எழுத்துகாம் - எனது நூறாவது கவிதை

கடந்த ஆண்டு டிசம்பர் 2 அன்று எதேச்சையாக வலைதள தேடல்களின் இடையில் எழுத்து.காம் தளத்தை காண நேரிட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த தளத்தில் படைப்புக்களை வாசிப்பதும் எழுதுவதும் எனது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல நண்பர்களை எனக்கு பெற்றுத் தந்ததும் இந்தத் தளம்தான். எனது நூறாவது கவிதையை எனது அன்புக் காணிக்கையாக இந்தத் தளத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.
******************************************************************************************************************************************

எழுத்து தளமே !.

எழுத்து தாகத்தால்
எங்கெங்கோ திரிந்த நாங்கள்
படைப்பு ஊற்றுக்கள் பீறிட்டுக் கிடக்கும்
இந்த பாலைவனச் சோலைக்குள்
நுழைந்தது எதேச்சையாகத்தான்..

காதலையும்
அழகியலையும்
வாழ்வியலையும்
எழுத்தில் வடிக்கத்
துடித்த அவசரத்தில்
நிலவைக் காண்பித்து
அமுதூட்டிய தமிழ்த் தாயின்
புடவைத் தலைப்பால் முகம் துடைத்த
குழந்தைகளாய் விளையாடியதும்
இந்த முற்றத்தில்தான்...

உலகின்
வெவ்வேறு மூலைகளில்
சிதறிக் கிடக்கும் பலரையும்
நண்பர்களாய் மாற்றிய
மகிமையைச் செய்த
இந்த தளத்தில்-
கருத்து மோதல்களும்
சிலசமயம் நடந்ததுண்டு...

இருப்பினும் -
பொங்கலுக்கு கரும்புகளையும்
தீபாவளிக்கு மத்தாப்புக்களையும்
ரம்ஜானுக்கு கீர்குர்மாவையும்
கிறிஸ்துமசுக்கு முந்திரி கேக்குகளையும்
படைப்புக்களாய் பரிமாறி
கொண்டதும் இங்குதான்..

என்னைப் போன்ற
எழுத்து மழலைகள்
விளையாடி விட்டுப் போன
பதிவுகள் இறைந்து கிடக்கின்றன
உன் முற்றத்தில்..

எத்தனையோ
தமிழ் தளங்கள்
வலைகளில் நிரம்பியிருக்கலாம்..
படைப்பாளிகளாய்
பரிணமிக்கத் துடிக்கும்
எழுத்தாளப் பைதல்களை
தயங்காமல் வரவேற்று
கைப் பிடித்து உயர்த்திவிட
மூத்த தமிழ் பிதாமகன்கள்
இங்கேதான் காத்திருக்கிறார்கள்..

வாருங்கள்
இளம் படைப்பாளிகளே !
குருதட்சிணை எதிர்பார்க்காத
இந்த குருகுலத்தின்
வாயில் திறந்தேதான் கிடக்கிறது !

எழுதியவர் : ஜி ராஜன் (30-Aug-15, 12:38 pm)
பார்வை : 239

மேலே