இது தற்கொலை அல்ல
இது தற்கொலை அல்ல !
-ச.பிரபாகரன்
ஏதோ ஒன்று என்னை வருடிச் சென்றது போன்ற உணர்வு.கடந்த இரண்டு
தினங்களாக விளங்க முடியாத உணர்வு.வேறு வகையில் கூறினால் இந்த வீட்டுக்கு
வந்தது முதலே இப்படித்தான்.
நான் இராமநாதன்.பொதுப்பணித்துறையில் உயர் அலுவலராக வேலை பார்த்து
ஓய்ந்ததற்கு ஆன அடையாளத்தை என் தலையில், கொட்டிப் போன முடிகள்
பறைசாற்றும். வருடக்கணக்கில் சேமித்து வைத்த மொத்த பணத்தைக் கொட்டியும்
‘இன்னும் போதவில்லை’ என்றனர், இவ்வீட்டினை விற்க முன்வந்த
புரமோட்டார்ஸ்காரர்கள்.நல்ல காற்றோட்டமாகவும் வசதியாகவும் ஓய்வுக் காலத்தில்
வாழ்வதற்கு ஏற்றதாகவும் இவ்வீடு இருந்ததால் வாங்காமல் விடவும்
முடியவில்லை.மற்றும், என் மனைவிக்கு மிகவும் பிடித்திருந்தது.இதனை விட
வாங்குவதற்கு வேறு காரணம் வேண்டுமோ? நகரச் சூழலின் மீதான வெறுப்பே
கிராமத்தை நோக்கி நகர வைத்தது.
இரண்டு தினங்களுக்கு முன்பு தான் வீட்டின் ‘புதுமனை புகுவிழா’ சிறப்பாக
முடிந்தது.வீட்டின் திறப்பு விழாவைச் சிறப்பிக்க வந்த மகனும் மருமகளும் பேரன்
பேத்திகளும் கிளம்பிச் சென்று இரண்டு மணிநேரங்கள் கூட முழுமையாக
கடந்திருக்காது.கடந்த இரண்டு நாட்களாக என்னை விடாமல் துரத்திவந்த
இவ்வுணர்வைக் குறித்த எண்ணம் இப்போது தான் முளைவிட்டிருந்தது.
நேற்று இரவு மனைவியிடம் கூறும்போது,”புதுவீடுனா அப்படித்தான்
இருக்குங்க.போக போகச் சரியாயிடும்”,தூக்கம் கண்களைச் செருக அவள் கூறிய
வார்த்தைகளை ஏற்க முடியாமல் மனம் தவித்தது.வேறு ஏதாவதாக இருக்கலாமோ?
சரி.இதைப் பற்றிய கவலை இப்போது என்னத்துக்கு?
சாப்பாட்டு மேசையின் மீது அலறிய கைப்பேசியின் ஒலி எனது சிந்தனையை
சிதறடிக்கச் செய்தது.வெளிநாட்டிலிருந்த அண்ணன் மகன் கூப்பிட்டு,வர
இயலாமையைக் குறித்து பேசிக் கொண்டிருந்தான்.பேசி முடித்ததும் கைப்பேசியின்
நெட் கனெக்ஷனை ஆன் செய்து எனது புது வீடு குறித்து முகநூலில் நான் இட்ட
பதிவிற்கு விழுந்த விருப்பங்களையும் கருத்துகளையும் பார்வையிட்டுக்
கொண்டிருந்தேன்.மீண்டும் அதே உணர்வு.
சர்ர்ர்ர்... ஏதோ ஒன்று நிச்சயமாக கடந்திருக்க வேண்டும்.கரிய நிற புயல் ஒன்று.
காஞ்சனா படப் பேயாக கூட இருக்கலாம். நினைத்தபோது ஒரு சிறிய நகைப்பு கூட
வெளிப்பட்டது.
ஒருவேளை,வயதாகிவிட்டதால் சுருங்கிவிட்ட கண்களின் மாய விளையாட்டோ?
இல்லை, இல்லை.நிச்சயமாக அப்படி இருக்காது.தெளிவாக தெரிந்தது என்பதை
உறுதியாகக் கூறுவேன்.
