியிட்டு கொண்டதுபோல்..

துயில் கலைத்துச் செல்லும்
அந்த சங்கீத ரயில்வண்டி..
ஸ்ருதி மாறாமல் எழுப்பும் இசைஆனந்தமே..!

காலை வேளை பனித்துளி போல்
மழையின் ஆதியாய்..
புரங்கையின் மீது வந்து விழும் முதல்த் துளி..
காதலின் தீண்டலும் தந்திடாதபேரின்பம் தான்..!

அந்தி சாயும் வேளையில்..
பொன்மாலை நேரத்தில்..
என்னவளுடன் பேசிக்கொண்டு கனவுகள் காண்கயில் ..
சில்லென்று சில மழைத்துளிகள் ஆசீர்வதித்தால் ..
அதுவும் கூட ஆனந்தம்தான்..!

தோல்வியின் ரேகைகள்
என் தலைவிதியை எழுதும்போது
துயர் துடைக்கவும்..நான் தோல் சாயவும்..
வந்து நின்ற நட்பின் இன்பம் வேறெங்கும் கிடைக்குமோ..?

இவை எதுவும் உணர்ந்ததில்லை நான்..!

இன்று உணர்கிறேன்..
இவை அனைத்தும் ஒன்றாய்..
என் பிள்ளையின் முதல் முத்தத்தில்..!

- பாரதி

எழுதியவர் : விஜயபாரதி (26-Aug-15, 11:55 am)
Tanglish : muthal mutham
பார்வை : 1077

மேலே