நடுப்பகல் உணவை முடித்துக் கொண்டு வீட்டின் முன்புறமிருந்த வேப்ப மர நிழலில்
சற்று சாய்ந்திருந்து கல்கி இதழின் தலையங்கத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.அது
‘விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதால் ஏற்படும் விளைவினையும்
அதன் தீவிரத் தன்மையையும்’’ தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தது.
மீண்டும் அதே உணர்வு.இது பிரமையாக இருக்க நிச்சயம் வாய்ப்புக்
கிடையாது.எனில்,இது தான் என்ன?
இரவில் சாப்பிட்டு முடித்ததும் கழிவறைக்குச் செல்ல கதவைத் திறக்கும் போது...
‘’அய்யோ!’’என அலறிக் கொண்டே மூடிவிட்டேன்.அது...அது... என்ன? எது?
கண்ணாடியில் கரிய நிறத்தில் தோன்றிய உருவம்.
எப்படியோ ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் திறக்க
முயற்சித்தேன்.
மெதுவாக... மெதுவாக... சிறிது சிறிதாக... மெல்ல கதவைத் திறந்தேன்.
அட,ச்சீ...ஒன்னுமில்லை.நிலைக் கண்ணாடியில் என் முகம் மட்டுமே தெரிகின்றது.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாம்.என்னோட மடத்தனத்துக்கு
அளவேயில்லையா? எதையெல்லாமோ பார்த்து பயந்துக்கிட்டு...
எனது அலறலில் மாடி ஏறி வந்த மனைவி,”உங்களுக்கு வேற
வேலையில்லையா?நேரங்கெட்ட நேரத்தில கத்திக்கிட்டு.வந்து படுங்க.”
‘அடி,போடி!’’ மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் இப்பொழுதெல்லாம்
அவளின் அதட்டல் கொஞ்சம் அதிகமாகத் தான் போய்ட்டு இருக்கு.சரி.வயசான
காலத்துல சண்டை போட்டுட்டு எந்த அம்மா வீட்டுக்கு போவாள்?பார்த்துக்கலாம்.
அடுத்த நாள் காலை,ஒரு சீரிய முடிவெடுத்தேன்.வேலையேதும் இல்லாமல்
இருப்பதனால் தான் இவ்வளவு கற்பனைகள்.நமக்கு நாமே வேலையை உருவாக்கி
கொள்ள வேண்டியது தான்.என்ன வேலை செய்வது?
ஆ!கதை,கவிதையென நமது அடையாளத்தை இலக்கிய உலகில் பதிக்க முற்பட
வேண்டியது தான்.ஓகே.ஓகே.புரிகிறது.கொஞ்சம் ஓவர் தான்.
அந்த அளவிற்கு இல்லையெனினும் எனது கல்லூரிக் காலங்களில் பல
பத்திரிகைகளில் கவிதைகளும் கதைகளும் எழுதியிருக்கேன்.அட! நம்புங்கள்
சார்.சத்தியமாக ஒரு கதை சிறந்த பரிசு கூட வாங்கியிருக்கிறது.
சட்டென நேற்று வாசித்த கல்கி இதழில் வெளியாகியிருந்த போட்டிக்கான அறிவிப்பு
நினைவில் வந்தது.கதை எழுதுவது என முடிவெடுத்துவிட்டோம்.அதை எழுதி
வெட்டியாக வீட்டில் வைத்திருப்பதை விட போட்டிக்கு அனுப்பி பரிசு வந்தால்
தேவலை தானே! என்ன கதை எழுதலாம்?
யோசனையிலே தூங்கிவிட்டேன் போல.எழுந்தபோது மனைவி மாலையில் வழக்கம்
போல கொடுக்கும் காபி டம்ளருடன் முன்நின்றாள்.
(2)
“என்ன தான் செய்றாருன்னு புரியல்லடி.திடீர்ன்னு கத்துறார்.எதையெதையோ
எழுதறாரு.ஒழுங்கா சாப்பிடறதும் இல்ல,என்ன ஆச்சுன்னும் தெரியல!”ஓய்வு பெற்ற
ஆசிரியரின் எப்போதுமான தோரணையில் என் மனைவி மகளுடன் பேசிக்
கொண்டிருந்தது தெரிந்தது.
இன்று ஐந்தாவது நாள் சூரிய உதயத்தை புதுவீட்டிலிருந்து காண்கிறேன்.மனைவி
காலை பத்து மணிக்கே சந்தைக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள்.வருவதற்கு இரண்டு
மணியாயிடும் என்றும் உணவை முன்கூட்டியே சமைத்து அடுப்பின் அருகே
வைத்துள்ளதாகவும் நேரத்திற்கு சாப்பிடுமாறும் கூறிவிட்டு சென்றாள்.
காலை உணவை முடித்ததும் தலைப்புச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“அய்யா...”
நீண்டு ஒலித்த குரல்.அறை முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.
தொலைக்காட்சியிலிருந்து வந்த சத்தமோ? இவ்வளவு சத்தமாக கேட்காதே.சரியென
ரிமோட்டை எடுத்து டிவியை அணைத்தேன்.மீண்டும் அதே குரல்.
“அய்யா...”
அந்த குரலின் நடுக்கத்திலிருந்து மீள சில மணித்துளிகள் பிடித்தது.மீண்டும்
மூன்றாவது முறையாக அதே குரல்.
“அய்யா...”
இம்முறை அது ஒற்றை வார்த்தையுடன் முடிந்து விடாமல் தொடர்வதற்கான ஆயத்தப்
பணிகளை மேற்கொண்டது.
“அய்யா,எம் பேரு சுப்பிரமணிங்க.பயப்பட வேணாம் அய்யா.உங்களை ஒன்னும்
செய்யமாட்டேன்”,குரலில் தோன்றிய தளர்ச்சி வயதாகியிருந்ததை உணர்த்தியது.
“சரி.நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.இப்ப எங்கிருக்க? வெளிய வா”,அவன்
குரலில் தோன்றிய பணிவு என் அதிகாரத்தைக் கூட்டியது.
“அய்யா,நான் யார் கண்ணுக்கும் தெரியமாட்டேங்க.”
“யார் கண்ணுக்கும் தெரிய மாட்டினா நீ...நீ...”சற்று பயத்துடனே.
“ஆமாங்க, அய்யா. நான் பேய் தான். நான் செத்து மூணு வருஷமாச்சுங்க.”
‘அய்யோ!’ பதினைந்து வருட பள்ளி வாழ்க்கை, ஐந்து வருட கல்லூரி படிப்பு,நாற்பது
வருடத்திற்கும் மேலான நகர வாழ்க்கை இவையெல்லாம் எனக்குப் போதித்த
அனைத்தும் ஒரு வார்த்தையில் சுக்குநூறாகிவிட்டது.எனில் பேய் என்பது உண்மை
தானா?
ஒரு விதமான நடுக்கத்துடனே,
“இங்க ஏன் வந்த?”
“அய்யா,நீங்க தான் என் இடத்துக்கு வந்திருக்கீங்க.”
மேலும் அவன் தொடர்ந்தான்.
”நான் ஒரு விவசாயிங்க.பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே
தொழில் விவசாயம் தாங்க.கம்பு,ராகி,சோளம் இப்படி நாட்டு பயிர்கள மாத்தி மாத்தி
போட்டு விவசாயம் செய்வோமுங்க.நிலத்துக்கு பக்கத்துல கிணறு இருந்ததால
எந்தக்குறையும் இல்லாம விளைச்சல் வந்ததுங்க.அத வித்து எங்க வயிறு
முட்டறளவுக்கு கஞ்சிய குடிச்சுக்கிட்டு நானும் என் பொஞ்சாதியும் என்னோட மவனும்
சந்தோசமா இருந்து வந்தோங்க.எப்போ நாட்டு விதைகள விட்டுட்டு, கால்சராய்
போட்டுக்கிட்டு ஜீப்ல வந்த அதிகாரிங்க பேச்சை நம்பி கம்பெனி விதைகள
போட்டோமோ அப்பவே அழிவு தொடங்கிருச்சு.அந்த விதைகளினால செலவு
அதிகமாயிடுச்சுங்க.பிறகு கிணத்துல தண்ணீ வத்தி போச்சு.மழையும் பொய்த்துப்
போனதால, நாங்க வளர்த்து வந்த நாட்டுப் பசுவையும் விற்க வேண்டியாத
ஆச்சுங்க.நாட்டுப் பசு இல்லாததால இயற்கை உரமும் போட முடியாம மனசே
இல்லாமா தாங்க செயற்கை உரத்த போட்டேன்.அதுவும் ரொம்ப நாள்
தாங்கலேங்க,மண்ணும் மலடா போனதால விவசாயத்தையே விட்டுட்டேன்.கஞ்சிக்
குடிக்க கூட காசு இல்லாததால நிலத்தை அடகு வச்சு கடன் வாங்கினேனுங்க.பக்கத்து
நிலத்துக்காரங்க அவங்க நிலத்தை எல்லாம் வித்துட்டாங்க.எனக்கு நிலத்த விக்க மனசு
வல்லேங்க”,தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டே கூறுவது போல் பட்டது.
“ அப்ப தான் பக்கத்து நிலத்த எல்லாம் வாங்கின ரியல் எஸ்டேட் காரங்க
வந்தாங்க.நிலத்த அடிமாட்டு விலைக்கு கேட்டாங்க.நான் கொடுக்க முடியாதுன்னு
சொல்லிட்டேன்.மிரட்டி கூட பார்த்தாங்க நான் பணியல.ஆனா வறுமை எங்கள விடற
மாதிரி தெரியல.பேங்க் வட்டி,நிலத்தோட வட்டி என வட்டி மேல வட்டி கட்டுறதுக்கே
நான் போன வேலையோட முந்நூறு ரூவா சம்பளம் சரியா போச்சு.இதுல எங்கங்க
கஞ்சி காய்ச்சி குடிக்க காசு?”குபீரென பெருத்த ஓசையுடன் வெளிப்பட்ட அவர்
அழுகுரல் என் கண்ணிலும் நீரைக் கசிய வைத்தது.
“அதனால குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி கிணத்துல
குதிச்சுட்டோம்ங்க.அப்புறம் பண்ணையார் இந்த நிலத்த ரியல்எஸ்டேட்க்கு
வித்துட்டாரு போல”,அழுது அழுது வலுவிழந்த குரலுடன் பேசி முடித்த சுப்பிரமணி
மீதான கருணை அதிகரிப்பதை உணர முடிந்தது.
இப்படி அவரைப் போல எல்லா விவசாயிகளும் தற்கொலை பண்ணிட்டா அடுத்த
வேளை உணவுக்கு இச்சமூகம் என்ன செய்யும்?
உழவு,உழவர்,உழுதலின் சிறப்பு என திருவள்ளுவர் வேலை மெனக்கெட்டு அவ்வளவு
எழுதி வைக்கக் காரணமென்ன?
பணம்,பணம்...என்ற பணத்திற்கான போட்டியில் இது போன்ற எத்தனை
சுப்பிரமணிகளின் தற்கொலைக்கு நாம் காரணமாக இருந்திருக்கிறோம்?
இது ஒரு விவசாயியின் அழிவாக கருத முடியாது.ஒட்டு மொத்த சமூகத்தின்
அழிவுக்கான நுழைவாயில்! ஆக்கம், அறிவியல், தொழில்நுட்பம் என்ற பெயரால் நமது
வளங்களை மொத்தமாக சீர்குலைத்தும்,சுரண்டியும் ஒன்னும் இல்லாமல்
ஆக்கிவிட்டோம்.
சுப்பிரமணி அவர் கதை முழுதையும் என்னிடம் சொல்வதற்கான காரணத்தைக் கேட்ட
போது, ”ஏதாவது செய்யணுங்க, அய்யா. அப்பவாவது இந்த உலகம் புரிஞ்சு
நடக்குதானு பார்க்கணுங்க.அது தான் என் ஆசை”,அவரின் வார்த்தைகளில் வலியும்
வேதனையும் தனக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நேரக் கூடாது என்ற
நல்லெண்ணமும் வெளிப்பட்டு நிற்பதை உணர முடிந்தது.
இதனை உங்களிடம் சொல்வதற்கான ஒரு வடிவமே இக்கதை.
இவ்வுலகம் முழுவதையும் சுடுகாடாக்கி விட்டு நீங்களும் நானும் வெறும் அச்சடித்த
காகிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?